மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை ஏற்படுத்தப்பட மத்திய அரசு ஒப்புதல் அளித்தமைக்கு வரவேற்பு
October 22, 2014
மத்திய அரசின் நேர்முக வரி குறித்த சலுகைக்கு நமது சங்கம் வரவேற்பு
December 8, 2014

தமிழகத்தில் மின் கட்டணத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க தமிழக அரசிற்கு வேண்டுகோள்

Elecதமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வர்த்தக இணைப்புகளுக்கான மின் கட்டணத்தை யூனிட்டுக்கு ரூ.7 – லிருந்து ரூ.8.05 ஆக 15 சதவீதமும் தொழில் இணைப்புகளுக்கு யூனிட்டுக்கு ரூ.5.50 லிருந்து ரூ.7.22 ஆக 31 சதவீதமும் மற்றும் நிலையான கட்டணங்களையும் உயர்த்த அறிவிப்பு வெளியிட்டிருப்பது தொழிற்சாலைகளின் உற்பத்தி செலவையும் உற்பத்தி பொருட்களின் விலையையும் கணிசமாக அதிகரிக்கும். அத்துடன் நம் மாநில தொழில் நிறுவனங்கள், குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அண்டை மாநிலங்களில் உள்ள தொழில் நிறுவனங்களுடன் போட்டியிட்டு சந்தைப்படுத்தும் திறனை மேலும் குறைந்திடச் செய்யும்.

சென்ற இரண்டு ஆண்டுகளாக அடிக்கடி செய்யப்பட்ட மின்தடை காரணமாக தங்களுடைய உற்பத்தியை குறைத்துக்கொண்ட அல்லது முற்றிலும் நிறுத்திவிட்ட சிறு தொழில் துறையினர் சமீபத்தில் சீரான மின் விநியோகம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் நம்பிக்கையோடு தங்கள் உற்பத்தியை அதிகரித்துள்ள சூழலில் உத்தேச மின் கட்டண உயர்வு மீண்டும் அவர்களை உற்சாகம் இழக்கச் செய்துள்ளது.

நம் மாநிலத்தில் உள்ள உயர் மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கு மின் வெட்டும் அறிவிக்கப்படாத மின் தடையும் மீண்டும் அமலாக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் இந்த கடுமையான மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பது தொழில் துறையினரின் சிரமங்களை மேலும் அதிகரிக்கும். பிற மாநிலங்களில் குறிப்பாக அண்டை மாநிலங்கள் மின் கட்டணம் குறைவாக இருப்பதன் காரணமாக நம் மாநிலத்திலிருந்து தொழில்களும், தொழில் முதலீடுகளும் அந்த மாநிலங்களுக்கு சென்றுவிடும் சூழல் உருவாகி வருகிறது.

புதிய ஆந்திர பிரதேசத்தின் முதல்வர் தன் மாநிலத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து வசதிகளையும் அளித்து அவர்களை கவரத்தக்க மாநிலமாக மாற்றவும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அம்மாநிலத்தில் வர்த்தக உபயோகத்திற்கான மின் கட்டணம் அதிகபட்சம் யூனிட்டுக்கு ரூ.5.40 ஆகவும் குறைந்த அழுத்த மின் இணைப்பு பெற்ற தொழில்களுக்கான மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.6.08 ஆகவும் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பெங்களூருவில் உள்ள குறைந்த மின் அழுத்த மின் இணைப்புப் பெற்ற தொழில்களுக்கு அதிகபட்சம் யூனிட்டுக்கு ரூ.5.45 ஆகவும் மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள அத்தகைய தொழில் நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.5.25 ஆகவும் மட்டுமே உள்ளது.

பாரத பிரதமரின் “இந்தியாவில் தயார் செய்யுங்கள்” (Make in India) என்ற வேண்டுகோள் முழுமையாக வெற்றி பெற தொழில் முதலீட்டாளர்களுக்கு மின்சாரம் கட்டுப்படியான கட்டணத்தில் கிடைக்க செய்திட வேண்டும். பிரதமரின் அறைக்கூவலை தொடர்ந்து வெளிநாடு முதலீடுகள் இந்தியாவிற்கு வரத்துவங்கியுள்ள சூழலில் இவ்வாறான முதலீடுகளை நம் மாநிலத்திற்கு கவர்ந்து இழுக்க வர்த்தகம் மற்றும் தொழில் துறைக்கு மின்கட்டணத்தை குறைக்க முடியாவிட்டாலும் தற்போதுள்ள மின் கட்டணத்தையாவது தொடர வேண்டும். ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி செய்ய வேண்டிய சூழலில் அதற்கு ஏற்படும் கூடுதல் செலவை சரிக்கட்ட மானியம் வழங்கப்பட வேண்டும். மாநிலத்தில் உற்பத்தி துறையை வளர்ச்சி அடைய செய்தால் மட்டுமே நம் மாநிலம் பொருளாதார வலிமை பெறும், மக்களிடையே பணப்புழக்கம் அதிகரித்து அவர்களின் வாங்கும் திறன் மேம்படும்.

எனவே நம் மாநிலத்தின் தொழில் உற்பத்திக்கும் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் ஏற்பட இருக்கும் பாதகமான விளைவுகளை கருத்தில் கொண்டு தமிழக அரசு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு செய்துள்ள மின் கட்டண உயர்வினை உடனடியாக கைவிட வேண்டியது மிகவும் அவசியம்.