2014-2015 -ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் விளக்கக் கூட்டம்
July 23, 2014
ஒரு நிறுவனத்தில் மனிதவளத் துறையின் பணிகள் மகத்தானது ! தலைவர் N.ஜெகதீசன்
August 9, 2014

பின்தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க தமிழக முதல்வர் அறிவித்துள்ள திட்டங்களுக்கு பாராட்டு

Madurai-Airportதென் மாவட்டங்களில் தொழில், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு இரு வழி விமான சேவை ஒப்பந்தங்களில் சேர்க்க மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தை வலியுறுத்த தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கிறது நமது சங்கம்.

தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள பகுதிகளில் அதனை ஊக்குவிக்கவும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் தமிழக முதல்வர் இராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ. 6525 கோடி மதிப்பீட்டில் தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி மண்டலம் அமைப்பதற்கான திட்டம், ரூ.1500 கோடியில் வாலி நோக்கத்தில் 50 மெகாவாட் திறன் கொண்ட சூரிய வெப்ப மின் உற்பத்தியுடன் கூடிய கடல் நீரை சுத்திகரிக்கும் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளது வெகுவாகப் பாராட்டத்தக்கது.

தொழில் கட்டமைப்பு வசதிகள் போதுமான அளவு இல்லாத காரணத்தால் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் தொழில், பொருளாதார வளர்ச்சியில் தொடர்ந்து பின்தங்கி உள்ளன. தமிழக முதல்வர் தற்போது வெளியிட்டுள்ள பல்வேறு தொழில் ஊக்குவிப்புத் திட்டங்களும் 2014-2015 ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான சிறப்புச் சலுகைத் தொகுப்பின் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதிலும் உள்ள 53000 ஏக்கர் நிலத்தை மேம்படுத்தி அதில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்ற அறிவிப்பும், ஏற்கனவே விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ள மதுரை-தூத்துக்குடி தொழில் மேம்பாட்டு வழித்தடத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக சிறப்பு செயலாக்க முகமை (Special Purpose Vehicle) ஒன்று ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் விரைவாக செயல்படுத்தப்பட வேண்டும்.

தென் மாவட்டங்களில் அதிக அளவில் அந்நிய நேரடி தொழில் முதலீடு செய்யப்படவும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவதற்கும் வெளிநாட்டு விமானச் சேவை நிறுவனங்கள் மதுரைக்கு நேரடி விமான சேவையைத் துவங்க வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் நம் நாடு இலங்கை தவிர இதர நாடுகளுடன் மேற்கொண்டுள்ள இருவழி விமானச் சேவை ஒப்பந்தங்களில் மதுரை விமான நிலையம் இதுவரை சேர்க்கப்படாதது அதற்கு தடையாக உள்ள காரணத்தால், தென் மாவட்டங்களின் தொழில் மேம்பாட்டில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள தமிழக முதல்வர் அவர்கள் மேற்கண்ட விமானச் சேவை ஒப்பந்தங்களில் மதுரை விமான நிலையத்தை உடனடியாக சேர்க்குமாறு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரை வலியுறுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.