தமிழகத்தில் பாரபட்சமற்ற மின் விநியோகத்தை வலியுறுத்தி கதவடைப்பு
December 23, 2012
மதுரைக்கு ஏர் அரேபியாவின் தினசரி விமானசேவை: மத்திய அரசுக்கு வேண்டுகோள்
January 28, 2013

தொழில் வர்த்தகப் பொருட்காட்சி 2013 நிறைவு விழா

Trade-Fairதமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் ஒத்துழைப்புடன் தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேஷன் சார்பில் மதுரை ஐயர் பங்களா கிருஷ்ணன் கோவில் மைதானத்தில் 20.12.2012 முதல் 02.01.2013 வரை 14 நாட்கள் நடைபெற்ற தொழில் வர்த்தகப் பொருட்காட்சி 2013ம் ஆண்டின் நிறைவு விழா 01.01.2013ம் நாள் வர்த்தக சங்கத் தலைவர் திரு. N.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு அன்சுல் மிஸ்ரா, I.A.S., அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

சங்கத் தலைவர் திரு N.ஜெகதீசன் தமது தலைமை உரையில், பொருட்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு சிறப்பம்சங்கள் குறிப்பாக, பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த பிரமிட் மற்றும் பிரமிட் குறித்த 3D காட்சி ஆகியவற்றை மக்கள் வியந்து பார்த்து ரசித்த விபரம் குறித்து எடுத்துரைத்தார்.

இவ்விழாவில் உரையாற்றிய தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவரும், தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேஷனின் தலைவருமான திரு S.இரத்தினவேல், சென்னையில் Trade Centre, கோவையில் கொடிசியா அரங்கி, புதுடில்லியில் பிரகதிமைதான் போல் தென் தமிழகத்தின் தொழில் வணிக வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு மதுரையில் நிரந்தரப் பொருட்காட்சி வளாகம் (Permanent Trade Centre) அமைத்திட பொருத்தமான ஓர் இடத்தை அரசு வழங்கினால் அந்த இடத்தை சேம்பர் ஃபவுண்டேஷன் சார்பில் கிரயமாகப் பெற்று மிகுந்த பொருட்செலவில் நிரந்தரப் பொருட்காட்சி வளாகத்தினை அமைக்கத் தயாராக இருக்கிறோம். இம்முயற்சிக்கு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துப் பேசினார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பொருட்காட்சியில் சிறந்த அரங்குகளை அமைத்திருந்தவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிப் பேசிய மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு . அன்சுல் மிஸ்ரா, I.A.S., தொழில் வணிக வளர்ச்சியை மையமாக வைத்து ஒவ்வொரு ஆண்டும் தொழில் வர்த்தகப் பொருட்காட்சியை நடத்தி வரும் இப்பொருட்காட்சியின் அமைப்பாளர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்ட மாவட்ட ஆட்சியர், மதுரையை கலாச்சார பண்பாட்டு நகரமாக மாற்றுவதற்கு அனைவரும் கூட்டு முயற்சியோடு செயலாற்ற வேண்டும் என்றார். மக்கள் நலமாக இருந்தால்தான் வசிக்கும் நகரமும் நன்றாக இருக்கும். அதனடிப்படையில், மதுரை மாவட்ட நிர்வாகம் வெளிப்படையான, பொறுப்புணர்வு மிக்க நிர்வாகத்தை மக்களுக்கு அளித்து வருகிறது என்றார்.

விழாவில் சாகித்ய அகாடமி விருது பெற்ற இளம் எழுத்தாளர் திரு. சு. வெங்கடேசன், மதுரை டிராவல் கிளப் முன்னாள் தலைவர் Dr.G.வாசுதேவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சேம்பர் ஃபவுண்டேஷன் தலைவர் திரு S. இரத்தினவேல், அடுத்த ஆண்டு 19.12.2013 முதல் 02.01.2014 வரை நடைபெற உள்ள தொழில் வர்த்தகப் பொருட்காட்சி 2014க்கு தலைவராக திரு N. ஜெகதீசன், செயலாளராக திரு S. ஸ்ரீதர், துணைத் தலைவர்களாக திரு R. பிரபாகரன், திரு A.S.V.A. மாதவன் ஆகியோரை நியமிப்பதாக அறிவிப்பு செய்தார். அடுத்த ஆண்டு பொருட்காட்சியின் முழக்கமாக “சுற்றுலா நமது கலாச்சாரம்” (Tourism our Culture) என்ற இந்த ஆண்டு முழக்கமே தொடரும் என்றார்.

பொருட்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில் சிறந்த அரசுத் துறை அரங்காக தென்னக இரயில்வே அரங்கு தேர்வு செய்யப்பெற்று மதுரை இரயில்வே கோட்ட மேலாளர் திரு அஜய் காந்த் ரஸ்தோகி அவர்களிடம் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

14 நாட்களும் நடைபெற்ற இப்பொருட்காட்சியில் ரூ.20 நுழைவுச் சீட்டின் மீது நிறைவு நாளன்று மெகா பம்பர் பரிசு மற்றும் பம்பர் பரிசு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்ததன் அடிப்படையில் மெகா பம்பர் பரிசாக நிப்பான் குரூப் ஆஃப் கம்பெனீஸ் வழங்கிய டாடா நானோ கார் (பரிசுக்குரிய நுழைவுச் சீட்டு எண்.: 023996) அஸ்வின் (ஒன்பது மாதக் குழந்தை)-க்கும், பம்பர் பரிசாக ஃப்ளோரிடா ஃபர்னிச்சர் வழங்கிய 3 seater – 1 SIngle seater – 2 அடங்கிய அழகிய சோஃபா செட் (பரிசுக்குரிய நுழைவுச் சீட்டு எண். 04726)மதுரையைச் சார்ந்த திரு T.அபுதாஹிர் என்பவருக்கும் கிடைத்துள்ளது. விழா மேடையிலேயே இவர்கள் இருவருக்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஓர் சிறப்பு விழாவில் மேற்கண்ட பரிசுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. நிறைவாக, பொருட்காட்சி ஒருங்கிணைப்பாளர் திரு S.ஸ்ரீதர் நன்றி கூறினார்.