2015-16ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் விளக்கக் கூட்டம்
March 9, 2015
உயர் நிலை ஆலோசனைக் குழுவை ஏற்படுத்த வேண்டுகோள்
March 19, 2015

சேவை அறியும் உரிமைச் சட்டத்தை இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டுகோள்

Tamil-Daily-News-Paper_89890253544பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் நோக்கத்துடன் மத்திய அரசு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, கல்வி உரிமைச் சட்டம் 2009, தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதிச் சட்டம் 2005 போன்ற சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்தி வருகிறது. அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் மத்திய அரசின் இத்தகைய சட்டங்களின் நோக்கத்தைப் பின்பற்றி மாநில அரசுகள் அளித்திடும் பல்வேறு சேவைகளில் வெளிப்படையான தன்மையையும், நேர்மையையும் அதிகாரிகள் மற்றும் இதர அலுவலகர்களின் பொறுப்பையும் உறுதி செய்யும் நோக்கத்துடன் சேவை பெறும் உரிமைச் சட்டம் (Right to Public Services Act) மத்திய பிரதேசம், பீகார், டில்லி, பஞ்சாப், உத்திரப் பிரதேசம், ஜார்கண்ட், கேரளா, கர்நாடகம் போன்ற பல்வேறு மாநிலங்களில் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இச்சட்டங்கள் மாநில அரசுகள் அளித்திடும் பல்வேறு சேவைகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பொதுமக்கள் பெறுவதற்கும் சேவையை அளிக்க வேண்டிய அரசு அலுவலர்கள் அதில் தவறும்போது அவர்கள் தண்டிக்கப்படவும் வழி வகுக்கின்றது. பிறப்புச் சான்றிதழ், வாக்குரிமை அட்டை, குடிமைப் பொருள்கள் வழங்கல் அட்டை, நில ஆவணங்களின் பிரதிகள் போன்ற பல்வேறு அரசுத் துறை சேவைகள் இச்சட்டத்திற்கு உட்படுகின்றன.

கர்நாடகா மாநிலத்தில் பொதுமக்களுக்கான சேவை உறுதிச் சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள “சகாலா” திட்டத்தின்படி அதன் இணையதளத்தின் மூலம் பொதுமக்கள் சேவை குறித்த தங்களின் மனுக்களின் நிலையை உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம். அத்துடன் சேவை அளிப்பதில் காலதாமதம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அரசு அலுவலருக்கு நாளொன்றுக்கு ரூ. 20 வீதம் அதிகபட்சம் ரூ. 500 வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தாங்கள் விண்ணப்பித்த சேவையின் முன்னேற்றம் குறித்து தகவலை அவர்களுக்கு கைபேசியில் குறுந்தகவல் மூலம் அவ்வப்போது தெரிவிக்கப்படும்.
தமிழகத்தில் பெரும்பாலான அரசுத் துறை சேவைகளைப் பெறுவதில் பொதுமக்கள் கால தாமதத்தையும், நேர்மையற்ற போக்கினையும், அக்கறையற்ற தன்மையினையும் சந்தித்து வரும் நிலையில் சேவை அறியும் உரிமைச் சட்டம் இதுவரை இயற்றப்படாமல் இருப்பது வருந்தத்தக்கது. இதர மாநிலங்களில் போல் தமிழகத்திலும் சேவை அறியும் உரிமைச் சட்டத்தை உடனடியாக இயற்றி நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டியது மிகவும் அவசியம்.