இந்திய ரயில்வே பட்ஜெட் ஆற்றல் மிகுந்தது! நமது சங்கம் கருத்து
July 8, 2014
2014-2015 -ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் விளக்கக் கூட்டம்
July 23, 2014

மத்திய பட்ஜெட்டில் பொருளாதார முன்னேற்றத்திற்கு உத்வேகம் அளிக்கக்கூடிய பல்வேறு திட்டங்கள்

budjetமத்திய நிதி அமைச்சர் திரு.அருண் ஜெட்லி நாட்டில் நிலவும் சிரமமான பொருளாதார சூழ்நிலைக்கு இடையில் பொருளாதார முன்னேற்றத்திற்கு உத்வேகம் அளிக்கக்கூடிய பல்வேறு திட்டங்கள் அடங்கிய முற்போக்கான 2014-15-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது பாராட்டத்தக்கது.

இந்த ஆண்டுக்குள் தேவையான சட்டத்திருத்தங்களை மேற்கொண்டு சரக்கு மற்றும் சேவை வரியை அமுல்படுத்த பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளது வெகுவாக வரவேற்கத்தக்கது.

முதலீட்டினை ஊக்குவிக்கும் வகையில் வரிகளை நிலையாக வைத்திருக்கவும், வரிகளை மாற்றம் செய்யப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும் போது தொழில் வணிகத் துறையினரை கலந்தாலோசிக்கவும் முடிவு செய்திருப்பது வெகுவாக வரவேற்கத்தக்கது. உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களை நேரடியாக மின்ணனு வர்த்தகத்தில் ஈடுபடவும் அனுமதிக்க இருப்பது தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிடக் கூடும். ரூ. 25 கோடிக்கு மேல் இயயதிரம் மற்றும் தளவாடங்களில் முதலீடு செய்யும் தொழில்களுக்கு 15 சதவீத முதலீட்டு ஆதரவுச் சலுகை அளித்திருப்பது தொழில் உற்பத்தியை பெருக்க வேண்டியதின் அவசியத்தை நிதி அமைச்சர் நன்கு உணர்ந்திருப்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

தனிநபர் மற்றும் மூத்த குடிமக்கள் வருமான வரி விலக்கு வரம்பினை ரூ. 50 ஆயிரம் மட்டுமே உயர்த்தியிருப்பது அந்த அளவிற்கு அவர்களின் வாங்கும் சக்தி அதிகரிப்பதற்கும், சரக்குகளின் உற்பத்திப் பெருக்கத்திற்கும் அரசிற்கு மறைமுக வரிகள் மூலம் கூடுதலாக வரி வருமானம் கிடைப்பதற்கும் உதவிடாது. சில குறிப்பிட்ட தொலைக்காட்சி பெட்டிகளுக்கான மூலப் பொருட்கள், சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்திக்கான உபகரணங்கள், சோப்புகள், ரசாயணங்கள் இடு பொருட்களுக்கு இறக்குமதி வரிச் சலுகை அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும் சோப்புகள், ரசாயணங்கள் உற்பத்தித் தொழிலுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த இறக்குமதி வரிச்சலுகை பயோ டீசல் உற்பத்திக்கும் அளிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம்.

ஏற்றுமதி, இறக்குமதி ஆவணங்களை விரைவாக தாக்கல் செய்ய ஒற்றைச் சாரள அமைப்பு உருவாக்கப்படவுள்ளது அவற்றைச் சமர்ப்பித்து ஏற்றுமதி/சுங்க அனுமதி பெறுவதற்கான நேரத்தையும், கட்டணத்தையும் வெகுவாகக் குறைத்திடும். நாட்டின் வேளாண் உற்பத்திக்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் பேருதவி செய்திடக்கூடிய நாட்டின் நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த பட்ஜெட்டில் உறுதி அளித்திருப்பதும், விரிவான திட்ட மதிப்பீடு செய்வதற்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதும் இம் மாபெரும் திட்டம் நிறைவேற்றப்படும்
என்ற நம்பிக்கையை அளிப்பதாக உள்ளது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான முதலீட்டு வரம்பினை உயர்த்த முடிவு செய்திருப்பது அத்தொழில்களின் வளர்ச்சியில் மத்திய அரசு கொண்டுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தின் அவுட்டர் ஹார்பர் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளுக்கு ரூ.11,635 கோடி ஒதுக்கியிருப்பது தூத்துக்குடி துறைமுகத்தின் மேம்பாட்டிற்கும் திறன் அதிகரிப்பிற்கும் பெரிதும் உதவும்.  மொத்தத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அடங்கியுள்ளன.