குடியரசு தின சிறப்புரை
January 26, 2015
சிறு தொழில்களுக்கு குறைந்த வட்டியில் வங்கிக் கடன் அளிக்க கோரிக்கை
February 9, 2015

மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சரை சந்தித்த நமது குழு

Chamberதமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் சங்கத்தின் தலைவர் திரு N.ஜெகதீசன், முதுநிலை தலைவர் திரு S. இரத்தினவேல் ஆகியோர் அடங்கிய தூதுக்குழு புதுடில்லி சென்று இன்று மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சர் திருமதி ஹர்சிம்ரம்ட் கவுர் பாதல் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடலுக்குப் பின்னர் தங்களது கோரிக்கைகளை மடல் மூலமாக அளித்தனர். கோரிக்கைகளை கவனமுடன் கேட்டறிந்த அமைச்சர் அவற்றை பரிசீலித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

1. உணவுப் பதப்படுத்தும் தொழிலுக்கு அளிக்கப்படும் முதலீட்டு மானியத்திற்கான
உச்ச வரம்பு உயர்த்தப்பட வேண்டும்.

உணவுப் பதப்படுத்தும் தொழிலுக்கு மத்திய அரசு தற்போது முதலீட்டு மானியமாக 25 சதவீதம் வழங்குகிறது. ஆனால் இந்த மானியத்திற்கான உச்ச வரம்பு ரூ. 50 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரூ. 2 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்படும் சிறு தொழில்களுக்கு உரிய மானியம் கிடைப்பதில்லை. சிறு தொழிலுக்கான முதலீட்டு வரம்பு ரூ. 5 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் உணவுப் பதப்படுத்தும் தொழிலுக்கு அளிக்கப்படும். மானியத்திற்கான உச்ச வரம்பு ரூ. 1 கோடியாக உயர்த்த வேண்டும்.

2. மதிப்புக் கூட்டப்பெற்ற பொருட்களை தொடர்ச்சியாக ஒருங்கிணைந்து தயாரிக்கும் (Value Change Integration) தொழிலகங்களுக்கு 50 சதவிகித முதலீட்டு மானியம் வழங்கப்பட வேண்டும்.

உணவுப் பதனீட்டுத் தொழிலில் ஒரு குறிப்பிட்ட பொருளை தயாரிப்பவர் அந்தப் பொருளை தயாரிப்பதற்கான மூலப்பொருளை சேதாரம் இல்லாமல் பாதுகாப்பாக வைப்பதற்குத் தேவையான கட்டமைப்புகளுக்கு முதலீடு செய்வதிலிருந்து தன்னுடைய முதன்மை தயாரிப்புப் பொருளிலிருந்து (Primary Processed Food) மேலும் மதிப்புக் கூட்டப்பெற்ற பொருட்களை தொடர்ச்சியாக ஒருங்கிணைந்து தயாரிப்பதற்கு (Value Change Integration)உற்சாகப்படுத்தப்பட வேண்டும். எனவே முதன்மைப் பொருளை தயாரிப்பதற்கு முதலீட்டு மானியம் 25 சதவிகிதம் என்றால் அதிலிருந்து அதே ஆலையில் மதிப்புக்கூட்டப் பெற்ற பொருளை தயாரித்தால் அதற்கு முதலீட்டு மானியம் 50 சதவிகிதம் வழங்கப்பட வேண்டும்.

உதாரணமாக, கோதுமையிலிருந்து கோதுமை மாவு தயாரிக்கும் ஆலைக்கு 25 சதவீதம் மானியம் என்றால் அந்த ஆலையே கோதுமை மாவிலிருந்து நூடுல்ஸ் போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும்போது அதற்கு 50 சதவீத முதலீட்டு மானியம் அளிக்கப்பட வேண்டும். “உழவு முதல் நுகர்வு வரை” (Farm to Fork) மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் தொழிற்கூடங்கள் தான் பல ஆண்டுகள் தொடர்ச்சியாக வெற்றிகரமாக செயல்பட்டு வரும். எனவே அத்தகைய தொழிற்கூடங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

அவ்வாறு உற்சாகப்படுத்தினால் நிறைய தொழிலகங்கள் மதிப்புக் கூட்டப்பெற்ற பொருட்களை தயாரிக்கும். இதன் மூலம் வேளாண் உணவுப் பொருட்கள் விரைவாக சேதமடைவது பெருமளவில் தவிர்க்கப்படும். இளைஞர்களும் இத்தொழிலில் ஆர்வமுடன் ஈடுபடுவர்; உணவு பதப்படுத்தும் தொழிலும் நன்கு வளர்ச்சி பெறும்.

3. உணவுப்பதப்படுத்தும் தொழிலகங்களுக்கு கலால் வரி மற்றும் வருமான வரிச் சலுகைகள் அளிக்கப்பட வேண்டும்.

உணவுப் பதப்படுத்தும் தொழிலை நன்கு ஊக்குவிக்க அத்தொழிலுக்கு கலால் வரி விலக்கு மற்றும் வருமான வரிச் சலுகை அல்லது முதல் ஐந்தாண்டுகளுக்கு வருமான வரி விலக்கோ வழங்கப்பட வேண்டும்.

4. பயறு, பருப்பு மற்று உணவு எண்ணெய்க்கான ஏற்றுமதி தடை நீக்கப்பட வேண்டும்.

வறுகடலை, பருப்பு வகைகள் மற்றும் உணவு எண்ணெய் போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை விதிப்பது உணவுப் பதப்படுத்தும் தொழிலைப் பாதிப்பதுடன் விவசாயிகளுக்கு தங்கள் உற்பத்திப் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதற்கும் தடையாக உள்ளது. பல்வேறு வேளாண் மூலப் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு நம் நாட்டில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றப்பட்டு பின் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவற்றின் ஏற்றுமதிக்கு தடைவிதிப்பது உணவு பதனீட்டுத் தொழிலை வெகுவாகப் பாதிக்கும். எனவே மேற்கண்ட பொருட்களுக்கு ஏற்றுமதி தடை விதிக்கக் கூடாது.

5. உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்; உரிமம் எடுக்கும் சட்ட விதி ரத்து செய்யப்பட வேண்டும்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஆகியவற்றில் காணப்படும் பல்வேறு முரண்பாடுகள், கடைப்பிடிக்க முடியாத நடைமுறைகள், தொழில்நுட்ப விடுதல்களுக்குக் கூட மிகக் கடுமையான தண்டனைகள் போன்றவை மறுபரிசீலனை செய்து தேவையான திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னரே அச்சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். திருத்தங்கள் குறித்து ஆலோசித்து முடிவு செய்ய நாட்டிலுள்ள முக்கிய தொழில் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளடக்கிய ஒரு உயர் நிலை ஆலோசனைக் குழுவை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். அத்துடன் உணவுப் பொருட்களில் வணிகம் செய்வோர் உரிமம் பெற வேண்டும் என்ற சட்ட விதி லஞ்ச லாவண்யத்தையும், இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியத்தையுமே வளர்க்கும். எனவே உரிமம் எடுக்கும் முறையை ரத்து செய்துவிட்டு நிறுவனங்கள் பதிவு செய்துகொண்டால் மட்டும் போதுமானது என அறிவிக்க வேண்டும்.