உயர் நிலை ஆலோசனைக் குழுவை ஏற்படுத்த வேண்டுகோள்
March 19, 2015
டிஜிட் ஆல் அமைப்பை தொடங்கி வைத்தார் கலாம்
July 20, 2015

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 90-வது ஆண்டு நிறைவு விழா மற்றும் DIGIT-ALL அமைப்பு துவக்க விழா

Kalamதொழில் வர்த்தகத் துறையினருக்கு சேவை செய்வதற்காக 1924-ம் ஆண்டு “மதுரை இராமநாதபுரம் வர்த்தக சங்கம்” (Madurai – Ramnad Chamber of Commerce) இந்திய கம்பெனிகள் சட்டப்படி 24 உறுப்பினர்களுடன் பதிவு செய்யப்பட்டது. சங்கத்தின் சேவை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டதன் காரணமாக 1987-ம் ஆண்டு சங்கத்தின் பெயர் “தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம்” என மாற்றம் செய்யப்பட்டது. தொழில் வணிகப் பெருமக்களுக்கும், சேவைத் துறையினருக்கும், பொது மக்களுக்கும் அளித்து வந்த அரிய சேவைகளின் காரணமாக சங்கத்தின் புகழும் மதிப்பும் பல மடங்கு பெருகியதன் காரணமாக இன்று தமிழகமெங்கும் உள்ள 5600 உறுப்பினர்கள் மற்றும் 300-க்கும் அதிகமான இணைப்புச் சங்கங்களுடன் இந்தியாவிலேயே அங்கத்தினர் எண்ணிக்கையில் முதன்மையான சங்கமாக, தமிழகத்தில் வலிமை மிக்க சங்கமாக தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வளர்ச்சி பெற்றுள்ளது.

தொழில் வணிகத் துறையினருக்கு ஏற்படும் வரிப்பிரச்சனைகள், இதர குறைகள் குறித்து உடனுக்குடன் மத்திய மாநில அரசுகளுக்கு ஆணித்தரமான முறையீடுகளைச் சமர்ப்பித்து தக்க நிவாரணங்கள் பெறுதல், தொழில் வணிக வளர்ச்சிக்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும் தேவையான முக்கிய கட்டமைப்புகளை குறிப்பாக தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியுள்ள தென் தமிழகத்தில் ஏற்படச் செய்தல், மத்திய மற்றும் மாநில அரசுகள் வரிச் சட்டங்களில் செய்திடும் மாறுதல்கள், தொழில் வணிகத் துறையினர் சம்பந்தமான இதர அறிவிப்புகள் குறித்து சுற்றறிக்கைகள் மூலம் உறுப்பினர்களுக்கு தெரிவிப்பது, மத்திய மாநில அரசுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் விரிவான பட்ஜெட் முன் ஆலோசனை மனுக்களையும், பட்ஜெட்டுக்குப் பின் தயாரிக்கப்படும் கோரிக்கை மனுக்களையும் நேரிடையாக புதுடில்லி மற்றும் சென்னை சென்று சமர்ப்பித்தல், அரசு பட்ஜெட்டுக்கள், சட்டங்கள், கொள்கை அறிவிப்புகள் போன்றவற்றை ஆராய்ந்து சங்கத்தின் கருத்துக்களை பத்திரிகைச் செய்திகள் மூலம் அறிவிப்பது, தொழில் வணிகத் துறையினர் அறிந்துகொள்ள வேண்டிய அரிய செய்திகள் மற்றும் குறிப்புகளுடன் சங்கத்தின் மாத இதழான “வணிக இதழை” வெளியிடுதல், பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான உத்திகளை அங்கத்தினர்கள் கற்றுக் கொள்ளும் வகையில் கருத்தரங்குகள், பிரமாண்டமான “தொழில் வர்த்தகப் பொருட்காட்சி“ நடத்துதல் போன்றவை சங்கத்தின் ஆக்கபூர்வமான பணிகள் மற்றும் சேவைகளில் குறிப்பிடத்தக்கவை. இத்தகைய சேவைகளைப் பெற தமிழகம் முழுவதிலுமிருந்து தொழில் வணிகத் துறையினர் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தினை அணுகுகின்றனர் என்பதை பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறோம்.

தென் தமிழகத்திற்குத் தேவையான பல முக்கிய கட்டமைப்புகளை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் பெற்றுத் தந்துள்ளது. குறிப்பாக மதுரையில் விமான நிலையம் ஏற்படுத்தப்படவும், விமான நிலையம் அதி நவீன புதிய முனையக் கட்டிடத்துடன் விரிவாக்கப்படவும், கொழும்பு மற்றும் துபாய்க்கு பன்னாட்டு விமான சேவை துவங்கப்படவும், கரூர்-மதுரை-தூத்துக்குடி அகல இரயில் பாதைத் திட்டம் நிறைவேறவும், மதுரையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை மற்றும் பாஸ்போர்ட் அலுவலகம் துவக்கப்படவும் தூத்துக்குடி துறைமுகம் விரிவாக்கப்படவும், தமிழகத்தின் தொழில், பொருளாதார வளர்ச்சிக்கும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தீவிர முயற்சிகள் முக்கிய காரணமாகும்.

சங்கத்தின் சார்பில் பல்வேறு வெளிநாடுகளுக்கு வர்த்தகத் தூதுக்குழுவை அனுப்பி வைத்து இருவழி வர்த்தகம் மற்றும் தொழில் முதலீட்டினை அதிகரிக்கச் செய்வது சங்கத்தின் சிறப்பான பணிகளில் ஒன்று. சங்கத்தின் வர்த்தகத் தூதுக்குழு இதுவரை இலங்கை, மாலத் தீவுகள், சீனா, ஹாங்காங், மொரிசியஸ், தென்னாப்பிரிக்கா, துபாய், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சென்று வந்துள்ளது.

சமூகத்தில் உள்ள பல்வேறு துறையினருக்கு பயனளிக்கும் வகையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க ஒத்துழைப்புடன் தமிழ்நாடு சேம்பர் அறக்கட்டளை கீழ்கண்ட எட்டு அமைப்புகளை சிறப்பாக நடத்தி வருகிறது. இளம் தொழில் முனைவோருக்கு, போட்டிகள் நிறைந்த, தற்கால தொழில் துறையில் வெற்றிகரமாக செயல்படத் தேவையான அனைத்துப் பயிற்சிகளையும், வழிகாட்டுதல்களையும் அளித்திட இளம் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் (Young
Entrepreneur School – YES), சில்லரை வணிகர்களை ஊக்குவிக்கவும், பயிற்சி அளிக்கவும், தொகுப்புத் தொழில் திட்டங்களை அமலாக்கவும் வர்த்தக மேம்பாட்டு மையம் (Business Promotion Centre- BPC), தொழில் முனையும் மகளிர் மேம்பாட்டுக்கான பயிற்சிகள் அளிக்க ஓர் மையம்
(Women Entrepreneur – WE), மாணவ மாணவியரின் மென் ஆற்றல்களை வளர்த்திட ஓர் அமைப்பு (SHARP), வணிகர்களுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் தங்கள் பொருட்களை பன்னாட்டுச் சந்தைகளில் விற்று ஏற்றுமதியாளர்களாக்கும் ஏற்றுமதி மேம்பாட்டு மையம் (Export Promotion
Centre – EPC), இயற்கை வளங்களைப் பாதுகாத்திட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த எதிர்கால பாதுகாப்பிற்கு வளங்களைப் பாதுகாப்போம் (Save to be Saved) என்ற அமைப்பு, தென் தமிழகத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்த்திட டூரிஸ்ட் (TOUR-i-ST-Tour in Southern Tamilnadu) என்ற அமைப்பு மற்றும் வர்த்தக பிணக்குகளுக்கு விரைவான தீர்ப்பைப் பெற்றிட வர்த்தக சங்க இசைவுத் தீர்ப்பாயம் (Chamber Arbitration Tribunal – ChaAT).

1951-ம் ஆண்டு வெள்ளி விழாவையும் (25-ம் ஆண்டு விழா) 1975-ம் ஆண்டு பொன் விழாவையும் (50-ம் ஆண்டு விழா), 1985-ம் ஆண்டு வைர விழாவையும் (60-ம் ஆண்டு விழா), 1999-ம் ஆண்டு பவள விழாவையும் (75-ம் ஆண்டு விழா), 2005-ம் ஆண்டு முத்து விழாவையும் (80-ம் ஆண்டு விழா) கொண்டாடிய தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வருகிற 18.07.2015-ம் நாள் சனிக்கிழமை
தனது 90-ம் ஆண்டு நிறைவு விழாவை சிறப்பாகக் கொண்டாடுகிறது.

மேதகு முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் A.P.J அப்துல் கலாம் அவர்கள் விழாவின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இசைந்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

பொதுமக்கள், குடும்பப் பெண்கள், சிறு வணிகர்கள், சுயதொழில் புரிவோர், கிராமப்புற மக்கள், முதியோர் மற்றும் இளைஞர்கள் என அனைத்துப் பிரிவினருக்கும் இணையதள பயன்பாடு, ஆன்லைன் செயல்பாடுகள், செயலி (Apps), இணையதள வணிகம், மின்னணு ஆளுமை, சமூக
வலைத்தளங்கள் போன்ற எண்ணியம் (Digitalization) குறித்த அடிப்படை பயிற்சிகளை அளித்து Digital India திட்டத்தில் தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டதாக யாரும் கருதிவிடக் கூடாது
என்ற உயரிய நோக்கத்துடன் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் அடுத்த அமைப்பான DIGIT-ALL (எண்ணியம் எல்லார்க்கும்) என்ற அமைப்பினையும் மேதகு முன்னாள் குடியரசுத் தலைவர் துவக்கி வைக்கிறார்.