தொழிற்சாலைகளுக்கான 20 சதவீத மின் வெட்டு பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும்!
September 24, 2014
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை ஏற்படுத்தப்பட மத்திய அரசு ஒப்புதல் அளித்தமைக்கு வரவேற்பு
October 22, 2014

தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் அறிவித்தமைக்கு மத்திய அரசுக்கு பாராட்டு

தொழிலாளர் சட்டங்களில் உள்ள கடுமையான நிபந்தனைகள், தண்டனைகள், சிக்கலான நடைமுறைகள் போன்றவை காரணமாக தொழில் துறை உற்பத்தியும், வளர்ச்சியும் வெகுவாகப் பாதிக்கப்படுவதோடு தொழில் துறையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் குறைவதைக் கருத்தில் கொண்டு அச்சட்டங்கள், விதிகள் மற்றும் நடைமுறைகளில் தேவையான மாறுதல்களை மேற்கொள்ள வேண்டுமென்று தொழில் துறையினர் கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்திய நியாயமான கோரிக்கை மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டு வந்தது.

இச்சூழ்நிலையில் தொழிலாளர் சட்டங்களில் பல்வேறு சீர்திருத்தங்களையும், நடைமுறை எளிமையாக்கலையும் பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அறிவித்திருப்பதை எங்களது இரு சங்கங்களும் வெகுவாக பாராட்டுகின்றன.
தொழிலகங்களுக்கு தொழிலாளர் அடையாள எண் (Labour Identification Number) ஒதுக்கீடு, தொழில்களை கணினி மூலம் பதிவு செய்து கொள்வது, சிறு மற்றும் தொழில்களுக்கு ஒருங்கிணைந்த ஒரே தொழிலாளர் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான திட்டத்தை பரிசீலிக்க முடிவு செய்திருப்பது, தொழிற்சாலை உரிமையாளர்கள் விபரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டிய 16 மனுக்களுக்குப் பதிலாக ஒரே ஒரு மனுவை பூர்த்தி செய்து இணையதளத்தில் சமர்ப்பித்தால் போதுமானது என்ற அறிவிப்பு, எந்த தொழிற்சாலைக்கு ஆய்வாளர் ஆய்வுக்குச் செல்ல வேண்டும் என்பதை கணினி மூலம் தீர்மானிப்பது அத்துடன் ஆய்வு முடிந்த பின்னர் சம்பந்தப்பட்ட ஆய்வாளர் தனது ஆய்வறிக்கையை 72 மணி நேரத்திற்குள் கணினியில் பதிவேற்ற வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது, குறைகளுக்கு உடனுக்குடன் நிவாரணம் அளிக்க தீர்மானிக்கப்பட்டிருப்பது போன்ற தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு சட்ட மற்றும் நடைமுறைச் சீர்திருத்தங்கள் தொழிலாளர் சட்டங்களுக்கு உட்படுவதையும் இந்தியாவில் தொழில் வர்த்தகம் செய்வதையும் பெருமளவு எளிமையாக்கக் கூடும். இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் தொழிலாளர் துறையில் மிகுதியாக காணப்படும் ஆய்வாளர் ராஜ்யத்தை (Inspector Raj)) வேரறுக்கும் என நம்பலாம்.

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளுக்கு தனித்தனியான பொது கணக்கு எண் (Universal Account Numbers) ஒதுக்கீடு செய்து அவர்கள் தங்கள் கணக்குகள் பற்றிய விபரங்களை எங்கிருந்தாலும் கணினி மூலம்
உடனடியாக அறிந்துகொள்ள வழிவகை செய்திருப்பது, பயிற்சித் தொழிலாளர்களுக்கு (Apprentices) தொழில் நிறுவனங்கள் அளித்திடும் ஊக்கத் தொகையில் 50 சதவீதத்தை இரண்டு ஆண்டுகள் வரை மானியமாக வழங்க முடிவு செய்திருப்பது, ஒழுங்குமுறைப்படுத்தப்படாத (unorganized) தொழிலாளர்களுக்கு ஸ்மார்ட் அடையாள அட்டை (Smart Card) வழங்கும் திட்டம் போன்றவை உற்பத்தியாளர்களுடன் தொழிலாளர்களுக்கும் மகிழ்வு அளிக்கக் கூடிய வகையில் அமைந்திருக்கின்றன.

பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் விரைவில் தொழிலாளர் சட்டங்கள் மற்றும் விதிகளில் உள்ள மீதமுள்ள தடைகளையும், கடைப்பிடிக்க முடியாத நடைமுறைகளையும் நீக்கிட நடவடிக்கை எடுப்பார் என நாட்டிலுள்ள தொழில் துறையினர் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். புதிதாகத் துவங்கப்படும் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் உற்பத்தியிலும், சந்தைப்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்தும் வகையில் முதல் ஐந்தாண்டுகளுக்கு தொழிலாளர் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளில் இருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற எங்களது ஆலோசனையை பிரதமர் அவர்கள் பரிசீலிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.