தொழில் வர்த்தகப் பொருட்காட்சி 2013 நிறைவு விழா
January 2, 2013
மத்திய அரசை கண்டித்து தொழில் வர்த்தக சங்கம் 26ம் தேதி தர்ணா
April 24, 2013

மதுரைக்கு ஏர் அரேபியாவின் தினசரி விமானசேவை: மத்திய அரசுக்கு வேண்டுகோள்

ஏர் அரேபியா நிறுவனம் ஷார்ஜாவிலிருந்து மதுரைக்கு தினசரி நேரடி விமான சேவையைத் துவக்க விருப்பம் தெரிவித்து மத்திய அரசுக்கு அதற்கான அனுமதி கேட்டு ஏற்கனவே விண்ணப்பம் செய்துள்ளது.இது குறித்து சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து பேசுவதற்காக ஏர் அரேபியா நிறுவனத்தின் இயக்குனர் திரு. டோனி விட்பை இன்று மதுரை வந்திருந்தார்.

அவருடனான கலந்துரையாடல் கூட்டத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு. மாணிக்க தாக்கூர், மதுரை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஏ.ஜி.எஸ். ராம்பாபு, நமது சங்க முதுநிலைத் தலைவர் திரு. எஸ். இரத்தினவேல், மதுரை டிராவல் கிளப் தலைவர் திரு. பி.எஸ்.ஜி முஸ்தபா, முன்னாள் தலைவர் திரு.ஜி.வாசுதேவன், மதுரை விமான நிலைய இயக்குனர் திரு. சங்கையா பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏர் அரேபியா நிறுவனத்தின் இயக்குனர் டோனி பேசுகையில் ஏர் அரேபியா விமான நிறுவனம் மத்திய கிழக்கு நாடுகளிலேயே குறைந்த விமான கட்டணத்தில் இயங்கும் பெரிய நிறுவனம் என்றும் தற்போது ஷார்ஜாவிலிருந்து இந்தியாவில் 13 நகரங்களுக்கு விமான சேவை வாரத்தில் நாட்களும் ஷார்ஜா- கோயம்புத்தூர் விமான சேவை வாரத்தில் 5 நாட்கள் நடைபெறுவதாகவும் இந்த விமானங்கள் எல்லாம் 90 சதவீத பயணிகளுடன் செல்வதாகவும் அடுத்து தங்கள் விமான சேவையை விரிவாக்கம் செய்வதற்காக நடத்திய ஆய்வில் ஷார்ஜா- மதுரைக்கு இடையே நேரடி விமான சேவையைத் துவக்குவதற்கு பயணிகள் ஆதரவு மிக அதிக அளவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தினசரி ஷார்ஜா- மதுரை விமான சேவையை துவக்க தயாராக உள்ளதாகவும் அதற்கான 168 பயணிகள் பயணிக்கும் “ஏ320” ரக விமானமும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

துபாயிலிருந்து 15 கி.மீ தொலைவில் ஷார்ஜா உள்ளது. அங்கு விலைவாசி மற்றும் கட்டிட வாடகை குறைவாக இருப்பதால் தமிழகத்திலிருந்து துபாய், ஷார்ஜா ஆகிய அமீரக நாடுகளில் பணியாற்றும் பணியாளர்கள் ஷார்ஜாவில் குடியேறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையிலிருந்து துபாய்க்கும் மதுரையிலிருந்து ஷார்ஜாவுக்கும் விமான சேவை துவக்கப்பட்டால் இரண்டிலும் பயணம் செய்ய பயணிகள் அதிகமாக உள்ளனர். தென் தமிழக மக்கள் ஷார்ஜாவிற்கு செல்ல சென்னை அல்லது கேரளாவிற்குத்தான் செல்ல வேண்டியுள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி, கள்ளிக்கோட்டை ஆகிய நகரங்களிலிருந்து வாரம் 35 விமான சேவையை ஷார்ஜாவிற்கு ஏர் அரேபியா விமான நிறுவனம் அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழகத்திற்கு வாரம் 12 சேவைகள் தான் அளிக்கப்படுகிறது.

ஏர் அரேபியா விமான நிறுவனம் ஷார்ஜாவிலிருந்து மதுரைக்கு தங்கள் சேவையைத் துவக்கத் தடையாக இருப்பது இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு குடியரசு நாடுகளுக்கிடையே உள்ள விமான இருவழி ஒப்பந்தத்தில் மதுரை விமான நிலையம் இடம்பெறாததுதான். இது குறித்து மாண்புமிகு மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. அஜித்சிங் அவர்களிடமும் மாண்புமிகு மத்திய நிதித்துறை அமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்களிடமும் எடுத்துக்கூறி ஆவண செய்வதாக விருதுநகர் பாராளுமன்ற திரு. மாணிக்க தாக்கூர் உறுதி அளித்தார்.

மதுரைக்கும் துபாய்க்கும் இடையே விமான சேவைத் துவக்க ஏர் இந்தியா நிறுவனத்தை வலியுறுத்த துபாயில் நடைபெற்ற கூட்டத்தில் வருகிற மார்ச் மாதம் இச்சேவையைத் துவக்க முடியாவிட்டால் ஜுன் மாதம் குளிர்கால அட்டவணையில் தான் சேர்க்க முடியும் என ஏர் இந்திய நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். எனவே இச்சூழ்நிலையில் ஷார்ஜா- மதுரை தினசரி விமான சேவையை துவக்க விமானத்துடன் தயாராக இருக்கும் ஏர் அரேபியா நிறுவனத்திற்கு உரிய அனுமதி கிடைக்கும்படி இரு நாடுகளுக்கிடையேயான இருவழி ஒப்பந்தத்தில் மதுரை விமான நிலையம் உடனடியாக சேர்க்கப்பட வேண்டுமென மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சரிடம் நம் சங்கம் கேட்டுக்கொள்கிறது. அத்துடன் அதற்கு முன்பாகவே தற்காலிக இருக்கை எண்ணிக்கை உரிமை ஒதுக்கீடு அடிப்படையில் ஏர் அரேபியா நிறுவனத்திற்கு வாரத்திற்கு 2532 இருக்கைகள் ஒதுக்கீடு செய்து கொடுத்து 168 பயணிகள் செல்லக்கூடிய விமானம் தினசரி ஷார்ஜாவிலிருந்து மதுரைக்கு வந்து திரும்ப ஷார்ஜாவிற்கு செல்லும் சேவையைத் துவக்க ஏர் அரேபியா நிறுவனத்திற்கு உடனடியாக வாய்ப்பளிக்க வேண்டுமென மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்திடம் நம் சங்கம் கேட்டுக்கொள்கிறது.