மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சரை சந்தித்த நமது குழு
February 5, 2015
இரயில்வே பட்ஜெட்டிற்கான விரிவான முன் ஆலோசனை
February 9, 2015

சிறு தொழில்களுக்கு குறைந்த வட்டியில் வங்கிக் கடன் அளிக்க கோரிக்கை

TNC001தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் சங்கத்தின் தலைவர் திரு N.ஜெகதீசன், முதுநிலைதலைவர் திரு S.இரத்தினவேல் ஆகியோர் அடங்கிய தூதுக்குழு புதுடில்லி சென்று 06.02.2015 அன்று மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் திரு கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்து கலந்துரையாடலுக்குப் பின்னர் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மடலை அளித்தனர்.

1. சிறு தொழில் முதலீட்டு வரம்பும் கலால் வரி விலக்கு வரம்பும் உயர்த்தப்பட வேண்டும்:

நம் நாட்டில் வேளாண்மைக்கு அடுத்து அதிகமான அளவில் வேலை வாய்ப்பினை அளித்திடும் சிறு தொழில்கள் தற்போது நிதிப் பற்றாக்குறை உலகத் தாக்கத்திற்கு ஏற்ப தங்கள் உற்பத்திப் பொருட்களின் தரத்தை உயர்த்த இயலாமை உள்பட பல்வேறு சிரமங்களுக்கு இடையே செயல்பட்டு வருகின்றன. எனவே சிறு தொழிலுக்கான முதலீட்டு வரம்பு ரூ. 5 கோடியிலிருந்து ரூ. 10 கோடியாகவும், நடுத்தர தொழிலுக்கான முதலீட்டு வரம்பு ரூ. 10 கோடியிலிருந்து ரூ. 20 கோடியாகவும் உயர்த்தப்பட வேண்டும்.

பொருட்களின் தற்கால விலையேற்றத்திற்கு ஏற்பவும், பெரும் தொழில்களுடன் போட்டியிட்டு விற்பனை செய்வதற்கான திறனை அதிகரிக்கவும், சிறுதொழில்களுக்கான கலால் வரி விலக்கு வரம்பு தற்போதுள்ள ரூ. 1.5 கோடியிலிருந்து ரூ. 3 கோடியாகவும். கலால் வரி சலுகை பெறுவதற்கான முந்தைய ஆண்டு விற்றுமுதல் தொகை வரம்பு ரூ. 4 கோடியிலிருந்து ரூ. 10 கோடியாகவும் அதிகரிக்கப்பட வேண்டும்.

2. சிறுதொழில்களுக்கு முதல் ஐந்தாண்டுகளுக்கு வருமான வரி விலக்கு அல்லது சலுகை அளித்திட வேண்டும்:

நாடு முழுவதும் மேலும் அதிக அளவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துவங்கப்படுவதை ஊக்குவிக்க புதிதாக துவங்கப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு முதல் ஐந்தாண்டுகளுக்கு வருமான வரி விலக்கு அல்லது சலுகை அளிக்கப்பட வேண்டும். நம் நாட்டின் அபரிமிதமான வளர்ச்சிக்கு வாய்ப்பு உள்ள சிறுதொழில்களில் ஒன்றான உணவுப் பதப்படுத்தும் தொழிலுக்கு அத்தகைய வரிச் சலுகை அளிப்பது வேளாண் உற்பத்தியை பெருக்கவும், உற்பத்திப் பொருட்கள் வீணாவதை தடுத்திடவும் பெருமளவு உதவும்.

3. சிறு தொழில்களுக்கு குறைந்த வட்டியில் வங்கிக் கடன்:

நிதி பற்றாக்குறையினால் சிறு தொழில்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. வங்கிகளும் மற்ற அரசுத் துறை நிதி நிறுவனங்களும், அடிப்படை கடன் வட்டி விகிதத்திலிருந்து (Prime Lending Rate)) 2 சதவிகிதம் குறைவான வட்டி விகிதத்தில் சிறு தொழில்களுக்கு கடன் வழங்கச் செய்திட வேண்டும்.

4. உரிமங்கள் பெற ஒற்றை சாளர வசதி:

சிறு தொழில்கள் துவங்கிட மத்திய மாநில அரசுகளின் பல்வேறு துறைகளிடமிருந்து உரிமங்களும், அனுமதிகளும் பெற வேண்டியுள்ளது. இதனால் தொழில் துவங்குவதற்கு நீண்ட காலதாமதத்தை அதிக மனித உழைப்பையும் சிறுதொழில் துவங்க முனைவோர் செலவழிக்க வேண்டியுள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண சிறு தொழில்கள் அரசுத் துறைகளிடமிருந்து உரிமங்கள் மற்றும் அனுமதிகளைப் பெற ஒற்றைச் சாளர வசதி (Single Window Facility) ஏற்படுத்தப்பட வேண்டும்.

5. தொழிலாளர் சட்டங்கள் ஒருங்கிணைப்பு:

மத்திய மாநில அரசுகள் விதிக்கும் பல்வேறு மறைமுக வரிச் சட்டங்களை ஒருங்கிணைத்து ஒரே வரியாக சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதுபோல சிறு தொழில்களுக்கான பல்வேறு தொழிலாளர் சட்டங்களை கூடுமானவரை ஒரே சட்டமாக ஒருங்கிணைத்து அச்சட்டங்களின்படி சிறுதொழில் நிறுவனங்கள் ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டிய பல்வேறு படிவங்களை சமர்ப்பிப்பதில் சந்தித்து வரும் கால விரயத்தையும், மனித உழைப்பையும் குறைத்திட மத்திய அரசு பரிசீலிக்க வேண்டியது அவசியம். தொழிலாளர் சட்டங்களில் தொழில்நுட்ப விடுதல்களுக்குக்கூட (Technical Errors) கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளதை மறுபரிசீலனை செய்து தேவையான மாற்றங்களைச் செய்திட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் பிரதிநிதிகள் அடங்கிய உயர்நிலைக் குழு ஒன்றை மத்திய அரசு நியமனம் செய்திட வேண்டும்.