சிறு தொழில்களுக்கு குறைந்த வட்டியில் வங்கிக் கடன் அளிக்க கோரிக்கை
February 9, 2015
மண்டல அளவிலான இரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினராக (ZRUCC) நமது சங்கத் தலைவர் திரு N. ஜெகதீசன் தேர்வு
February 12, 2015

இரயில்வே பட்ஜெட்டிற்கான விரிவான முன் ஆலோசனை

TNC002தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் சங்கத்தின் தலைவர் திரு N. ஜெகதீசன், முதுநிலை தலைவர் திரு S.இரத்தினவேல் ஆகியோர் அடங்கிய தூதுக்குழு புதுடில்லி சென்று 05.02.2015 அன்று மத்திய இரயில்வேத் துறை அமைச்சர் திரு சுரேஷ் பிரபு அவர்களை சந்தித்து கலந்துரையாடலுக்குப் பின்னர் 2015-2016-ம் ஆண்டு இரயில்வே பட்ஜெட்டிற்கான விரிவான முன் ஆலோசனை மனுவை சமர்ப்பித்தனர்.

1. கன்னியாகுமரி – மதுரை-சென்னை இரட்டை அகல இரயில் பாதைத் திட்டம் முழுமையாக விரைவில் நிறைவேறச் செய்திட வேண்டும்:

கன்னியாகுமரி-மதுரை-சென்னை மார்க்கத்தில் பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து மற்ற மார்க்கங்களை விட அதிகமான அளவு தென்னக இரயில்வேக்கு வருமானம் கிடைக்கிறது. இருப்பினும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக இம்மார்க்கத்தில் உள்ள ஒற்றை அகல இரயில் பாதையின் மூலம்
கூடுதலாக இரயில்களை அறிமுகப்படுத்த இயலவில்லை. எனவே கன்னியாகுமரி மதுரை- சென்னை இரட்டை இரயில் பாதைத் திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்னர் துவக்கப்பட்டது.

இத்திட்டத்தில் சென்னை-செங்கல்பட்டு மற்றும் மதுரை-திண்டுக்கல் பிரிவுகளில் திட்டப் பணி பூர்த்தி அடைந்துவிட்டது. செங்கல்பட்டு-விழுப்புரம் இடையே பணிகள் ஓரளவு நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள விழுப்புரம்-திண்டுக்கல் மற்றும் மதுரை கன்னியாகுமரி பிரிவுகளில் பணிகள் தேவையான நிதி ஒதுக்கீட்டுடன் துரிதப்படுத்தப்பட வேண்டும். திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டால்தான் மிக அத்தியாவசியமான இந்த இரட்டை அகல பாதை திட்டத்திற்காக இதுவரை செலவழிக்கப்பட்ட தொகையின் பயனைப் பெற முடியும். எனவே 2015-2016-ம் ஆண்டு இரயில்வே பட்ஜெட்டில் இத்திட்டம் பூர்த்திபெற தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

2. மதுரை-போடிநாயக்கனூர் வழித்தடத்தை அகல இரயில் பாதையாக மாற்றும் திட்டம் மற்றும் திண்டுக்கல்-கோட்டையம் இடையே போடிநாயக்கனூர், கம்பம், குமுழி வழியாக அகல இரயில் பாதை இடும் திட்டம் துரிதப்படுத்தப்பட வேண்டும்:

2009-2010-ம் ஆண்டிற்கான இரயில்வே பட்ஜெட்டில் மதுரை-போடிநாயக்கனூர் இடையே மீட்டர்கேஜ் பாதையை அகல இரயில் பாதையாக மாற்றும் திட்டம் ரூ. 150 கோடி மதிப்பீட்டுடன் அறிவிக்கப்பட்டு மீட்டர் கேஜ் பாதை மூடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ. 240 கோடி அளவிற்கு வேளாண் உற்பத்திப் பொருட்களும் பிற சரக்குகளும் இப்பகுதிகளில் இருந்தும் பிற பகுதிகளுக்கும் சாலைப் போக்குவரத்து மூலம் அனுப்பப்படுகின்றன. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் இப்போக்குவரத்தில் பெரும் பகுதி இரயில் மூலம் நடைபெறும். பயணிகள் போக்குவரத்து மூலம் மட்டும் சுமார் ரூ. 700 கோடி அளவு இரயில்வேக்கு வருமானம் கிடைக்கும்.

திண்டுக்கல்-கோட்டையம் இடையே திண்டுக்கல்-தேனி-போடிநாயக்கனூர்-கம்பம் மற்றும் குமுழி வழியாக ரூ. 473.89 கோடி மதிப்பீட்டில் 123 கி.மீ நீளம் உள்ள அகல இரயில்பாதை இடும் திட்டத்திற்கு இரயில்வே நிர்வாகம் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படுவதின் மூலம் நாட்டின் இரு முக்கிய துறைமுக நகரங்களான தூத்துக்குடிக்கும் மற்றும் கொச்சினுக்கும் இடையே நேரடியான இரயில் தொடர்பு ஏற்படும். தமிழகத்திற்கும் குறிப்பாக தென் தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் இடையே சரக்குப் போக்குவரத்து அதிகரித்து தொழில் வணிகம் பெருகும். சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பயன்பெறுவர்.

மத்திய அரசு போடிநாயக்கனூர் அருகே தேவாரத்தில் ரூ. 1,500 கோடி மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. எனவே 2015-2016-ம் ஆண்டு இரயில்வே பட்ஜெட்டில் இத்திட்டங்களுக்கு கணிசமான நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் அவை நிறைவேறிடச் செய்திட வேண்டும்.

3. செங்கோட்டை-புனலூர் இடையே அகல இரயில்பாதையாக பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்:

விருதுநகர்-தென்காசி-செங்கோட்டை புனலூர் வழித்தடத்தை அகல இரயில் பாதையாக மாற்றும் திட்டம் 1997-98-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு மீட்டர் கேஜ் பாதை மூடப்பட்டது. ஆனால் இத்திட்டத்தில் செங்கோட்டை-புனலூர் இடையே அகல இரயில்பாதையாக மாற்றும் பணி நீண்ட காலமாக தாமதப்பட்டு வருகிறது. இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்ட பின்னர் கேரளாவிலிருந்து வட மாநில நகரங்களுக்கு புனலூர்-தென்காசி மற்றும் மதுரை வழியாக இரயில்கள் அறிமுகப்படுத்துவது சாத்தியமாகும். கேரளாவில் இருந்து மேற்குப்பாதை வழியாக செல்வதைவிட இப்பாதையில் பயண தூரமும், நேரமும் கணிசமாகக் குறையும். எனவே 2015-16-ம் ஆண்டு இரயில்வே பட்ஜெட்டில் தேவையான நிதி ஒதுக்கீடு செய்து திட்டம் நிறைவேறுவது துரிதப்படுத்த வேண்டும்.

4. பொள்ளாச்சி-பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி-போத்தனூர் வழித்தடங்களை அகல இரயில் பாதையாக மாற்றும் திட்டம் விரைவுபடுத்தப்பட வேண்டும்:

தமிழகத்தின் இரு முக்கிய நகரங்களான மதுரை மற்றும் கோயம்புத்தூர் இடையே தற்போது நேரடி இரயில் தொடர்பு இல்லை. பழனி-பொள்ளாச்சி இடையே அகல இரயில் பாதையாக மாற்றும் திட்டம் சமீபத்தில் நிறைவுபெற்றது. மீதமுள்ள பொள்ளாச்சி-பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி-போத்தனூர் இடையே அகல இரயில்பாதையாக மாற்றும் திட்டம் இவ்வாண்டு இரயில்வே பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் நிறைவேறச் செய்து மதுரைக்கும் கோயம்புத்தூருக்கும் இடையே நேரடி இரயில் வசதி மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

5. மதுரை-மேலூர்-காரைக்குடி புதிய அகல இரயில் பாதைத் திட்டம்:

மதுரையிலிருந்து மேலூர், திருப்பத்தூர் வழியாக காரைக்குடி வரை புதிய அகல இரயில்பாதை இடும் திட்டம் 2008-ம் ஆண்டு இரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. தொழில்நுட்ப ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பல ஆண்டுகள் கழிந்த பின்னரும் திட்டப்பணிகள் எதுவும் இதுவரை துவக்கப்படவில்லை. 2015- 2016-ம் ஆண்டு இரயில்வே பட்ஜெட்டில் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டப்பணிகள் துவக்கப்பட்டு விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும்.

6. மதுரை-அருப்புக்கோட்டை-தூத்துக்குடி புதிய அகல இரயில் பாதைத் திட்டம்:

2011-2012-ம் ஆண்டிற்கான இரயில்வே பட்ஜெட்டில் மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு அருப்புக்கோட்டை வழியாக புதிய அகல இரயில் பாதை இடும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இப்புதிய இரயில்பாதை அமைக்கப்படுவது சென்னை-மதுரை தூத்துக்குடி வழித்தடத்தில் தற்போதுள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடவும், தூத்துக்குடி துறைமுகத்திற்கு நிறைய சரக்கு இரயில்கள் செல்வதற்கும், தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டில் மிகவும் பின் தங்கி உள்ள அருப்புக்கோட்டை பகுதிகளில் தொழில் பொருளாதார வளர்ச்சி உத்வேகம் பெறவும் பெரிதும் உதவும்.
எனவே 2015-2016-ம் ஆண்டு இரயில்வே பட்ஜெட்டில் தேவையான நிதி ஒதுக்கீடு செய்து திட்டப்பணிகள் விரைவாக துவங்கி நிறைவு பெறச் செய்திட வேண்டும்.

7. மதுரை-பெங்களூரு இடையே நேரடி விரைவு இரயில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்:

தற்போது தூத்துக்குடிக்கும், மைசூருக்கும் இடையே மதுரை மற்றும் பெங்களூரு வழியாக ஓடிக் கொண்டிருக்கும் விரைவு இரயில் பயணிகள் போக்குவரத்து மிக அதிகமாக உள்ளது. எனவே மதுரைக்கும் பெங்களூருக்கும் இடையே இரவு நேர விரைவு இரயில் ஒன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

8. கன்னியாகுமரி-ஹைதராபாத் இடையே மதுரை, திருவண்ணாமலை, திருப்பதி வழியாக விரைவு இரயில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்:

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள ஏராளமான பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு கன்னியாகுமரிக்கும், ஹைதராபாத்துக்கும் இடையே மதுரை, திருச்சி, திருவண்ணாமலை மற்றும் திருப்பதி வழியாக ஒரு தினசரி விரைவு இரயில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

9. சென்னை-மானாமதுரை சிலம்பு விரைவு இரயில் சென்னை-செங்கோட்டை நிரந்தர விரைவு இரயிலாக இயக்கப்பட வேண்டும்:

சென்னை- மானாமதுரை சிலம்பு விரைவு இரயில் செங்கோட்டை நிரந்தர விரைவு இரயிலாக இயக்கப்பட வேண்டும். திருத்தங்கல், சிவகாசி, ராஜபாளைம் மற்றும் தென்காசி பகுதியிலுள்ள மக்கள் அருப்புக்கோட்டை, மானாமதுரை வழியாக சென்னை செல்வதற்கு இந்த இரயில் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.