மத்திய அரசின் நேர்முக வரி குறித்த சலுகைக்கு நமது சங்கம் வரவேற்பு
December 8, 2014
“சரக்கு மற்றும் சேவை வரி” அமலாக்கத் தேதியை அறிவித்துள்ள மத்திய நிதி அமைச்சருக்கு நன்றி
December 23, 2014

மதுரை விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு சரக்குப் போக்குவரத்தை உடனடியாக துவக்க கோரிக்கை

Seethaமத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்களை மதுரையில் இன்று சங்க நிர்வாகிகள் சந்தித்து கலந்துரையாடல் நடத்தி கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இன்று (13.12.2014) மதுரைக்கு வருகை புரிந்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் முக்கியமான தொழில் வர்த்தக அமைப்புகளின் நிர்வாகிகளுடன் நடத்திய கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் தலைவர் திரு N.ஜெகதீசன், முதுநிலை தலைவர் திரு S. இரத்தினவேல் ஆகியோர் கலந்துகொண்டு கட்டமைப்பு வசதிகள் குறைபாடு காரணமாக தென் தமிழகத்தில் தொழில் வளர்ச்சியும், ஏற்றுமதியும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காண்பித்து கீழ்கண்ட கட்டமைப்புகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினர். அவற்றை கவனமுடன் கேட்டு விவாதித்த அமைச்சர் இக்கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தார்:

1) வெளிநாட்டு விமான நிறுவனங்களும் மதுரை விமான நிலையத்திற்கு நேரடியாக விமானச் சேவையைத் துவக்க மதுரை விமான நிலையத்தை மற்ற நாடுகளுடனான இருதரப்பு விமான நிலைய ஒப்பந்தங்களில் விரைவில் சேர்க்கப்பட வேண்டும்

மதுரை விமான நிலையம் இலங்கையைத் தவிர மற்ற எந்த நாட்டுடனும் நம் நாடு செய்து கொண்டுள்ள விமான நிலைய சேவை இருதரப்பு ஒப்பந்தங்களில் சேர்க்கப்படாத காரணத்தால் இலங்கை (கொழும்பு) தவிர வேறு எந்த நாட்டிலிருந்தும் மதுரைக்கு நேரடியாக அந்நாட்டு விமான நிறுவனங்கள் சேவையைத் துவக்க முடியவில்லை. மதுரை மற்றும் இதர தென் மாவட்டங்களில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், மத்திய கிழக்கு நாடுகளுக்கும் அங்கிருந்து மதுரைக்கும் சுற்றுலாப் பயணிகள், தொழில் வர்த்தகத் துறையினர், பணியாட்கள், அந்நாடுகளில் குடியிருக்கும் தமிழர்கள் போன்றோர் அதிக அளவில் தினசரி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பயணிகள் தற்போது இதர விமான நிலையங்கள் மூலம் பயணம் மேற்கொள்வதால் கூடுதலான கட்டணத்தையும், பயண நேரத்தையும் சந்திக்க வேண்டியுள்ளது. நம் நாட்டில் உள்ள விமான நிறுவனங்கள் இந்தச் சேவையை வழங்க முன்வராதபோது வெளிநாடுகளில் உள்ள விமான நிறுவனங்கள் மதுரைக்கு நேரடியாக விமானச் சேவையைத் துவக்க விருப்பம் தெரிவித்துள்ளபோதும் முந்தைய மத்திய அரசு அதற்கான அனுமதியை அளிக்க மறுத்துவிட்டது. இதனால் தென் தமிழகத்தில் தொழில் வணிக வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்கள் மதுரைக்கு நேரடி விமான சேவையைத் துவக்கிட வசதியாக நம் நாடு மேற்கண்ட நாடுகளுடன் செய்து கொண்டுள்ள இருவழி விமான நிலைய சேவை ஒப்பந்தங்களில் மதுரை விமான நிலையத்தை உடனடியாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இதன் மூலம் பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அறிவித்துள்ள “இந்தியாவில் தயாரிப்பு செய்யுங்கள்” என்ற திட்டத்தின் கீடிந தென் தமிழகத்திற்கு நிறைய அந்நிய நேரடி தொழில் முதலீடுகள் வருவதற்கு நல்ல வாய்ப்புகள் ஏற்படும்.

2. மதுரை விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு சரக்குப் போக்குவரத்தை உடனடியாக துவக்க வேண்டும்

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் காரணமாக மத்திய அரசு மதுரை விமான நிலையத்தை சரக்கு விமான நிலையமாக 2013 மே மாதம் 28-ம் நாள் அறிவித்தது. ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் ஏற்றுமதி இறக்குமதி சரக்குகளை கையாளும் பணி துவக்கப்படவில்லை. மதுரை உள்ளிட்ட தென் தமிழகத்திலிருந்து ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் (மாதம் சுமார் 10 டன்கள்), கைத்தறி மற்றும் பின்னலாடைகள் (மாதம் சுமார் 3 டன்கள்), பசுமையான காய்கறிகள் மற்றும் பழங்கள் (தினசரி சுமார் 2 முதல் 5 டன்கள்), மலர்கள் (தினசரி சுமார் 3 டன்) மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் போன்றவை திருவனந்தபுரம், கொச்சின், திருச்சி மற்றும் சென்னை விமான நிலையங்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

பிற விமான நிலையங்களுக்குச் செல்வதால் அதிக அளவில் பொருட் செலவும், நீண்ட பயண நேரமும் ஏற்படுகிறது. அத்துடன் விமானங்களில் சரக்கு ஏற்ற முடியாத சூழ்நிலைகளில் திருப்பிக் கொண்டு வரப்படும் காய்கறி, பழங்கள் ஆகியவை கெட்டுப் போய் வீணாகின்றன.

எனவே, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் மதுரை விமான நிலையத்திலிருந்து சர்வதேச சரக்கு போக்குவரத்தை உடனடியாக துவக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்த வேண்டும்.

3. மதுரையில் பொருள் பாதுகாப்பு கதிரியக்க மையம் (Irradiation Plant) உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும்

இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் ரூபாய் 50 ஆயிரம் கோடி மதிப்புள்ள உணவுத் தானியங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் வீணாவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே வேளாண்மைப் பொருட்களும், உணவுப் பொருட்களும் அதிக அளவில் உற்பத்தியாகின்ற தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அவற்றை நீண்டகாலம் பாதுகாத்து கெடாமல் வைத்திருக்க கதிரியக்க மையம் மதுரையில் ஏற்படுத்தப்பட வேண்டும். ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி பூச்சிகளை அழிப்பதைவிட கதிரியக்க முறையில் பூச்சிகளை அழிப்பது சுற்றுச் சூழலுக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பானது. அத்துடன் நீண்ட காலம் பொருட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும். மேலும் கதிரியக்க முறையில் மருத்துவப் பொருட்களையும் சுத்திகரிப்பு (Sterilization) செய்ய முடியும். இதன் காரணமாக இப்பகுதியில் தயாரிக்கப்படும் உணவுப் பதனீட்டுப் பொருட்களையும், மருத்துவப் பொருட்களையும் வெளிநாடுகளுக்கு நிறைய ஏற்றுமதி செய்ய முடியும்.

இம்மையத்தினை பொதுத் துறை மற்றும் தனியார் கூட்டுப் பங்களிப்பு முறையிலும் ஏற்படுத்தலாம். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் இதற்கான முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக உள்ளது.

4. சிவகங்கை அருகில் அமைக்கப்பட்டுள்ள வாசனை திரவியங்களுக்கான தொழிற்பூங்கா (Spices Park) உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும்

மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வாசனை திரவியங்கள் வாரியம் (Spices Board) சிவகங்கை மாவட்டத்தில் முத்துப்பட்டியில் ரூ. 20 கோடி முதலீட்டில் 30 ஹெக்டேர் நிலப்பரப்பில் அதி நவின இயந்திரங்களுடன் மஞ்சள், மிளகாய், வத்தல் போன்ற வாசனை திரவியங்களை பதப்படுத்துவதற்காக மையம் ஒன்றினை அமைத்துள்ளது. இப்பொருட்களில் ஈடுபட்டுள்ள தொழில் வர்த்தகத் துறையினர் இவ்வசதிகளை பயன்படுத்த ஆவலாக உள்ளனர். ஆனால் மேற்கண்ட மையத்தில் இயந்திரங்கள் பல்வேறு காரணங்களினால் இதுவரை இயக்கப்படாமல் உள்ளன. இன்னும் பல மாதங்கள் இயக்கப்படாவிட்டால் பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ள இவ்வியந்திரங்கள் துருப்பிடித்து பழுதடையும் சூழ்நிலை ஏற்படும். மையத்தின் செயல்பாடுகள் துவங்கப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதன் காரணமாக அம்மையத்தினால் ஏற்படக் கூடிய பயன்கள் கிடைக்கப்பெறாமல் இப்பகுதியில் உள்ள மஞ்சள் மற்றும் மிளகாய்,வத்தல் பதப்படுத்தும் தொழில் வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இயந்திரங்களை உடனடியாக இயக்கி அம்மையத்தின் செயல்பாடுகள் துரிதமாக துவக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பொதுத் துறை மற்றும் தனியார் கூட்டு பங்களிப்பு முறையிலும் இம்மையத்தின் செயல்பாடுகளைத் துவக்கலாம். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் இதற்கான முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்புத் தர தயாராக உள்ளது.

5. மதுரையில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய கருத்தரங்கு மற்றும் பொருட்காட்சி அரங்கம் அமைக்கப்பட வேண்டும்

தொழில் வளர்ச்சியில் பின் தங்கியுள்ள தென் மாவட்டங்களில் அதனை ஊக்குவிக்க இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை அனைவரும் அறிந்திடச் செய்யவும், நுகர்வோர் தொழில் வணிக நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கிடையே நேரடி சந்தைத் தொடர்பு ஏற்படுத்திடவும் வசதியாக சென்னையிலுள்ள சென்னை வர்த்தக மையம் (Chennai Trade Centre) மற்றும் கோவையிலுள்ள கோவை மாவட்ட சிறு தொழில் சங்கத்தின் வர்த்தகப் பொருட்காட்சி வளாகம் (CODDISSIA Trade Fair Complex) போன்று அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய கருத்தரங்கு மற்றும் பொருட்காட்சி அரங்கங்கள் (Trade and Convension Centre) மதுரையில் அமைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம். அத்தகைய கட்டமைப்பின் மூலம் ஆண்டு முழுவதும் தொழில் வணிகப் பொருட்காட்சிகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், தொழில் வணிக மாநாடுகள் போன்றவற்றை நடத்திட முடியும்.

இப்பகுதியில் தொழில் வணிகம் பெருகவும், ஏற்றுமதி அதிகரிக்கவும் வாய்ப்பு ஏற்படும். எனவே பொதுத் துறை மற்றும் தனியார் கூட்டு பங்கீட்டு முறையில் அத்தகைய கட்டமைப்பு ஒன்றினை மதுரையில் ஏற்படுத்திட மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான முயற்சிகளுக்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் முழு ஒத்துழைப்பு நல்கிடும்.

கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்டு மேற்கண்ட பொருட்கள் குறித்து கேட்டறிந்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் (தனிபொறுப்பு) திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் கோரிக்கைகள் குறித்து விரைவில் தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.