மதுரை-ஷார்ஜா இடையே விமான போக்குவரத்தை துவக்க ஸ்பைஸ்ஜெட்க்கு கோரிக்கை
February 5, 2014
மதுரை-துபாய் நேரடி விமான சேவையைத் தொடர ஸ்பைஸ்ஜெட் உறுதி
February 7, 2014

லைசன்ஸ் ராஜ் மீண்டும் அறிமுகப்படுத்த நமது சங்கம் எதிர்ப்பு

foodமத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையகம் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டப்படி உணவுப் பொருட்களில் தொழில் வணிகம் செய்பவர்களும் அவற்றை கையாள்பவர்களும் பதிவு செய்தல் மற்றும் உரிமம் பெறுவதற்கான காலக்கெடுவை மூன்றாவது முறையாக மேலும் ஆறு மாத காலம் 04.08.2014 வரை நீட்டித்துள்ளது. காலக்கெடு நீட்டிப்பதற்கான ஆணை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலக்கெடுவின் கடைசி நாளன்று இரவு வெளியிடப்பட்டுள்ளதால் எந்தவிதப் பயனும் இல்லை. சட்ட விதிகளை முறையாகக் கடைப்பிடிக்கும் பெரும்பாலான உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் போன்றோர் கடைசி நாளுக்கு முன்னரே உரிமம் பெற விண்ணப்பித்துவிட்டனர் அல்லது பெருந்தொகையை விண்ணப்பக் கட்டணமாக செலுத்தி விட்டனர்.

சென்ற முறை 05.02.2013 முதல் ஓராண்டு காலம் 04.02.2014 வரை காலக்கெடு நீடிக்கப்பட்டபோது சட்டத்தின்படி உரிமம் எடுக்க வேண்டும் என்ற நிபந்தனை லஞ்ச லாவண்யத்திற்கும் “லைசன்ஸ் ராஜ்” மீண்டும் உதயமாவதற்கும் வழிவகுக்கும் என்ற காரணத்தால் உணவு பொருட்களின் தொழில் வணிகம் செய்திடும் அனைத்து தரப்பினரும் பதிவு செய்துகொண்டால் மட்டும் போதுமானது, உரிமம் எடுக்கத்தேவையில்லை என்ற சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டுமென்று நமது சங்கம் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையகத்தை வலியுறுத்தியது. அத்துடன் சட்டத்திலுள்ள கடுமையான நிபந்தனைகளையும் தொழில்நுட்ப விடுதல்களுக்குக் கூட கடுமையான தண்டனை வகுத்துரைக்கப்பட்டுள்ளதையும் நீக்க வேண்டும் என்று சங்கம் வலியுறுத்தியுள்ளது. இருப்பினும் அக்கோரிக்கைகளை கடந்த ஓராண்டு காலமாக இந்த ஆணையகம் பரிசீலித்து நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

மக்களுக்கு பாதுகாப்பான, தரமான, சுகாதாரமான முறையில் உணவுப்பொருட்களை வழங்க வேண்டும் என்ற இப்புதிய சட்டத்தின் நோக்கம் உயர்வானது. அதை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம். சட்டம் இப்போது இறுதியாக்கப்பட்டுள்ள நிலையில் அமலாக்கப்பட்டால் அதன் மிகக்கடுமையான பல்வேறு சட்டவிதிகள் மற்றும் பின்பற்ற முடியாத நடைமுறைகள் காரணமாக நாட்டில் உள்ள ஏராளமான உணவுப்பொருட்கள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், பாக் செய்பவர்கள், வாகனங்களில் ஏற்றிச்செல்பவர்கள், ஓட்டல்கள், ரெஸ்டாரண்டுகள் போன்றவை தங்கள் தொழில் வணிகத்தையும் சேவையையும் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். நாட்டிலுள்ள பல கோடி நுகர்வோர் வெகுவாக பாதிக்கப்படுவர்.

இச்சட்டத்தை நாடு முழுவதும் ஒரே சமயத்தில் அமலாக்குவது இயலாது. கிராமப்புறங்களில் சட்டத்திற்குட்பட்டு சுகாதாரமான சூழ்நிலையில் உணவகங்களும் நிறுவனங்களும் இயங்குவதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் கிடையாது. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கிடைத்திடுவது அரிது. எனவே கிராமப்புறங்களைத் தவிர்த்து நகர்ப்புறங்களில் மட்டும் சட்டத்தை முதற்கட்டமாக அமுல்படுத்துவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.

எனவே சட்டம் அமல்படுத்தப்படும் முன்னர் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களிலும் உள்ள தொழில் வணிக அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டத்தினை உடனடியாக கூட்டி கலந்தாலோசித்து சட்டத்தில் தேவையான திருத்தங்களை கடைசிநாள் வரை காத்திராமல் உடனடியாக செய்திட வேண்டியது மிகவும் அவசியமாகும்.