மதுரைக்கு ஏர் அரேபியாவின் தினசரி விமானசேவை: மத்திய அரசுக்கு வேண்டுகோள்
January 28, 2013
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு நமது கோரிக்கைகள்
May 10, 2013

மத்திய அரசை கண்டித்து தொழில் வர்த்தக சங்கம் 26ம் தேதி தர்ணா

1366813940சிங்கப்பூர் விமானத்துக்கு அனுமதி மறுத்த மத்திய அரசை கண்டித்து வருகிற 26ம் தேதி தர்ணா போராட்டம் நடத்த தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் ரத்தினவேல், தலைவர் ஜெகதீசன், மதுரை டிராவல்ஸ் கிளப் தலைவர் முஸ்தபா, சவுராஷ்டிரா தொழில் வர்த்தக சபை தலைவர் குமரேசன் ஆகியோர் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது: மதுரை விமான நிலையத்தில் ரூ.130 கோடி செலவில் புதிய முனையம் சர்வதேச தரத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

பிறநாடுகளுடன் இருவழி விமான சேவை ஒப்பந்தங்களில் மதுரை விமான நிலையத்தை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

இந்த நிலையில் இந்தியா- சிங்கப்பூர் இடையிலான இருவழி விமான சேவை ஒப்பந்தத்திற்கான மறு ஆய்வு பேச்சுவார்த்தை சிங்கப்பூரில் நடந்தது. இதில் சிங்கப்பூர்-மதுரை இடையே விமான சேவையை தொடங்கும் சிங்கப்பூர் அரசின் கோரிக்கையை மத்திய அமைச்சர் அஜித்சிங் நிராகரித்துள்ளது தென் தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்காசியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையே உள்ள இருவழி விமான சேவை ஒப்பந்தங்களில் மதுரை விமான நிலையத்தை சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறோம்.

சிங்கப்பூர் அரசு தாமாக விருப்பம் தெரிவித்தும் மத்திய மந்திரி நிராகரித்திருப்பது தென் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சியில் சிறிதும் அக்கறையின்மையை காட்டுகிறது.

இந்த நிலையில் ஐக்கிய அரபு குடியரசு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே இருவழி விமான சேவை ஒப்பந்தம் வருகிற 26-ந் தேதி மறு பரிசீலனை நடக்கிறது. இதில் மதுரை விமான நிலையத்தை கண்டிப்பாக சேர்க்கப்பட வேண்டும். இதன் மூலம் மதுரை- சார்ஜா இடையே நேரடி விமான போக்குவரத்து தொடங்க வாய்ப்பு உள்ளது.

எனவே இந்த கோரிக்கையை தமிழக எம்.பி.க்கள், மத்திய அரசிடம் தீவிரமாக வற்புறுத்த வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தொழில் வர்த்தக அமைப்பு கள் இணைந்து மதுரை விமான நிலையத்தில் வருகிற 26-ந் தேதி தர்ணா போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.