கட்டுமானப் பணிகளுக்கு ஏற்றது கிராவல் மணல்
January 18, 2014
வாழ்த்துக்கள் தலைவருக்கு… நன்றிகள் வாசனுக்கு…
February 5, 2014

மாற்று வழியில் உற்பத்தி செய்யப்படும் மணல்

TNCகட்டிட கட்டுமானத் தொழிலில் மணல்

இந்தியாவில், விவசாயத்திற்கு அடுத்தபடியாக கட்டுமானத்தொழில்தான் மிகப்பெரிய அளவிலான பொருளாதார வளர்ச்சிக்கு மூலாதாரமாக இருப்பதுடன் மிகவும் வேகமாகவும் வளர்ச்சியடைந்தும் வருகிறது. தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வாய்ப்புகள் பல இருப்பினும் கட்டுமானத் தொழில் நாளுக்கு நாள் பல சவால்களை சந்தித்து வருகிறது. மணலின் கடுமையான பற்றாக்குறை, குறிப்பாக தரமான மணலின் தட்டுப்பாடு, அதிக விலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் ஆகியவற்றால் கட்டுமான பணிகளுக்கு தற்போது நல்ல மணல் உடனடியாக கிடைப்பதில்லை. மேலும் சிரமத்திற்கிடையேதான் தொலை தூரத்திலிருந்து மணலை கொண்டுவரவேண்டியுள்ளது.

ஆற்றுமணலை அதிகளவில் எடுப்பதினால் ஏற்படும் அபாயகரமான சில பின் விளைவுகள்

  • அதிக மணல் சுரண்டலின் காரணமாக உள்ளான காவிரி, வைகை, பாலாற்று வடிநிலங்களில் கடந்த 20 ஆண்டுகளில் நிலத்தடி நீர் பெருமளவு கீழே போய்விட்டது. கிணறுகளும் வற்றிவிட்டன. 2003ல் சராசரியாக 120 அடியில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் 2013ல் 1200 அடிக்கும் கீழே போய்விட்டது.
  • மீன் மற்றும் நீர் உயிரினங்கள் சில, நில உயிர் வாழினங்கள் மற்றும் ஊர்வன போன்றவற்றிற்கும் மணல்தான் ஆதாரமாக உள்ளது.
  • மணல், தண்ணீரை நிலத்திற்குள் சேமிப்பதோடு நீரில் உள்ள கிருமிகளை வடிகட்டவும் செய்கிறது. மணல் இல்லையென்றால் சோலிஃபார்ம் போன்ற கிருமிகள் மனித இனத்தையே அழித்துவிடும்.
  • நிலத்தடி நீருக்கு ஆதாரமாக விளங்கும் மண் வளம் பறிபோகிறது.
  • வேளாண் தொழில் பாதிக்கப்பட்டு விளைநிலங்கள் தரிசு நிலங்களாக மாறிவருகின்றன. வேளாண் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
  • பாசன கட்டுப்பாடுகளும் பாலங்களும் இடிகின்றன. நதிகளில் தண்ணீரை சேமிக்க முடிவதில்லை. மணல் இன்றி பாறைகளே மிஞ்சுவதால் தண்ணீர் நேரடியாக கடலில் கலந்து வீணாகின்றது.
  • மணல் மற்றும் கடலுக்கும் இணைப்பாக இருக்கும் நதிகளின் போக்கில் மாறுதல் ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகின்றது.
  • இன்று நாம் அனைவரும் பயன்படுத்திக்கொண்டிருக்கும் மணல், இயற்கை மணல் ஆகும். ஒரு இடத்தில் மழை, தட்பவெப்பநிலை, வெப்பம், காற்று, நீர் மற்றும் பல இயற்கை காரணிகளின் மூலம் மணல் உருவாகின்றது. இவ்வாறு உருவான மணலை நாம் எடுக்க எடுக்க குறையாமல் இருக்க இயற்கை தான் மறுபடியும் இந்த மணலை உற்பத்தி செய்கிறது என்று எண்ணுகிறோம். ஆனால் அது தவறு. மணலை எடுப்பதன் மூலம் மணலை உருவாக்கும் இயற்கை காரணிகளின் சூழ்நிலைகளை நாம் அழித்து விடுகின்றோம். பிறகு எப்படி மணல் உருவாகும்? நமக்கு பிறகு வரும் சந்ததியினருக்கும் பல தலைமுறைக்கும் மணல் என்ற இந்த இயற்கைச் செல்வத்தை விட்டு வைக்க எண்ணினால் நாம் இந்த மணலைப் பாதுகாக்க மாற்று வழிகளை கண்டுபிடித்துச்செயல்படுத்த வேண்டும். இன்றைய சூழ்நிலையில் தூய்மையான தரமான, மணல் கிடைப்பது மிகவும் குறைவாகவே உள்ளது. கிடைப்பதும் அரிதாக உள்ளது. அத்துடன் மணலைப் பாதுகாக்கும் கட்டாயத்தில் இன்று நாம் உள்ளோம்.

மாற்று வழியில் உற்பத்தி செய்யப்பட்ட மணல் – Manufactured Sand( M-sand)

  • கருங்கற்களை பிரமாண்ட இயந்திரங்கள் மூலம் நொறுக்கி மைனிங், கிரஷிங், ஷேப்பிங், வாஷிங் என பல்வேறு நிலைகளுக்கு உட்படுத்தி துகள்களாக மாற்றி உற்பத்தி மணல் தயாரிக்கப்படுகிறது. ஆற்று மணலில் இல்லாத பல தனித்தன்மைகள் இதில் உண்டு. கட்டுமானத் துறையில் ஆற்று மணலுக்கு M-sand மாற்று மணல் என்று சிலாதிக்கப்படுகிறது.
  • M-sand மணல் முறையாக தொழிற்சாலைகளில் சரியான இயந்திரங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படுகின்ற M-sand மணலை நல்ல மாற்று மணலாக இயற்கை மணலுக்கு இணையாகக் கட்டிடங்கள் கட்டுவதற்கும் மற்ற கட்டுமானப் பணிகளுக்கும் பயன்படுத்துவதின் மூலம் இயற்கை மணலை நாம் பாதுகாக்க முடியும்.
  • ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் எம்-சான்ட் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ், ஐ.ஐ.டி. நிறுவனங்களில் M-sand மணல் ஆய்வு செய்யப்பட்டு இதன் உறுதித்தன்மை நிரூபிக்கப்பட்டுள்ளது.
  • பொதுவாக மணலில் 15 முதல் 20 சதவீதம் வரை கழிவுகள் இருக்கும். உற்பத்தி செய்யப்பட்ட மணலில் அப்படியான கழிவுகள் இருப்பதில்லை. மேலும் பூச்சு வேலை, கான்கிரீட், கருங்கல் கட்டிடம், செங்கல் கட்டிடம் என நமது தேவைக்கு தகுந்தவாறு M-sand வாங்க முடியும்.
  • இந்த M-sand மணல், இயற்கை மணலைவிட தரத்தில் சிறந்தது. இதனை இந்தியாவின் சில பகுதிகளில் மட்டுமல்லாது வெளிநாட்டிலும் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் புனேயில் மும்பை விரைவு இரயில் திட்டம் முற்றிலும் M-sand மணலைப் பயன்படுத்திக் கட்டப்படுள்ளது.
  • M-sand மணல் துகள்கள் அனைத்தும் சரியான அளவுகளில் ஒரே சீராக இருப்பதால் அதிக வலிமையான கான்கிரீட் அமையப் பயன்படுத்துகின்றனர். Proman என்ற தொழில்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட மணலை பெங்களூர் பன்னாட்டு விமான விரிவாக்கப் பணி மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் போன்றவற்றிற்கு வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
  • கட்டுமானப் பணிகள் மற்றும் கான்கீரிட் வேலைகள் ஆகியவை இன்றைய காலகட்டத்தில் மிகவும் வளர்ச்சியடைந்து வருகின்றது. இதன் தேவையை இயற்கை மணல் கொண்டு ஈடுசெய்வது என்பது வருங்காலங்களில் சிரமமானதாகிவிடும். பலகோடி ஆண்டுகளாக உருவாகும். ஏனெனில் இயற்கை மணல் குறைந்த அளவில் மட்டுமெ ஆற்றுப்படுகைகளில் மற்றும சில இடங்களில் காணப்படுகின்றது.
  • இயற்கை மணலை நாம் இழந்ததால் அதனை ஈடுசெய்வது மிகவும் கடினமான ஒன்றாகிறது. அதனால் நாளுக்கு நாள் மணலின் விலையும் விண்ணை தொடும் அளவிற்கு உயர்கின்றது. எனவே M-sand என்ற மாற்று மணலை கட்டிடக் கட்டுமானத்திற்கு பயன்படுத்த வழிகாணுவது மிகவும் அவசியம்.

கூட்டத்தின் நோக்கம்:

மதுரை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கல் உடைக்கும் சிறு தொழில் மிகவும் பிரசித்தி பெற்றது. நவீன இயந்திரக் கருவிகளைப் பயன்படுத்தி தரமான மணல் உற்பத்தி செய்யும் முறை பற்றித்தெரிந்து அத்தொழிலில் ஈடுபடவும் அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மணல் பற்றிய நன்மைகள் மற்றும் சமீபத்திய தொழில்நுட்ப வளர்ச்சிகள் ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்ளச்செய்வதே துறைசார்ந்த வல்லுநர்கள், M-sand இயந்திரங்கள் தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டு விளக்கமளித்தனர். M-sand தயாரிக்கும் இயந்திரங்களின் மூலம் மணல் தயாரிப்புப் பணி குறித்த காட்சியும் வீடியோ ஒளிபரப்பப்பட்டது.