வட்டி விகித குறைப்பு, பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்குவிப்பு
March 5, 2015
சேவை அறியும் உரிமைச் சட்டத்தை இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டுகோள்
March 11, 2015

2015-16ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் விளக்கக் கூட்டம்

chamberதமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் 2015-16ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் விளக்கக் கூட்டம் 09-03-2015-ம் நாள் வர்த்தக சங்கப் பவள விழா ஹட்சன் பேரவை அரங்கில் நடைபெற்றது.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் திரு N.ஜெகதீசன் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து வரவேற்புரையாற்றினார்.

மத்திய பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து வர்த்தக சங்க முதுநிலை தலைவர் திரு S.இரத்தினவேல் பேசுகையில், சிறு தொழிற்சாலைகளுக்கும், சிறு வணிக நிறுவனங்களுக்கும் போதிய நிதி கிடைக்காததால் நசிந்து வரும் நிலையை கவனத்தில் கொண்டு இதுவரை புறக்கணிக்கப்பட்டு வந்த இத்துறைக்கு ரூ.20,000 கோடி நிதி உதவி அளிக்கும் அறிவிப்பினையும், தொழில் துறையின் வளர்ச்சிக்கு மிக முக்கிய கட்டமைப்புகளை ஏற்படுத்த கடந்த ஆண்டை விட ரூ.70 ஆயிரம் கோடி கூடுதலாக இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்திருப்பதையும் குறிப்பிட்டு மத்திய பட்ஜெட்டை வரவேற்றுப் பேசினார்.

இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சென்னையைச் சார்ந்த தணிக்கையாளரும் தேசிய கவுன்சில் உறுப்பினருமான திரு G.சேகர் உரையாற்றியபொழுது, 126 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில் நேர்முக வரியை (Direct Tax) பொறுத்த வரை 3 கோடியே 54 லட்சம் பேர் தான் (3 சதவீதமே) இவ்வரியை செலுத்துகிறார்கள். 42,000 பேர் மட்டுமே ரூ.1 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளதாகத் தெரிவித்து வரி செலுத்துகின்றனர்.

நம் நாட்டின் மக்கள் தொகையில் ஒவ்வொரு நபருக்கும் பாதுகாப்பிற்காக (Internal and External Security) ஆண்டிற்கு ரூ.5,000 வரை அரசு செலவு செய்கிறது. அதாவது, மொத்த பட்ஜெட்டில் 20 முதல் 25 சதவீதம் வரை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவே செலவிடப்படுகிறது. 65 சதவீதம் அரசு ஊழியர்களின் சம்பளத்திற்காக ஒதுக்கப்படுகிறது. இதில் 30 சதவீதம் ஓய்வூதிய திட்டத்திற்காக செலவிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வரி வருவாயை மட்டுமே வருமானமாகப் பெற்று பல்வேறு திட்டங்களுக்கும் அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் பெண் குழந்தைகளின் நலன் கருதி, அஞ்சலகங்களில் சுகன்யா ஸ்மிருதி சேமிப்பு திட்டம் ஒன்றினை மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் முதலில் ரூ.1000 மட்டும் செலுத்தி கணக்குத் துவக்கி மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி வரலாம். இத்திட்டத்தில் சேமிக்கப்படும் பணத்திற்கு கிடைக்கும் வட்டிக்கு வருமான வரி கிடையாது. அதே போல் ஒருவர் மருத்துவ பாலிசியில் ஒரு நாளுக்கு ஒரு ரூபாய் செலுத்தி ஆண்டுக்கு 2,00,000 வரை பயன் பெற்றுக் கொள்ள முடியும். நம் நாட்டில் 1968-ம் ஆண்டிலேயே அறிமுகம் செய்யப்பட்ட வருங்கால வைப்புநிதி திட்டம் (PPF) குறித்து யாருக்கும் இன்று வரை விழிப்புணர்வு இல்லை. மிகவும் பயன் தரும் இத்திட்டத்தில் அனைவரும் சேமித்து மிகப்பெரிய பலனை அடையலாம் என்பன உள்ளிட்ட மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்தும் மிக விரிவாக விளக்கமளித்தார் தணிக்கையாளர் திரு G.சேகர்.

மத்திய பட்ஜெட்டில் மறைமுக வரிகளில் செய்யப் பெற்றுள்ள மாற்றங்கள் மற்றும் முக்கிய அம்சங்கள் குறித்து தணிக்கையாளர் திரு T.R.ஸ்ரீனிவாசன் உரையாற்றினார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அங்கத்தினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தணிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவாக, வர்த்தக சங்கச் செயலாளர்
திரு J.ராஜமோகன் நன்றி கூறினார்.