அமெரிக்கா – இந்தியா இடையிலான வர்த்தகம் 100 பில்லியன் டாலர்களை எட்டும்
March 7, 2014
மத்திய நிதி அமைச்சர் திரு.அருண் ஜெட்லிக்கு நமது சங்கம் பாராட்டுக்கள்
June 3, 2014

இந்திய-அமெரிக்க பொருளாதார வளர்ச்சியில் பெண் தொழில் முனைவோர் முக்கியப் பங்கு! ஜெனிஃபர்

womensஅமெரிக்காவின் தொழில் துறை வளர்ச்சியில் பெண் தொழில்முனைவோர் பெரும் பங்கு வகிப்பதாக அமெரிக்க துணைத் தூதரக அதிகாரி ஜெனிஃபர் மெக்கன்டையர் கூறினார்.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் ஓர் அங்கமான தொழில்முனையும் மகளிர் மேம்பாட்டு மையத்தின் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் தின விழா மற்றும் மாநாட்டில் அவர் பேசியது:

அமெரிக்கா மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பெண் தொழில் முனைவோர் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். அமெரிக்காவில் பெண் தொழில்முனைவோர் 80 லட்சம் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 1.2 டிரில்லியன் டாலர்கள் அளவுக்கு இந் நிறுவனங்களின் உற்பத்தி இருக்கிறது.

அமெரிக்காவில் வருங் காலங்களில் பெண்களால் நடத்தப்படும் சிறுதொழில் நிறுவனங்கள்தான் அதிக வேலைவாய்ப்புகளை அளிக்கக் கூடியதாக இருக்கும். வரும் 2018 இல் அமெரிக்க பெண் தொழில்முனைவோர் 50 லட்சம் முதல் 55 லட்சம் வரையிலான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வரும் காலங்களில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் பெண் தொழில்முனைவோரின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவைப் போலவே இந்திய பெண் தொழில்முனைவோரும் முன்னேற்றத்தை அடைந்து வருகின்றனர். குறிப்பாக, தமிழகம், கர்நாடகம், கேரள மாநிலங்களில் சாதனைபுரிந்த பெண் தொழில்முனைவோர் பலரை குறிப்பிட முடியும். பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்க அமெரிக்க தூதரகம் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக தெற்கு ஆசிய அளவிலான பெண் தொழில்முனைவோர் கண்காட்சி கடந்த ஆண்டு வங்கதேசத் தலைநகர் டாக்காவில் நடத்தப்பட்டது. இதில் இந்தியாவில் இருந்து 14 பேர் பங்கேற்றனர். இவர்களில் மூவர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பெண் தொழில்முனைவோருக்கு அவர்களது வர்த்தகத்தை அமெரிக்காவில் விரிவாக்கம் செய்வதற்கான ஆலோசனைகளுக்கும், திட்டங்களுக்கும் அமெரிக்க தூதரகம் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. மேலும், அமெரிக்க நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியாக தொழில் துவங்குவதற்கும் உதவிகள் செய்யப்படுகின்றன என்றார்.

தொழில் துறையில் சாதனை புரிந்த 14 பேருக்கு சாதனை மகளிர் விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் எஸ்.இரத்தினவேல், தொழில்முனையும் மகளிர் மேம்பாட்டு மையத்தின் தலைவர் ராஜகுமாரி ஜீவகன், திரைப்பட நடிகை குட்டி பத்மினி உள்ளிட்டோர் பேசினர்.