சென்னை- கன்னியாகுமரி இடையே புல்லட் ரயில்
September 3, 2014
தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் அறிவித்தமைக்கு மத்திய அரசுக்கு பாராட்டு
October 17, 2014

தொழிற்சாலைகளுக்கான 20 சதவீத மின் வெட்டு பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும்!

industryதமிழகத்தில் இரவு 10 மணி முதல் மறுநாள் மாலை 6 மணி வரை 20 சதவீத மின்வெட்டையும், உச்ச மின் தேவை நேரமான மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மொத்த மின் தேவையில் 10 சதவீதம் அளவிற்கே உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்திருப்பது தமிழகத்தில் தொழிற்சாலைகளின் உற்பத்தியை வெகுவாகப் பாதிக்கும். இவ்வாண்டு ஜூன் மாதம் முதல் மின்வெட்டு முழுவதுமாக விலக்கிக் கொண்ட பிறகு தங்கு தடையின்றி தொழில் உற்பத்திக்கும், ஒப்பந்தப்படி குறித்த காலத்தில் சரக்குகளை வாங்குவோருக்கு அனுப்புவதிலும் எந்த சிரமமும் இனி இருக்காது என்று தமிழகத்தில் உள்ள தொழில் துறையினர் வெகுவாக நம்பி இருந்த நிலையில் மின்வெட்டு மீண்டும் அறிமுகப்படுத்தியிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது.

மத்திய புள்ளியியல் துறையின் அறிக்கையின்படி 2012-2013-ம் ஆண்டில் மாநிலங்களின் உள்நாட்டு பொருள் உற்பத்தி வளர்ச்சி குறித்த தரவரிசைப் பட்டியலில் தமிழகம் 18-வது மாநிலமாக இடம் பெற்றிருப்பதைத் தொடர்ந்து தமிழகத்தில் தொழில், பொருளாதார வளர்ச்சியை உத்வேகப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இந்த மின்வெட்டு குந்தகம் விளைவிக்கக் கூடும்.

உயர் மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மின்வெட்டு குறைந்த மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கும் நாளடைவில் நீட்டிக்கப்பட்டால் சிறு தொழில்களின் தொடர் உற்பத்திக்கும் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு அளிப்பதற்கும் அது தடையாக இருக்கக் கூடும்.

மின்வெட்டு அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தொழில், வர்த்தகம் மற்றும் வீட்டு உபயோக மின் இணைப்புகளுக்கான கட்டணத்தை 15 முதல் 31 சதவீதம் வரை உயர்த்துவதென முடிவு செய்து அதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. தொழில் துறையின் சிரமங்களை மேலும் அதிகரிப்பதாக உள்ளது.

இக்கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டால் தொழிற்சாலைக்களுக்கான மின் கட்டணம் சுமார் 30 சதவீதம் உயர்ந்து அதற்கேற்ப உற்பத்திச் செலவு அதிகரித்து பிற மாநிலங்களில் உள்ள சிறு தொழிற்சாலைகளுடன் நம் மாநிலத்தில் உள்ள சிறு தொழில்கள் போட்டியிட்டு சரக்குகளை சந்தைப்படுத்த இயலாது போய்விடும். எனவே, நமது மாநிலத்தின் தொழில் உற்பத்திக்கும், ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் ஏற்பட இருக்கும் பாதகமான விளைவுகளைக் கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மேற்கொண்டுள்ள மின்வெட்டு அறிவிப்பையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் முடிவு செய்துள்ள மின் கட்டண உயர்வினையும் நிறுத்தி வைத்து பிற மாநிலங்களில் இருந்தும் நம் மாநிலத்தில் அதிகத் திறன் கொண்ட ஜெனரேட்டர்கள் மூலம் சுயமாக மின் உற்பத்தி செய்து பயன்படுத்தும் பெரும் தொழிற்சாலைகளிடம் இருந்து அதிகப்படியாக மின்சாரத்தை கொள்முதல் செய்தும் தற்போது ஏற்பட்டுள்ள மின் உற்பத்தி குறைபாட்டை ஈடுகட்ட முயற்சிகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு அறிவுறுத்த வேண்டியது அவசியமாகும்.