இது லஞ்ச லாவண்யத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் ! உடனே ரத்துசெய்யுமாறு வேண்டுகோள்
December 18, 2013
பாஜகவின் அறிவிப்பிற்கு நமது சங்கம் வரவேற்பு
January 1, 2014

அகில இந்திய அளவில் இந்த வரி சீர்திருத்தம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டுகோள்

downloadவருமான வரிக்குப் பதிலாக, குறிப்பாக தனிநபர் வருமான வரிக்குப் பதிலாக செலவு வரியை விதிக்க வேண்டும் என்ற கருத்தை நீண்ட காலமாக தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நிதி அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும் பட்ஜெட் முன் ஆலோசனை கோரிக்கை மடலில் இதை வலியுறுத்தியுள்ளோம். ஆனால் நிதிஅமைச்சகம் இந்தக் கோரிக்கையை இதுவரை பரிசீலிக்கவில்லை. ஐக்கிய அரபு நாடுகளில் வருமான வரியே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வருமான வரி, கலால் வரி, விற்பனை வரி உள்ளிட்ட வரிகளை நீக்கவிட்டு அவற்றிற்கு பதிலாக வர்த்தகப் பரிவர்த்தனை வரியை விதிப்பது குறித்து பாரதிய ஜனதா கட்சி பரிசீலிக்கும் என அக்கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போது அக்கட்சியின் இந்தியத் தொலைநோக்குப் பார்வை -2025 என்ற ஆணவத்தைத் தயாரிக்கும் பொறுப்பில் இருப்பவருமான திரு. நிதின் கட்காரி சமீபத்தில் அறிவித்திருப்பது வெகுவாக வரவேற்கத்தக்கது.

மேற்கண்ட வரிகளை நீக்கிவிட்டு சரக்குகள் மற்றும் அசையும், அசையாச்சொத்துக்களை வாங்குவது போன்ற பரிவர்த்தனைகளின் மீது 1 அல்லது 1.5 சதவீத பரிவர்த்தனை வரி விதித்தால் தற்போது அமலில் உள்ள மேற்கண்ட வரிகளின் மூலம் அரசிற்குக் கிடைக்கும் மொத்த வருமானமான ரூ.14 லட்சம் கோடியை விட இரு மடங்கில் வரி வருமானம் கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நடைமுறை சாத்தியமானால் வரிச்சட்டங்களில் செய்யப்படும் மிகப்பெரிய புரட்சிகரமான சீர்திருத்தமாக இது அமையும்.

நம் நாட்டில் ஆண்டுக்காண்டு பெருகி வரும், கணக்கில் வராத பல லட்சம் கோடி கறுப்புப் பணத்தைக் கண்டுபிடிக்க மத்திய அரசு எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகளும் அதற்காகச் செலவிடப்படும் பெரும் தொகையும் குறிப்பிடத்தக்க எந்தப் பலனையும் அளிக்கவில்லை. வெளிநாட்டு வங்கிகளில் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறப்படும் பணம் மட்டும் ரூ.120 லட்சம் கோடி என மதிப்பிடப்படுகிறது.

பரிவர்த்தனை வரி என்பது மக்கள் சம்பாதிக்கும் தொகையின் அடிப்படையில் இல்லாமல் செலவழிக்கும் தொகையின் அடிப்படையில் விதிக்கப்படுகிறது.

நம் நாட்டில் வருமான வரி மற்றும் இதர வரிகளுக்குப் பதிலாக இவ்வரியை அறிமுகப்படுத்தினால் பல்வேறு சிக்கலான புரிந்துகொள்ள முடியாத வரிச்சட்டங்களினாலும் விதிகளினாலும்,அவற்றிற்கான நடைமுறைகளினாலும், காலக்கெடுவிற்குள் சமர்ப்பிக்க வேண்டிய பல்வேறு படிவங்களினாலும் அதிக சிரமங்களையும் கூடுதலான நேரத்தையும் மனித உழைப்பையும் குற்ற நடவடிக்கை மற்றும்  சிறைத்தண்டனை போன்ற மிரட்டல்களையும் தொழில் வணிகத்துறையினர் சந்திக்க வேண்டிய நிலை கண்டிப்பாக மாறும், தற்போதுள்ள வரிகளுக்குப் பதிலாக பரிவர்த்தனை வரி மட்டும் விதிக்கப்பட்டால் வரி விதிப்பு அதிகாரிகளின் சோதனைக்கும், லஞ்ச லாவண்யத்திற்கும் உட்படாமல் அவர்கள் தொழில் வணிகத்தில் அதகி கவனம் செலுத்த முடியும். சம்பாதிக்கும் தொகைக்கு வரி இல்லை என்பதால் அதனைக் கணக்கில் காட்டாமல் மறைத்து வைக்கும் எண்ணம் முற்றிலும் தவிர்க்கப்பட்டு உள்நாட்டில் சேமிப்பு அதிகரிக்கவும், தொழில் வணிகத்துறையில் முதலீடு தங்கு தடையின்றி பெருகவும், நாட்டின் பொருளாதாரம் அபரிமிதமாக மேம்படவும் வழிவகுக்கும். பரிவர்த்தனை வரியை எளிமையான முறையில் மின்னணு மூலம் அமலாக்கி அதிக அளவு வரி வருவாயை அரசு பெற முடியும். வரி ஏய்ப்பு அறவே இருக்காது. கருப்புப் பணம் உருவானது முற்றிலுமாகத் தடுக்கப்படும்.

மிக முக்கியமான இவ்வரிச்சீர்திருத்தம் குறித்து நாடு முழுவதும் விவாதம் நடத்துவதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.