“சரக்கு மற்றும் சேவை வரி” அமலாக்கத் தேதியை அறிவித்துள்ள மத்திய நிதி அமைச்சருக்கு நன்றி
December 23, 2014
மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சரை சந்தித்த நமது குழு
February 5, 2015

குடியரசு தின சிறப்புரை

Republic Day Celebration - Photo26.01.2015-ம் நாள் திங்கட்கிழமை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க வளாகத்தில் காலை 8.30 மணியளவில் நம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து வர்த்தக சங்க மெப்கோ சிற்றவை அரங்கில் நடைபெற்ற இந்தியத் திருநாட்டின்66-வது ஆண்டு குடியரசு தின விழாவில் நம் சங்கத் தலைவர் திரு. N.ஜெகதீசன்ஆற்றிய உரை

தொழில்வணிக மேம்பாட்டிற்காகவும், பொது நலனுக்காகவும் 90ஆண்டுகளாகத் தொடர்ந்து போற்றுதற்குரிய முறையில் அரும்பணி ஆற்றிவரும் பாரம்பரியமிக்க நமது தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் நடைபெறும் நமது இந்தியத் திருநாட்டின் 66-வது குடியரசு தின விழாவிற்கு வருகை புரிந்துள்ள உங்கள் அனைவருக்கும் எனது காலை வணக்கத்தையும், புத்தாண்டு நல் வாழ்த்துக்களையும் தெரிவித்து வரவேற்பதில்
பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நாட்டின் பொருளாதாரம் வேகமான வளர்ச்சி கண்டு வருவது வரவேற்கத்தக்கது:

துணிச்சலான வரிச் சீர்திருத்தங்கள், உறுதியான கொள்கை முடிவுகள், நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் போன்றவை காரணமாக பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான புதிய மத்திய அரசால் 2013-2014-ம் ஆண்டில் 4.7 சதவீதமாக இருந்த நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2014-15-ம் ஆண்டில் கணிசமாக அதிகரிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் செல்லத் திட்டமான Make in India (இந்தியாவில் தயாரியுங்கள்) திட்டத்தின்படி அந்நிய நேரடி முதலீடுகளை (Foreign Direct Invesment) அதிகரிப்பதற்காக விதிமுறைகளைத் தளர்த்துவது, தயாரிப்புத் துறைக்கு தேவையான ஊக்கமளிப்பதுஆகிய முடிவுகளை மத்திய அரசு சமீபத்தில் எடுத்ததின் காரணமாக தயாரிப்புத் துறையும், சேவைத் துறையும் நல்ல வளர்ச்சி கண்டு வருகின்றன. இன்னும் பெரிய வளர்ச்சியை எதிர்நோக்கியுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரியை 01.04.2016 முதல் அமலாக்கம் செய்யப்படும் என அறிவித்து எடுக்கப்பட்டு வரும் துரிதநடவடிக்கைகள், தொழிலாளர் நலச் சட்டங்களில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்திலும் நடைமுறைகளிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள், காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு அளவு அதிகரிக்கப்பட இருப்பது, இரயில்வே, பாதுகாப்பு போன்ற முக்கிய அரசுத் துறைகளில் சில பிரிவுகளில் அந்நிய நேரடி முதலீட்டினை அனுமதிக்க உள்ளது, புதிய இரயில் திட்டங்களை கொண்டுவருவதற்கு மாநில அரசுகளுடன் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இரயில்வே அமைச்சகம் மேற்கொள்ளவிருப்பது, நஷ்டத்தில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனங்களை மூடுவதற்குப் பதிலாக தனியார் வசம் ஒப்படைப்பது போன்ற ஆரோக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டதின் காரணமாக நாட்டின் பொருளாதாரம் சரிவிலிருந்து மீட்கப்பட்டு வேகமாக வளர்ச்சியை நோக்கிச் செல்வது மிகுந்த மனநிறைவினைத் தருவதாக உள்ளது.

ஓராண்டுக்கு முன்னர் சுமார் 7 சதவீதமாக இருந்த பண வீக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. ஏற்றுமதி வளர்ச்சி கடந்த ஓராண்டில் 1.8 சதவீதத்திலிருந்து 4.1 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. 2013-14-ம் நிதி ஆண்டில் அந்நிய செலாவணிகையிருப்பு 29,000 கோடி டாலர் அதிகரித்துள்ளது. பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் ஐந்து மாதங்களில் 11.5 கோடி புதிய வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக கருதப்படும் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் (Sensex) இது வரை கண்டிராத அளவு 30,000 புள்ளிகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஆரோக்கியமான நிலை தொடருமானால் நம் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரவளர்ச்சி(Gross Domestic Product) 2015-ம் ஆண்டில் 6.3 சதவீதமாக இருக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆனால். . . .!

சீனா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிடும்போது நம் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை மேலும் கணிசமாக அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். அசுர வளர்ச்சி கண்டு வரும் சீனாவுடனான நம் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்ற ஆண்டில் அந்நாட்டுடனான வர்த்தக பற்றாக்குறை தொடர்ந்து பெருகி வருகிறது. இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் எடுத்த ஆய்வின்படி இந்தியாவில் இன்னமும் 34 கோடி ஆதரவற்ற ஏழை மக்கள் (Destitute People) வாழ்கிறார்கள்.

தெற்காசியாவில் ஆப்கானிஸ்தானுக்கு அடுத்து இந்தியாவில்தான் ஏழை மக்கள் அதிகம் வாழ்கிறார்கள். தொழில் வளர்ச்சி பெரும்பாலும் பெரிய நகர்ப்புறங்களிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே இருப்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணம். மும்பை, டில்லி, சென்னை, கொல்கட்டா, அகமதாபாத், பெங்களூரு, ஹைதராபாத் போன்ற மெட்ரோ பாலிடன் நகரங்களிலும் அவற்றின் புறநகர் பகுதிகளில் மட்டுமே தொழில்கள் குறிப்பாக பெரும் தொழில்களும், கனரக தொழில்களும் அமைக்கப்படுகின்றன. இதனால் பட்டதாரிகள் குறிப்பாக தொழில்நுட்ப பட்டதாரிகள் பணியில் சேர மாநில தலைநகரங்களுக்கும் இதர பெரு நகரங்களுக்கும் செல்ல வேண்டிய கட்டாயமேற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு நாடெங்கிலும் அனைத்து நவீன கட்டமைப்புகளையும் கொண்ட 100 ஸ்மார்ட் நகரங்களை (Smart Cities) உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. தமிழகத்தில் மதுரை மற்றும் இதர தென்மாவட்டங்கள் தொழில் வளர்ச்சியில் பின்தங்கி வருவதற்கு கட்டமைப்பு வசதிகுறைபாடு தொழில் முதலீடுகளுக்கு பெரும் தடையாக இருந்து வருவதே காரணம். நமது சங்கம் கடந்த பல ஆண்டுகளாக தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் குறித்து மத்திய மாநில அரசுகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி பல்வேறு கட்டமைப்புகளைப் பெற்றுத் தருவது உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். தென் மாவட்டங்களின் நுழைவுவாயிலாக கருதப்படும் தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான மதுரையை, ஸ்மார்ட் நகரமாக மாற்றப்பட உள்ள நகரங்கள் பட்டியலில் சேர்க்கவேண்டுமென மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.வெங்கையா நாயுடு அவர்களிடமும், நம் மாநில முதலமைச்சர் உயர் திரு ஓ. பன்னீர் செல்வம் அவர்களிடமும் நமது சங்கம் வலியுறுத்தி உள்ளது. தென் மாவட்ட மக்களின் வெளிநாட்டுப் பயணத்திற்கும், வெளிநாட்டினர் தென் மாவட்டங்களுக்கு வருவதற்கும், இப்பகுதியில் சுற்றுலாத் துறை வளர்ச்சி பெறவும், அந்நியநேரடி முதலீடுகள் அதிக அளவில் வருவதற்கும், ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் அதிகரிக்கவும் மதுரை விமான நிலையத்தை இலங்கை தவிர பிற நாடுகளுடன் நம் நாடு மேற்கொண்டுள்ள இருவழி விமான சேவை ஒப்பந்தங்களில் (Bi-Lateral Airport Treaties) உடனடியாக சேர்க்கப்பட வேண்டிய அவசியம் குறித்து நம் சங்கம் கடந்த பலஆண்டுகளாக மத்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சரிடமும், உயர் அதிகாரிகளிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுவரை அந்த அமைச்சகத்தால் புறக்கணிக்கப்பட்டு வந்த இந்த கோரிக்கையை மத்தியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள திரு.நரேந்திர மோடியின் தலைமையிலான அரசின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.அசோக் கஜபதி ராஜு புசபதியிடம் நமது சங்கம் நேரடியாக வலியுறுத்தி உள்ளது. அனைத்து முக்கிய துறைகளிலும் வேகமான வளர்ச்சியைக் காண தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க உறுதிபூண்டுள்ள புதிய மத்திய அரசு தென் தமிழக மக்களின் இந்த மிக அத்தியாவசியமான கோரிக்கையை விரைவில் நிறைவேற்றும் என்று நம்புகிறேன்.

பாரதப் பிரதமரின் “தூய்மை இந்தியா” (Clean India) திட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்:

மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2-ம் நாள் இந்தியாவை ஐந்து ஆண்டுகளுக்குள் தூய்மையான
நாடாக உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன்“தூய்மை இந்தியா” திட்டத்தை பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.  4041 நகரங்களில் செயல்படுத்த இருக்கும் இத்திட்டத்திற்காக மத்திய நகர்புற மேம்பாட்டுத் துறை ரூ. 62 ஆயிரம் கோடியும், குடிநீர் மற்றும் சுகாதாரம் அமைச்சகம் சார்பில் ரூ. 1 லட்சத்து 34 ஆயிரம் கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. தூய்மை இந்தியா என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. சுகாதாரமின்றி இருப்பதால் இந்தியாவில் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ரூ. 6500-ஐ மருத்துவ சிகிச்சைக்காக செலவிடுவதாக உலக சுகாதார மையம் கூறியுள்ளது. வெளிநாட்டு மக்கள் பொது இடத்தில் குப்பை கொட்டுவதோ, சிறுநீர் கழிப்பதோ கிடையாது. அந்த நல்ல பழக்கத்தை நாமும் கடைப்பிடிக்க வேண்டும். இந்த மாபெரும் பணியை அரசு மட்டுமே செய்திடுவது நிச்சயம் இயலாத காரியம்.

இத்திட்டப் பணியில் நம் சங்க உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் பங்கு கொண்டு 2019-ம் ஆண்டிற்குள் நம் நாட்டை மேலை நாடுகளுக்கு ஒப்ப சுத்தமான, சுகாதாரமான நாடாக மாற்றிட ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax- GST) 01.04.2016 முதல் அமலாக இருப்பது மிகுந்த மனநிறைவினைத் தருவதாக உள்ளது:

மத்திய அரசும், மாநில அரசுகளும் தற்போது அமல்படுத்தி வரும் கலால் வரி, சேவைவரி, மத்திய விற்பனை வரி, மாநில மதிப்புக் கூட்டு வரி, லாட்டரி மீதான வரி, நுழைவு வரி, கேளிக்கை வரி, ஆடம்பர வரி போன்ற பல மறைமுக வரிகளை ஒருங்கிணைத்து “ஒரே நாடு, ஒரே சந்தை, ஒரே வரி” என்ற கோட்பாடின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax- GST)யின் அமலாக்கம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தடைப்பட்டு வந்த சூழ்நிலையில் 01.04.2016 முதல் முற்போக்கான இப்புதிய வரி அமலாக்கப்பட உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ளது. நாட்டிலுள்ள தொழில் வணிகத் துறையினருக்கு மிகுந்த மகிழ்வினையும், உற்சாகத்தையும் அளிப்பதாக உள்ளது. இவ்வரி அமலாக்கப்பட்ட பின்னர் நம் நாட்டில் தொழில் வணிக முதலீடும், வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் வெகுவாக அதிகரிக்கும். நேர்மையாக வரி செலுத்தும் வணிகர்கள் ஊக்கம் பெறுவர். வரி மீது வரி இல்லை என்ற காரணத்தால் பொருட்களின் விலை குறைந்து நுகர்வோர் பயனடைவர்.இவ்வாறு பல்வேறு நன்மைகளை அள்ளித்தரக் கூடிய இந்த மிக நவீனமான வரிமுறையை விரைவாக அமல்படுத்தவேண்டும் என தொலைநோக்குப் பார்வையோடு முதலிலிருந்தே நமது சங்கம் மத்திய அரசை வலியுறுத்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வரி அமலாக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டாலும் தொழில் வணிகர்களுக்கு எந்த விதமான
நடைமுறைச் சிக்கல்களும் புதியவரிமுறையினால் ஏற்படக்கூடாது என்பதால் தொழில்வணிகத்துறையினரின் கருத்துக்களும் கேட்கப்பட்டு இவ்வரிச் சட்டம் இறுதியாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம். அத்துடன் கலால் வரிக்கு உட்பட்ட பொருட்களுக்கும் அவ்வரிக்கு உட்படாத வேளாண் பொருட்கள் போன்ற பொருட்களுக்கும் புதிய வரி முறையில் வரி விகிதங்களை நிர்ணயிப்பதிலும், வரி விலக்கு பெறும் பொருட்களைத் தீர்மானிப்பதிலும் தொழில் வணிகசங்கங்களின் கருத்துக்களைக் கேட்டு வரிச் சட்டத்தையும், விதிகளையும் இறுதியாக்கினால் தான் இவ்வரியின் அமலாக்கம் சுமூகமாக இருக்கும், “வரி ஏய்ப்பு, அதிகாரிகளின் கெடுபிடி, லஞ்ச லாவண்யம் ஆகியவற்றை ஒழிக்க வேண்டும்” என்ற இவ்வரி முறையின் குறிக்கோள் நிறைவேறும். எனவே அனைத்து மாநிலங்களிலும் உள்ள முக்கிய தொழில் வணிக சங்கங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஓர் உயர் நிலைக்குழுவினை உடனடியாக அமைக்கப்பட வேண்டுமென மத்திய நிதி அமைச்சரை நமது சங்கம் வலியுறுத்தி உள்ளது.

சேது சமுத்திர கால்வாய்த் திட்டமும் நதிநீர் இணைப்புத் திட்டமும், நீர் வழித் தடங்களும் நிறைவேற்றப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது மிகுந்த மனநிறைவைத் தருவதாக உள்ளது:

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்தியாவின் கிழக்குப் பகுதி துறைமுகங்களில் இருந்து இலங்கையைச் சுற்றாமல் நேராக மேற்குப் பகுதி துறைமுகங்களுக்கு செல்வதற்கான பயண நேரமும் எரிபொருள் செலவும் கணிசமாகக் குறையும். அத்துடன் தூத்துக்குடி துறைமுகம் சிறந்த கண்டெய்னர் துறைமுகமாக மாறி நாட்டிற்கு அந்நிய செலாவணி அதிகரிக்கும். கிழக்கு கடற்கரைப் பகுதியில் உள்ள சிறிய துறைமுகங்களான குளச்சல், கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர் மற்றும் மசூலிப்பட்டினம் துறைமுகங்கள் அபரிமிதமாக வளர்ச்சி காணவும்,பெரிய துறைமுகங்களில் நெரிசல் குறையவும் வாய்ப்புஏற்படும். நம் நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதிக்கும், மேற்கு கடற்கரை பகுதிக்கும் கப்பல்கள் நேரடியாக பயணித்திட இயலும். இந்திய கடற்படை கப்பல்களும் கடலோர காவல் கப்பல்களும் இந்தியக் கடல் எல்லைக்குள் உள்ள பாதையில் செல்ல முடியும் என்பதால் கடலோர பாதுகாப்பு சிறந்து விளங்கும். இத்திட்டம் நிறைவேற்றப்படும்போது தற்போது தொழில் வளர்ச்சியில் பின் தங்கி உள்ள தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொழில் பொருளாதார வளர்ச்சி பெருகும். நீண்ட காலமாக நமது சங்கம் வலியுறுத்தி வந்த இத்திட்டத்திற்கான பணிகள் 2008-ம் ஆண்டு துவங்கப்பட்டு பின்னர் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கேற்ப நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது ராமர் பாலத்திற்கு எந்த இடையூறும் இன்றி தகுந்த மாற்றுப் பாதை மூலம் இத்திட்டப்பணிகள் மீண்டும் துவங்கப்பட்டு நிறைவேற்றப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.நிதின் கட்காரி உறுதிபட தெரிவித்துள்ளது மிகுந்த மனநிறைவைத் தருவதாக உள்ளது.

நாட்டின் உணவு தானிய உற்பத்தியையும், பொருளாதார வளர்ச்சியையும் பன்மடங்கு அதிகரிக்கக் கூடிய நதி நீர் இணைப்புத் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திருமதி.உமா பாரதி உறுதி அளித்திருப்பது, இரயில் மற்றும் சாலைப் போக்குவரத்தில் காணப்படும் நெருக்கடியை குறைத்திட நாடு முழுவதும் 101 ஆறுகளை போக்குவரத்திற்கான நீர்வழித் தடங்களாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய நாடாளுமன்ற விவகார மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.வெங்கையா நாயுடு அறிவித்திருப்பதும் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும்.

தென் தமிழகத்தின் தொழில் பொருளாதார மேம்பாட்டிற்காக நமது சங்கம் எடுத்து வரும் முயற்சிகள்:

தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் பின்தங்கி உள்ள தென் மாவட்டங்களில் அதனை அதிகரிக்க நமது சங்கம்
தொடர்ந்து தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். மதுரை விமான நிலையத்திலிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு நேரடி விமான சேவை துவங்கப்படுவதற்காகவும், மதுரை விமான நிலையம் சரக்கு விமான நிலையமாக (Caro Customs Airport) செயல்பட வைப்பதற்கும் நாம் எடுத்து வரும் முயற்சிகள் தவிர வேளாண் பொருட்களும், உணவுப் பதனீட்டுப் பொருட்களும் அதிக அளவில் உற்பத்தியாகின்ற தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அவற்றை நீண்டகாலம் பாதுகாத்து கெடாமல் வைத்திட கதிரியக்க மையம் (Irradiation Plant) மதுரையில் அமைக்கப்பட வேண்டும், சிவகங்கை அருகில் அமைக்கப்பட்டுள்ள வாசனைத் திரவியங்களுக்கான தொழில் பூங்காவை (Spices Park) உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களிடமும், உணவுப் பதனீட்டு தொழில் துறை அமைச்சர் திருமதி.ஹர்சிம்ரெட் கவுல் பாதலிடமும் நமது சங்கம் வலியுறுத்தி உள்ளது. மதுரைக்கும், தூத்துக்குடிக்கும் இடையே உள்ள பகுதியில் அமைக்கப்பட உள்ள நவீன தொழில் வழித்தடம் (Industrial Corridor Excellence) துரிதப்படுத்த வேண்டும் என்றும், தென் மாவட்டங்களில் மத்திய அரசின் கனரக
தொழில்கள் குறிப்பாக பாதுகாப்புத் துறையில் கனரகத் தொழில்கள் (Defense Heavy Industries) அமைக்கப்பட வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளை நமது சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

வருகிற மே மாதம் தமிழக அரசு சென்னையில் நடத்துகின்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் இந்தத்
தொழில் வழித்தடத்தில் பிரதமரின் Make in India திட்டத்தின் கீழ் அதிக தொழில் முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என மாநில அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

நமது நம்பிக்கை:

நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்கான திட்டங்களை காலதாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்ற ஆரோக்கியமான எண்ணத்துடன் செயல்பட்டு வரும் திரு நரேந்திர மோடியின் சீரிய தலைமையிலான புதிய
மத்திய அரசு நமது கோரிக்கைகள் அனைத்தையும் விரைவில் நிறைவேற்றும் என்று நமது சங்கம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது. இதற்கு நம் சங்கம் என்றும் உறுதுணையாக இருக்கும்.

நம் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் நடைபெறும் நம் நாட்டின் 66-வது குடியரசு தின விழாவில் பங்கு பெற்றுள்ள உங்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன்
இப்புத்தாண்டில் தங்கள் தொழில் வணிகம் மேலும் சீருடனும், சிறப்புடனும் நடைபெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறேன்.