அமெரிக்காவை அணுகுங்கள்
March 5, 2014
இந்திய-அமெரிக்க பொருளாதார வளர்ச்சியில் பெண் தொழில் முனைவோர் முக்கியப் பங்கு! ஜெனிஃபர்
March 9, 2014

அமெரிக்கா – இந்தியா இடையிலான வர்த்தகம் 100 பில்லியன் டாலர்களை எட்டும்

inagurationஅமெரிக்கா – இந்தியா இடையிலான வர்த்தகம் 100 பில்லியன் டாலர்களை எட்டும் என்று புது தில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் வர்த்தகப் பிரிவு அதிகாரி ஜான் எம்.மெக்காஸ்லின் கூறினார்.

மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், அமெரிக்க தூதரகத்தின் வர்த்தக சேவைப் பிரிவு ஆகிய இணைந்து “அமெரிக்காவை அணுகுங்கள்” என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை நடத்திய தொழில்-கல்வி வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கில் அவர் பேசியது: இந்தியாவில் உள்ள இரண்டாம் நிலை நகரங்களைச் சேர்ந்த உற்பத்தியாளர்களுக்கு அமெரிக்காவில் ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. மதுரை போன்ற நகரங்களில் அமெரிக்கா – இந்தியா இடையிலான வர்த்தகத்தை ஊக்கப்படுத்துவதற்கு பல்வேறு செயல்திட்டங்களை வர்த்தக சேவைப் பிரிவு மேற்கொண்டு வருகிறது. இத்தகைய முயற்சிகளின் காரணமாக அமெரிக்கா – இந்தியா இடையிலான வர்த்தகம் விரைவில் 100 பில்லியன் டாலர்களை எட்டும் (சுமார் ரூ. 6 லட்சம் கோடி) என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாய்ப்புகளை தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும்விதமாக அமெரிக்க வர்த்தக மையங்கள் (ஏபிசி) துவங்கப்பட்டன. தற்போது இந்தியா முழுவதும் 12 இடங்களில் இம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவை அணுகுங்கள் என்ற கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. அமெரிக்காவில் முதலீடு செய்யும் நாடுகளில் மூன்றாவது இடத்துக்கு இந்தியா வரக்கூடிய நிலையில் இருக்கிறது.

அமெரிக்காவின் லாஸ்வேகஸ் நகரில் ஜூன் 18 முதல் 20 வரை சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. ஏறத்தாழ 900 நிறுவனங்கள் அரங்குகளை அமைக்கின்றன. இந்த கண்காட்சி புதிய வர்த்தக வாய்ப்புகளுக்கு உதவியாக இருக்கும் என்றார்.

சென்னை துணைத் தூதர் ஜெனிஃபர் மெக்கன்டையர்: அமெரிக்க அரசு மற்றும் இந்தியாவின் தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டு முயற்சி காரணமாக அமெரிக்கா-இந்தியா வர்த்தகம் வளர்ச்சி அடைந்துவருகிறது. கல்வியில் அமெரிக்கா-இந்தியா இடையே 10 ஆண்டுகளுக்கு மேலாக நல்லுறவு நீடித்துவருகிறது. ஏறத்தாழ 1 லட்சம் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படித்துவருகின்றனர். நடப்பு ஆண்டு மாணவர் விசா விண்ணப்பங்களில் 15 சதவீதம் தென்மாநிலங்களில் இருந்து வந்துள்ளது. இந்திய கல்வி நிறுவனங்களில் படிக்கும் அமெரிக்க மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது என்றார்.

அமெரிக்க துணைத் தூதரகத்தின் தென்னிந்தியாவுக்கான முதன்மை வர்த்தக அதிகாரி ஜேம்ஸ் கால்சன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முன்னாள் தலைவர் வி.நீதிமோகன் உள்ளிட்டோர் பேசினர். நிர்வாகிகள் சுபா பிரபாகரன், டி.எஸ்.ஜீயர் பாபு, ஜே.ராஜாமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.