இயற்கை வளங்களை பாதுகாக்கும் யு.எஸ்! BISCOVER AMERICA சிறப்பு கட்டுரை
June 27, 2014
மத்திய பட்ஜெட்டில் பொருளாதார முன்னேற்றத்திற்கு உத்வேகம் அளிக்கக்கூடிய பல்வேறு திட்டங்கள்
July 10, 2014

இந்திய ரயில்வே பட்ஜெட் ஆற்றல் மிகுந்தது! நமது சங்கம் கருத்து

sanandagowdaஇந்திய இரயில்வேயில் இதுவரை புதிய திட்டங்களை அறிவிப்பதில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி அவற்றை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தப்படாத காரணத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இதுவரை நிறைவேற்றப்படாமல் இருக்கும் 359 இரயில் திட்டங்களை நிறைவேற்றிட ரூ. 1,87,000 கோடி தேவையுள்ளதாகவும், எனவே புதிய இரயில் பாதை திட்டங்களை விட இரயில்வேக்கு மேலும் அதிக அளவில் வருமானம் கிடைக்கக்கூடிய இரட்டை மற்றும் மூன்றாவது அகல இரயில் பாதைத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று 2014-2015 ஆண்டிற்கான இரயில்வே பட்ஜெட்டில் இரயில்வே அமைச்சர் திரு.சதானயத கவுடா அறிவித்திருப்பது உண்மை நிலைமையை அவர் நன்கு உணர்ந்திருப்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.

அதன் காரணமாக தென்னக இரயில்வேயிலேயே மிக அதிகமான பயன்பாட்டில் உள்ள செங்கல்பட்டு-விழுப்புரம், விழுப்புரம்-திண்டுக்கல் மற்றும் மதுரை-கன்னியாகுமரி இடையே இரட்டை அகல இரயில் பாதைத் திட்டத்திற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டினை இரயில்வே நிர்வாகம் உடனடியாக ஒதுக்கீடு செய்து திட்டம் முழுமையாக விரைவில் நிறைவேறச் செய்திடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இரயில்வே நிர்வாகத்தின் கீழ் உள்ள இதர பொதுத்துறை நிறுவனங்களின் ஆதாயம், உள்நாட்டு மற்றும் அந்நிய நேரடி முதலீடு, தனியார்-அரசு கூட்டு போன்றவற்றின் மூலம் கூடுதல் நிதி பெற திட்டமிட்டுள்ளதும், நாட்டிலுள்ள முக்கிய நகரங்களை வைர நாற்கர இரயில் திட்டத்தின் மூலம் இணைப்பது போன்ற முற்போக்கான திட்டங்கள் இப்பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பதும் பாராட்டத்தக்கது.

ஷாலிமார்-சென்னை மற்றும் ஜெய்ப்பூர்-மதுரை பிரீமியம் இரயில்கள் மற்றும் விசாகப்பட்டினம்-சென்னை வாராந்திர விரைவு இரயில் ஆகியவை தவிர, வேறு தமிழகத்திற்கான எந்த இரயிலும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ஜனசாதாரண இரயில்கள், பிரீமியம் இரயில்கள், ஏ.சி. இரயில்கள், எக்ஸ்பிரஸ் இரயில்கள் போன்ற புதிய இரயில்கள் பட்டியலில் இடம் பெறவில்லை.

இரயில்வே துறையின் செயல்பாடுகளை அதிக அளவில் கணினிமயமாக்குவது மற்றும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கடந்த ஐந்தாண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தியதற்கு ஏற்ப இரயில் நிலையங்கள், இதர இரயில்வே கட்டிடங்களின் கூரைகளிலும், நிலங்களிலும் சூரிய சக்தி மின் உற்பத்தி செய்து பயன்படுத்துவது போன்ற பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. நவீனமயமாக்குதல், சுகாதாரம், பயணிகள் பாதுகாப்பு மற்றும் வசதிகள் போன்றவற்றிற்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளித்து திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது.

மொத்தத்தில், பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான புதிய மத்திய அரசு பொறுப்பேற்ற ஒரு மாத காலத்திற்குள் வெளியிடப்பட்டுள்ள இந்த இரயில்வே பட்ஜெட்டில் இந்திய இரயில்வேயை வலுவான, திறமையான, மக்களின் இரயில் போக்குவரத்து தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஆற்றல் மிகுந்த நிறுவனமாக மாற்றுவதற்கான பல திட்டங்கள் உள்ளன.