பின்தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க தமிழக முதல்வர் அறிவித்துள்ள திட்டங்களுக்கு பாராட்டு
July 25, 2014
அமெரிக்காவுடனான இருவழி தொழில் வர்த்தக வாய்ப்புகள் குறித்த கலந்துரையாடல்
August 22, 2014

ஒரு நிறுவனத்தில் மனிதவளத் துறையின் பணிகள் மகத்தானது ! தலைவர் N.ஜெகதீசன்

Jegaதமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கமும், சென்னை தென்னிந்திய தொழில் வர்த்தக சங்கமும் இணைந்து 09.08.2014-ம் நாள் வர்த்தக சங்க மெப்கோ சிற்றவை அரங்கில் “Best Practices in People Managements and Employee Engagement” என்ற தலைப்பில் ஓர் கருத்தரங்கினை நடத்தியது.

கருத்தரங்கிற்கு தலைமையேற்று வரவேற்புரையாற்றிய தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் திரு.N.ஜெகதீசன், ஒரு நிறுவனத்தில் மனிதவளத் துறையின் பணிகள் மகத்தானது என்றார். குறிப்பாக, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு மனிதவள நிறுவனத்தின் ஒற்றைச் சொல் கோஷம் தான் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்ததோடு தேர்தல் முடிவுகளும் ஒரு கட்சிக்கு சாதகமாக அமைந்தது என்று மனிதவளத் துறையின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறினார்.

தென்னிந்திய வர்த்தக சங்கத்தின் இணைச் செயலாளர் திரு வினோத் சாலமன் இக்கருத்தரங்கின் நோக்கம் குறித்து விளக்கம் அளித்தார். இக்கருத்தரங்கில், சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற தென்னிந்திய வர்த்தக சங்கத்தின் மனித வள மேம்பாட்டுத் துறையின் இணைத்தலைவர் திரு R.சாந்தாராம் மற்றும் சென்னை ஸ்கோப் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை முதுநிலை பங்குதாரர் திரு.R.கார்த்திக் ஆகியோர் உரையாற்றியபொழுது, ஒரு நிறுவனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி என்பது, அந்நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சிறப்பான செயல்பாடுகளினால்தான் அமைகிறது என்றனர். ஒரு நிறுவனத்திற்கும் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் ஓர் உறவுப் பாலம் போல் செயல்படுவது அந்த நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறைதான். குறிப்பாக பெரிய நிறுவனங்கள் தங்களது பொறியியலைச் சார்ந்த பணிகளுக்கு பணியாளர்களின் தேவைக்கு பொறியியல் கல்லூரிகளுக்குச் சென்று வளாக நேர்காணல் (Campus Interview) மூலம் தங்கள் பணிக்குப் பொருத்தமான மாணவர்களைத் தேர்வு செய்து வருகின்றனர். அவர்கள்
படிப்பை முடித்துவரும் முன்பாகவே இவர்களது நிறுவனத்தின் முக்கிய செயல்பாடுகள் என்ன என்பதை அவர்களுக்கு உணர்த்தும் வகையில் அவர்களைத் தயார் செய்து விடுகின்றனர்.

ஒரு நிறுவனத்திற்குப் புதிய பணியாளர்களைத் தேர்வு செய்ய அவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்புவதிலிருந்து அவர்களை நேர்காணல் செய்து வேலைக்கு எடுத்துக்கொண்டு, பணியமர்த்துவது வரை முதல் நாள் தொடங்கி 6 மாத காலம் வரை அந்தப் புதிய பணியாளர்களை மிக மரியாதையாகவும், அன்பாகவும், அவர்களது திறமையை அறிந்தும் அதற்கேற்ற பணியை அவர்களுக்கு ஒதுக்குவதிலும், தேவைப்படின் அவர்களுக்கு சிறு பயிற்சி அளித்து பணியை சிறப்பாகச் செய்திட நடவடிக்கை மேற்கொள்வதிலும் அந்நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறைதான் முக்கிய பங்கு வகிக்கிறது. புதிதாக பணியேற்ற பணியாளருக்கு உரிய ஊதியமும், அவர் நலன் மீது தகுந்த அக்கறையும் கொண்டு, ஊக்கமும், உற்சாகமும் அளித்து வழி நடத்தினால் அந்தப் பணியாளர் தமக்கு ஒதுக்கப்பட்ட பணியினை சிறப்பாகச் செய்வதோடு அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் விசுவாசமாகப் பணி புரிவார். தமக்குரிய அந்தஸ்து நிறுவனத்தில் கிடைத்த மகிழ்ச்சியில் பணியினை உற்சாகமாக செய்வதோடு நிறுவனத்தை விட்டு விலகிச் செல்ல எண்ணமாட்டார்.

நிறுவனங்களில் எந்திரங்களினால் மட்டுமே பணிகளை முழுமையாக செய்துவிட முடியாது. அந்நிறுவனத்தில் பணியாற்றும் “மனித சக்தி” யால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். ஆனால், பணியாளர்கள் பெரும்பாலும் தன் முனைப்பும், பொறுப்புணர்வும், விசுவாசமும் குறைந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்பது வேலை அளிப்பவர்களின் தற்போதைய கருத்தாக உள்ளது. அதனை சரி செய்திட Employee Engagement மூலமாக பணியாளர்கள் தாம் பணிபுரியும் நிறுவனத்தின் பெருமையை நினைவுகூறத் தக்க வகையில் அவர்களுக்கு அவ்வப்போது அவர்களது பணியினைப் பாராட்டி ஊக்கமும், உற்சாகமும், அங்கீகாரமும், பரிசளிப்பும் செய்தாலே அவர்கள் தங்களது பணியினை மேலும் முனைப்போடும், நிறுவனத்தின் வளர்ச்சியில் தமது பங்கும், கடமையும் இருப்பதாக உணர்ந்து திறம்பட பணி புரிவார்கள்.

பொதுவாக, பல பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தில் ஒரு பணியாளர் பணிக்குச் சேர்ந்த முதல் நாளை “Day one Delight” என்று கொண்டாடுவதோடு, அந்தப் பணியாளரை கௌரவிக்கும் விதமாக வரவேற்பு அளித்து அந்தப் பணியாளரை மகிழ்வுறச் செய்கின்றனர். பணிக்குச் சேர்ந்த முதல் நாளே தமக்கு அளிக்கப்பட்ட கௌரவத்தை, வரவேற்பை எண்ணி அந்த நிறுவனத்தின் மீது நன்மதிப்புக் கொண்டு தன் பணியை மகிழ்ச்சியோடு தொடங்குகின்றனர். அதேபோல் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களின் மனநிலையை அறிந்துகொள்ள Q12 என்ற உலகத்தரம் வாய்ந்த ஒரு வழிமுறையை Gallup என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்மூலம் ஒரு நிறுவனத்தின் பணியாளர்களின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் நிறுவனத்தால் அறியமுடியும். குறிப்பாக, நிறுவனத்தின் வளர்ச்சிக்காக தன் முனைப்பு, விசுவாசம், பணிபுரிவதில் மகிழ்ச்சி, பொறுப்பு ஆகியவை வெளிப்படுத்துவதற்கான சூழல் பணியாளர்களுக்கு இருக்கிறதா, இல்லையா என்பதை இந்த Q12 மூலம்அறிந்துகொண்டு அதற்கேற்ப பணியாளர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை மாற்றிக் கொண்டு திறம்பட செயலாற்ற வேண்டும்.

குறிப்பாக ஒரு நிறுவனத்தில் திறமையாகப் பணியாற்றும் பணியாளர்களை தக்க வைத்துக் கொள்வதும், ஒரு பணியாளர் தமது பணியில் திறமையை வளர்த்துக்கொள்ளும் போதிய வாய்ப்பு வழங்கப்பட்டும் அதனை பயன்படுத்திக்கொள்ள இயலாத பணியாளர்களை பணி நீக்கம் செய்வதும் அந்த நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் முக்கியப் பணியாக உள்ளன. ஒரு நிறுவனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் அந்நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை அலுவலர்கள் மட்டுமல்லாது அனைத்துத்துறை அலுவலர்களும் கூட்டாக இணைந்து செயலாற்றுவதும் அந்நிறுவனத்தின் சிறப்பான வளர்ச்சிக்கு ஓர் அடித்தளமாக அமையும் என்றனர்.