மதுரைக்கு அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அரசுக்கு பரிந்துரைக்குமாறு வேண்டுகோள்
March 2, 2015
2015-16ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் விளக்கக் கூட்டம்
March 9, 2015

வட்டி விகித குறைப்பு, பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்குவிப்பு

RBIரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) 0.25 சதவீதம் குறைத்துள்ளது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

இந்த ஆண்டு இரண்டாவது முறையாக ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகளுக்கு தான் வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) மேலும் 0.25 சதவீதம் குறைத்துள்ளது வெகுவாக வரவேற்கத்தக்கது. ரிசர்வ் வங்கியின் இந்த வட்டிக் குறைப்பினால் வங்கிகள் வழங்கும் தொழில் வணிகத் துறையினருக்கான வங்கிக்கடன் வட்டி விகிதங்கள் மட்டுமன்றி வீட்டுக்கடன், வாகனக்கடன் ஆகியவற்றிற்கான வட்டி விகிதங்களும் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாண்டு மத்திய பட்ஜெட்டில் நாட்டின் நிதி நிலையைப் பலப்படுத்தவும் (Fiscal Consolidation) 2016 ஜனவரி மாதத்திற்குள் பணவீக்கத்தை 6 சதவீதத்திற்கு குறைவாக கொண்டுவரவும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என மத்திய நிதி அமைச்சர் திரு அருண் ஜெட்லி தெரிவித்துள்ள உறுதிப்பாட்டிற்கும் பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் “குழு உணர்வுடன் கூடிய இந்தியா” (Team India), “திறன்மிகு இந்தியா” (The Skill India) மற்றும் “இந்தியாவில் தயாரியுங்கள்” (Make In India) ஆகிய தொலைநோக்கு திட்டங்களின்படி நாட்டில் தொழில் திறனையும், உற்பத்தியையும் கணிசமாக அதிகரித்திட ரிசர்வ் வங்கியின் இந்த வட்டிக் குறைப்பு நிச்சயம் உதவிடும்.

உலக அளவில் வளர்ச்சி அடைந்த மற்றும் வளர்ச்சி அடைந்து வரும் பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருப்பது பன்னாட்டுச் சந்தைகளில் நமது உற்பத்திப் பொருட்கள் நன்கு போட்டியிட இயலாமைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் 0.25 சதவீத வங்கிக் கடன் வட்டி குறைப்பு தொழில் வணிகத் துறைக்கு வங்கிகள் அளித்திடும் கடன்களுக்கான வட்டி குறைக்கப்படவும், தொழில் துறை உற்பத்தி பெருகிடவும், ஏற்றுமதி அதிகரிக்கவும் வழி வகுக்கும் என்பது உறுதி.

ரிசர்வ் வங்கியின் இந்த ஊக்குவிப்பு நடவடிக்கையுடன் தொழில் துறையினர் தொடர்ந்து சந்தித்து வரும் உற்பத்தி மற்றும் போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு, கட்டமைப்பு வசதி குறைபாடு, மின் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகளைத் தீர்த்திட மத்திய / மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை உடனடியாக எடுத்திட வேண்டும். இதனால் தொழில் முதலீடுகள் கணிசமாக அதிகரிக்கவும், வணிக நடவடிக்கைகள் பெருகவும் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் இரட்டை இலக்கத்தை எட்டவும் வாய்ப்பு ஏற்படும்.