மத்திய பட்ஜெட்டில் பொருளாதார முன்னேற்றத்திற்கு உத்வேகம் அளிக்கக்கூடிய பல்வேறு திட்டங்கள்
July 10, 2014
பின்தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க தமிழக முதல்வர் அறிவித்துள்ள திட்டங்களுக்கு பாராட்டு
July 25, 2014

2014-2015 -ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் விளக்கக் கூட்டம்

Uதமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கமும் வேளாண் உணவுத் தொழில் வர்த்தக சங்கமும் இணைந்து 2014- 2015 -ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் பற்றிய விளக்கக் கூட்டம் ஒன்றினை 23.07.2014 அன்று மதுரையில் உள்ள வர்த்தக சங்கப் பேரவை அரங்கில் நடத்தின.

வர்த்தக சங்கத் தலைவர் திருN.ஜெகதீசன் வரவேற்புரை நிகழ்த்தினார். வேளாண் உணவுத் தொழில் வர்த்தக சங்கத் தலைவர் திரு S.இரத்தினவேல் தனது சிறப்புரையில் நாட்டின் ஒட்டுமொத்த பொருள் உற்பத்தியில் ஆறில் ஒரு பங்கைத்தரும் வேளாண்மைக்கு இந்தப் பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயக் கடன் பெறுவதில் விவசாயிகள் அனுபவிக்கும் சிரமத்தைக் கருத்தில் கொண்டு அவர்கள் கடன் பெறுவதை எளிதாக்க நபார்டு வங்கி மூலம் நாடு முழுவதும் 5 லட்சம் குழுக்கள் ஏற்படுத்தப்பட உள்ளதும், வேளாண் உற்பத்திக்கு பேருதவி புரியக்கூடிய நதிநீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த உறுதி அளித்து, விரிவான திட்ட மதிப்பீடு செய்வதற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதும் வெகுவாகப் பாராட்டத்தக்கது என்று குறிப்பிட்டார்.

சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்த இந்த ஆண்டுக்குள் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்ஜெட்டில் உறுதி அளிக்கப்பட்டிருந்தாலும் புதிய ஒருங்கிணைந்த வரிச் சட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்று தெரிவித்தார்.

சென்னையைச் சார்ந்த பிரபல தணிக்கையாளர் திரு V.முரளி தனது உரையில் தனி நபர் வருமானம் வரி விலக்கு வரம்பு ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 2.5 லட்சமாகவும் மூத்த குடிமக்களுக்கான வரம்பு ரூ. 2.5 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதுவரை எந்த நிதி அமைச்சரும் வருமான வரி விலக்கு வரம்பை ரூ.50 ஆயிரம் அளவிற்கு, உயர்த்தவில்லை. வருமான வரிச் சட்டப் பிரிவு 87A-ன் படி அளிக்கப்பட்டுள்ள வரிச் சலுகையைச் சேர்க்கும்போது இந்த வரம்புகள் மேலும் ரூ. 20 ஆயிரம் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டார்.

இச்சலுகையும் சட்டப்பிரிவு 80 C-ன் படி ஆயுள் காப்பிட்டு பிரீமியம், தொழிலாளர் வைப்பு நிதி, பங்கு முதலீடு போன்றவற்றிற்கான கழிவு ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 1.50 லட்சமாக அதிகரிக்கப்பட்டிருப்பதும் மக்களிடையே சேமிப்பை அதிகரிக்கச் செய்யும். ஒப்பந்ததாரர் உள்ளிட்ட பிற செலவினங்களுக்கு வரிப் பிடித்தம் செய்து (TDS) அரசிற்கு செலுத்த வேண்டியதை அந்த ஆண்டுக்குள் செலுத்தத் தவறினால் அச்செலவு முழுவதும் 100 சதவீதம் செலவாக அனுமதிக்கப்படாது என்பதை இந்தப் பட்ஜெட்டில் மேற்கண்ட செலவுகள் 30 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். நேர்முக வரிகள் குறித்து பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு இதர மாற்றங்கள் குறித்தும் அவர் விரிவாக தெரிவித்து தேவையான விளக்கம் அளித்தார்.

சென்னை 3-வது பிரிவு மத்திய கலால் மற்றும் சேவை வரித்துறை ஆணையர் திருமதி R. பாக்கியதேவி பட்ஜெட்டில் வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் பதப்படுத்தப்படும் உணவுத் தொழிலுக்கான இயந்திரங்கள் மீதான கலால் வரி விகிதம் 10 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. காலணிகள் மீதான கலால் வரியும், LCD மற்றும் LED பானல்களுக்கான குறிப்பிட்ட பாகங்கள் மீதான சுங்க வரியும் குறைக்கப்பட்டுள்ளது. பாயிண்ட் ஆப் டாக்சேஷன் மற்றும் பிளேஸ் ஆப் ரிமூவல் நடைமுறைகளில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சேவை வரியை பொருத்தவரை இணைய தளத்தின் மூலம் விளம்பரம் செய்வது அதிகரித்து வருவதன் காரணமாக அந்த விளம்பரமும், கைபேசிகள் மற்றும் வாடகை கார்களில் விளம்பரம் செய்வது ஆகியவையும் சேவை வரி விதிப்பின் கீழ் கொண்டு வரப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.