ஒரு நிறுவனத்தில் மனிதவளத் துறையின் பணிகள் மகத்தானது ! தலைவர் N.ஜெகதீசன்
August 9, 2014
சென்னை- கன்னியாகுமரி இடையே புல்லட் ரயில்
September 3, 2014

அமெரிக்காவுடனான இருவழி தொழில் வர்த்தக வாய்ப்புகள் குறித்த கலந்துரையாடல்

USதமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் அமெரிக்க ஐக்கிய நாட்டுடனான இருவழி தொழில் வர்த்தக வாய்ப்புகள் மற்றும் முதலீடுகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் மதுரையில் நமது சங்கத்தின் மெப்கோ சிற்றவை அரங்கில் இன்று (22.08.2014) நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னை அமெரிக்க கான்சுலேட்டின் வர்த்தக சேவைப் பிரிவின் முதன்மை வர்த்தக அதிகாரி திரு.ஜான் ஃபிளமிங் மற்றும் முதுநிலை வர்த்தக சிறப்பு அதிகாரி திருமதி மாலா வெங்கட் ஆகியோர் நேரிடையாகவும், அமெரிக்க வர்த்தகத் துறை முதுநிலை சர்வதேச பொருளாதார வல்லுநர் டாக்டர் அப்துல் காதர் ஷேக் வாஷிங்டன் DC-யிலிருந்து ஸ்கைப் (Skype) தொழில் நுட்பத்தின் மூலம் காணொலி காட்சியில் உரையாற்றினர்.

சங்கத்தின் தலைவர் திரு N.ஜெகதீசன் தனது வரவேற்புரையில் ஆன்லைன் மூலம் சர்வதேச வர்த்தகத்தை குறிப்பாக அமெரிக்காவுடனான இருவழி வர்த்தகத்தை பெருக்க வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தினார். சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு S.இரத்தினவேல் தனது உரையில் தொழிலதிபர்கள் குறிப்பாக சிறு தொழிலதிபர்கள் ஒருங்கிணைந்து பொதுவான சின்னத்துடன் (Commen Branding) தங்கள் உற்பத்திப் பொருட்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் விற்றுப் பயன்பெறத் தேவையான முயற்சிகளை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் எடுத்துவருவதாகக் குறிப்பிட்டார்.

வாஷிங்டன்னிலிருந்து ஸ்கைப் தொழில் நுட்பத்தின் மூலம் கூட்ட அரங்கின் திரையில் தோன்றி உரையாற்றிய திரு.அப்துல் காதர் ஷேக் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய அறிந்துகொள்ள வேண்டிய பல்வேறு நடைமுறைகள், வாய்ப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து விளக்கம் அளித்தார். அமெரிக்க சுங்கத் துறை நடைமுறைகள் குறித்து http://www.cbp.gov என்ற இணையதளத்திலும், சுங்கத் தீர்வைகள் குறித்து http://www.usitc.gov என்ற இணையதளத்திலும் அனைத்து விபரங்களையும் பெற முடியும். http://www.thomasnet.com என்ற இணையதளத்தின் மூலம் அமெரிக்காவில் உள்ள 6,07,000 கம்பெனிகள், அவை உற்பத்தி செய்யும் பொருட்கள் குறித்த விபரங்களைப் பெறலாம். அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் 97 சதவீதம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் என்றும், அமெரிக்காவில் உள்ள 30 மில்லியன் கம்பெனிகளில் ஒரு சதவீத அளவு கம்பெனிகள் மட்டுமே ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளன. உலக அளவில் அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா 19- வது இடத்திலும், இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா 10-வது இடத்திலும் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

திரு.ஜான் ஃபிளமிங் தனது உரையில் இந்தியாவில் உள்ள தொழில் வணிகத் துறையினருக்கு அமெரிக்காவுடன் தொழில் வர்த்தகத்தை மேற்கொள்ளத் தேவையான அனைத்து விபரங்களையும் இந்தியாவில் மதுரையில் முதலாவதாகவும், பின்னர் 12 இதர நகரங்களிலும் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்க வர்த்தக மையங்கள் (American Business Corners) அளித்து வருவதாகத் தெரிவித்தார்.