தமிழக தொழிலதிபர்களுக்கு, வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு
January 29, 2016

மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட முதல் விமானத்தில் நமது சங்க குழுவினர் பயணம்

மதுரையில் இருந்து புதுதில்லி மற்றும் சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவையை ஏர் இந்தியா விமான நிறுவனம் செப்டம்பர் 15ம் தேதி வெள்ளிக்கிழமை தொடக்கியது.

மதுரை விமான நிலையத்தில் இருந்து இலங்கை, துபை ஆகிய வெளிநாடுகளுக்கும், சென்னை, மும்பை உள்ளிட்ட உள்நாட்டு சேவைகளும் இயங்கி வருகின்றன. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் மலேசியா, சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் சிங்கப்பூர், மலேசியா செல்ல வேண்டுமானால் திருச்சி விமான நிலையத்தில் இருந்து செல்ல வேண்டும். மதுரையில் இருந்து செல்ல வேண்டுமானால் இலங்கை வழியாக மலேசியா, சிங்கப்பூர் செல்ல வேண்டும்.

பயண கால அறிவிப்புகள்

இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் மதுரையில் இருந்து புதுதில்லிக்கும், சிங்கப்பூருக்கும் நேரடி விமான சேவையை வெள்ளிக்கிழமை முதல் துவக்கியுள்ளது. புதுதில்லியில் இருந்து மதியம் 1.50 மணிக்கும் புறப்படும் விமானம் மாலை 5.05 மணிக்கு மதுரை வந்தடையும். பின்பு இரவு 11.15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, காலை 6.15 மணிக்கு சிங்கப்பூர் சென்றடையும்.
பின்பு மறுமார்க்கமாக அதே விமானம் சிங்கப்பூரில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்பட்டு பகல் 12.25 மணிக்கு மதுரை வந்தடையும். பின்பு மதுரையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு புதுதில்லி சென்றடையும்.

புதுதில்லியில் இருந்து மதுரை வந்து சிங்கப்பூருக்கு ஞாயிறு, திங்கள், புதன் வெள்ளி ஆகிய கிழமைகளிலும், சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு ஞாயிறு, திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளிலும் விமான சேவை இயக்கப்பட உள்ளது.

விமான போக்குவரத்தில் மைல்கல்

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதுரை சிங்கப்பூர் விமான சேவையை குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் கூறியது: மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு விமான சேவை என்பது விமான போக்குவரத்தில் மதுரைக்கு ஒரு மைல் கல்லாக விளங்கும். இங்கிருந்து மேலும் பல நாடுகளுக்கு விமான போக்குவரத்து விரிவுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் வி.வி.ராஜன்செல்லப்பா, விமான நிலைய இயக்குநர் எம்.என்.ஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க குழு முதல் விமானத்தில் பயணம்

மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்ட முதல் விமானத்தில் நமது தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க குழுவினர் பயணம் செய்தனர்.

நமது சங்கத்தின் முதுநிலைத் தலைவர் எஸ்.ரத்தினவேல், தலைவர் என்.ஜெகதீசன் ஆகியோர் தலைமையில் 25 பேர் கொண்ட குழு முதல் விமானத்தில் புறப்பட்டுச் சென்றனர். இதுகுறித்து முதுநிலைத் தலைவர் எஸ்.ரத்தினவேல் கூறியது: இந்தியா – சிங்கப்பூர் இடையிலான வர்த்தகம் 2019-2020-க்குள் 2500 கோடி அமெரிக்க டாலர்கள் அளவுக்கு உயரும் என இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு கணித்துள்ளது. இந்தியாவில் 2016 மார்ச் வரை சிங்கப்பூரின் நேரடி முதலீடு 45.89 பில்லியன் டாலராகவும், சிங்கப்பூரில் இந்தியாவின் முதலீடு 5.27 பில்லியன் டாலராகவும் உள்ளது.

சிங்கப்பூர் உடனான வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் பெரும் பகுதியை ஈர்த்திட தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் விரும்புகிறது. இந்த பயணத்தின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் வர்த்தக சங்க உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், சிங்கப்பூர் வர்த்தக சங்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது என்றார்.