தமிழகத்தில் மின் கட்டணத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க தமிழக அரசிற்கு வேண்டுகோள்
December 2, 2014
மதுரை விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு சரக்குப் போக்குவரத்தை உடனடியாக துவக்க கோரிக்கை
December 13, 2014

மத்திய அரசின் நேர்முக வரி குறித்த சலுகைக்கு நமது சங்கம் வரவேற்பு

downloadசெலுத்த வேண்டிய வரி குறித்த சட்டப்பூர்வமான முன் தீர்ப்பு பெறும் வசதி உள்நாட்டிலுள்ள நேர்முக வரி செலுத்துவோருக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

செலுத்த வேண்டிய நேர்முக வரி குறித்த சட்டப்பூர்வமான முன் தீர்ப்பு மூலம் விளக்கம் பெற்றுக் கொள்ளும் வசதியை (Advance Ruling Facility) இப்பொழுது மத்திய நேர்முக வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes) வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு (NRI) மட்டுமே அளித்து வருகிறது. இனி உள்நாட்டில் உள்ள வரி செலுத்துவோருக்கும் இந்த வசதி கிடைக்கும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. செலுத்த வேண்டிய வரி குறித்து சரியான விளக்கம் முதலில் கிடைக்காமல் பின்னர் பெரும் தொகையை வரியாகச் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் பொழுது தொழில் வணிகத் துறையினர் பாதிக்கப்படுவதோடு நீதிமன்றங்களை நாடி நியாயம் பெற பல ஆண்டுகள் ஆகின்றன; நிறையச் செலவும் ஏற்படுகிறது. அதைத் தவிர்ப்பதற்காகத்தான் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த முற்போக்கான வசதி உள்நாட்டில் வரி செலுத்துவோருக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளதால் உள்நாட்டில் உள்ள நேர்முக வரி செலுத்துவோருக்கு தாங்கள் செலுத்த வேண்டிய வரி குறித்து எந்த சந்தேகமும், அச்சமும் இல்லாமல் தொழில் வணிக நடவடிக்கைகளில் முழுமையான கவனத்தைச் செலுத்த முடியும். இதனால் தொழில் வணிகம் வளர்ச்சி அடையும்.

ஆனால், வணிக நடவடிக்கைகளின் மொத்த மதிப்பு ரூ.100 கோடி அல்லது அதற்கு மேல் இருந்தால் மட்டுமே உள்நாட்டு வரி செலுத்துவோர் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று அறிவித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. இவ்வசதியை பயன்படுத்திக் கொள்வதற்காக வணிக நடவடிக்கைகளின் மதிப்பு வரம்பை மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது இச்சலுகையின் பயன் தேவையானவர்களுக்குக் கிடைக்காமல் போய்விடும்.

வரி தாவாக்களையும், அதற்கான செலவுகளையும் குறைக்க நேர்முக வரிப்பளு குறித்து முன்னதாகவே தெளிவு கிடைக்க வேண்டியது பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்ல; முக்கியமான சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கும் கிடைக்க வேண்டும்.

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு இவ்வசதி எந்த வணிக மதிப்பு வரம்பும் இல்லாமல் கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, செலுத்த வேண்டிய நேர்முக வரி குறித்து சட்டப்பூர்வமான முன் தீர்ப்பு மூலம் விளக்கம் பெறும் வசதியை உள்நாட்டு வரி செலுத்துவோருக்கும் எந்த வணிக மதிப்பு வரம்பும் இல்லாமல் வழங்க வேண்டியது மிக அவசியமாகும்.