இருவழி விமானப் போக்குவரத்து: மத்திய அமைச்சருக்கு வேண்டுகோள்
May 20, 2013
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் வர்த்தக தூதுக் குழு அமெரிக்கா பயணம்
June 17, 2013

விளை நிலங்கள் வீட்டுமனைகளாகிறது : மதுரை மாவட்டத்தின் அவலநிலை

farm-landsமதுரை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 12 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலத்தில் விவசாயம் நடைபெறவில்லை. விளை நிலங்கள் வீட்டுமனைகளாக உருமாறும் அவலம் இம்மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நகர்மயமாக்கம், குவாரி, விளைநிலங்களைத் துண்டாடுதல், வீட்டு மனைகளாக்குவதில் கிடைக்கும் இலாபம், விவசாயத்தைத் தொடர ஆள் இல்லாதது, விவசாயக் கூலி உயர்வு, பருவ மழை பொய்த்தது போன்ற பல்வேறு காரணங்களால் விளை நிலங்கள் வீட்டுமனைகளாகிவிட்டன.
மேலூர், மதுரை வடக்கு ஆகிய பகுதிகளில் உள்ள குவாரிகளால் 325 ஹெக்டேர் நிலங்கள் விவசாயத்தை இழந்துவிட்டன.

இந்தப் பகுதிகளில் பாசன கண்மாய்கள், பாசனக்கால்வாய் போன்றவற்றை சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்துவிட்டதால் விவசாயம் நடைபெறவில்லை என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்ததாக த ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் முதுநிலைத் தலைவர் திரு.எஸ்.ரத்தின வேலு கூறுகையில், குடியிருப்புகள் மதுரை மாநகருக்கு வெளியே 7 முதல் 10 கி.மீ வரை விரிவடைந்திருக்கிறது என்றார்.

மதுரை மாநாகராட்சியின் எல்லை 2011இல் விரிவாக்கப்பட்ட பின்பு நகர்மயமாக்கம் விரைவாக நடைபெற தொடங்கியுள்ளது என குறிப்பிட்டார்.

மேலூரும் மதுரை வடக்கும் பெரியாறு பாசனத்தில் அதிகப்பயன் பெறும் விளை நிலங்களை கொண்டிருந்தவை. ஆனால் அவை இன்று பாசன நீர் நிலைகள் பாழாக்கப்பட்டதாலும் குவாரிகளின் குப்பை கொட்டும் இடங்களாக மாறி வருகின்றன.

இந்த பகுதிகளில் நோய்க்கிருமி போல பரவிய குவாரிகள் விவசாய பணிகளை முற்றிலுமாக முடக்கிவிட்டன. இவ்வாறு 24000 ஏக்கர் நிலம் விவசாயமின்றி போனதாக நீராதார பாதுகாப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் தலைவரும் விவசாயியுமான வி.சோமசுந்தரம் தெரிவித்தார்.

விவசாய நிலங்களில் சட்ட அனுமதி பெறாமல் வீட்டுமனைகளாக மாற்றுகின்றனர் என்பதையும் மிஸ்ரா குறிப்பிட்டார். இவ்வாறு மதுரை- அழகர் கோவில் சாலை, மதுரை- நத்தம் சாலை மற்றும் மதுரை- மேலூர் சாலைகளில் வீட்டுமனைகள் விற்கப்படுவதாகவும் மாட்டுத்தாவணியிலிருந்து கப்பலூர் செல்லும் ரிங்ரோட்டிலும் மதுரை- திருச்சி, மதுரை- திண்டுக்கல் மற்றும் மதுரை- விருதுநகர் சாலைகளிலும் விளைநிலங்கள் வீட்டுமனைகளாகிவிட்டன என மிஸ்ரா தெரிவித்தார்.