மதுரை விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு சரக்குப் போக்குவரத்தை உடனடியாக துவக்க கோரிக்கை
December 13, 2014
குடியரசு தின சிறப்புரை
January 26, 2015

“சரக்கு மற்றும் சேவை வரி” அமலாக்கத் தேதியை அறிவித்துள்ள மத்திய நிதி அமைச்சருக்கு நன்றி

arunமத்திய அரசும் மாநில அரசும் தற்பொழுது அமல்படுத்தி வரும் கலால் வரி, சேவை வரி, மத்திய விற்பனை வரி, மாநில மதிப்புக் கூட்டு வரி,லாட்டரி சீட்டின் மீதான வரி, நுழைவு வரி, கேளிக்கை வரி, ஆடம்பர வரி போன்ற பல வரிகளை ரத்து செய்துவிட்டு ஒரே வரியாக “சரக்கு மற்றும் சேவை வரி” நம் நாட்டில் அமலாக்கம் செய்யப்படுமா? செய்யப்படாதா என்று கடந்த நான்கு ஆண்டுகளாக நிலவி வந்த ஐயப்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்து, 01.04.2016 முதல் இவ்வரி அமலாக்கப்படும் என்று தேதியை அறிவித்து அதற்கான அரசியல் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உறுதியான நடவடிக்கைகள் எடுத்துள்ள மத்திய நிதி அமைச்சர் திரு அருண் ஜெட்லி அவர்களுக்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பாக மனமார்ந்த பாராட்டுதல்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

“ஒரே நாடு, ஒரே சந்தை, ஒரே வரி” என்ற அடிப்படையில், நம் நாடு விடுதலை அடைந்த பிறகு மறைமுக வரிகளில் செய்யப்படும் மிகப் பெரிய வரிச் சீர்திருத்தம் இது. “சரக்கு மற்றும் சேவை வரி” அமலாக்கம் செய்யப்பட்டால் நம் நாட்டில் தொழில் வணிகம் வளர்ச்சி பெறும், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும், நேர்மையாக வரி செலுத்துவோர் ஊக்கம் பெறுவர், வரி மீது வரி இல்லை என்பதால் பொருட்களின் விலை குறையும் என்ற காரணங்களினால் தொலைநோக்குப் பார்வையோடு முதலில் இருந்தே இந்த வரி முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று குரல் கொடுத்து வந்த அமைப்பு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தின் வரி விதிப்பு அதிகாரத்திற்கும், மாநில வரி வருவாய்க்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்ற அக்கறையில், மாநில அரசுகளின் நிதி அமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்ட அதிகாரம் பெற்ற உயர் நிலைக் குழு தெரிவித்த பல்வேறு ஆலோசனைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த வரி அமலாக்கத்தால் எந்த மாநில அரசுக்கும் வரி இழப்பு ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ளப்படும் என்று மத்திய நிதியமைச்சர் உறுதியளித்துள்ளார்.

அதேபோல், இந்த வரிச் சட்டத்தின் கீழ் வரியை வசூலிக்கப் போகின்ற தொழில் வணிகத் துறையினரின் நலனும் பாதுகாக்கப்பட அவர்களது கருத்துக்களைக் கேட்டு வரி விகிதங்கள் இறுதியாக்கப்பட வேண்டும். குறிப்பாக தற்பொழுது கலால் வரிக்கு உட்பட்ட பொருட்களுக்கும், கலால் வரிக்கு உட்படாத வேளாண் பொருட்களுக்கும் புதிய வரி விகிதங்களை நிர்ணயிப்பதிலும், வரி விலக்குப் பெற்ற பொருட்களை தீர்மானிப்பதிலும், வரி அமலாக்க நடைமுறைகளிலும் தொழில் வர்த்தக சங்கங்களின் கருத்துக்களை கேட்டு அவ்வரிச் சட்டத்தை இறுதியாக்கினால் தான் இவ்வரியின் அமலாக்கம் சுமூகமாக இருக்கும்.

வரி ஏய்ப்பு, அதிகாரிகளின் கெடுபிடி, லஞ்ச லாவண்யம் ஆகியவற்றை ஒழிக்க வேண்டும் என்ற இந்த வரிமுறையின்நோக்கம் நிறைவேறும். எனவே அனைத்து மாநிலங்களிலும் உள்ள முக்கிய தொழில் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஓர் உயர்நிலைக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.