புதுடில்லியில் அனைத்து வணிகர்களின் சம்மேளனம் நடத்தும் தேசிய மாநாடு ! விரைவில்..
February 13, 2014
அமெரிக்காவை அணுகுங்கள்
March 5, 2014

மத்திய இடைக்கால பட்ஜெட் – தொழில் வர்த்தகத் துறையினருக்கு ஏமாற்றம்

p.chithambaram1714ஒருங்கிணைந்த நேரடி வரித்தொகுப்பும், சிக்கல்கள் நிறைந்த கலால் வரி, சேவை வரி மற்றும் மாநில அளவிலான மதிப்புக் கூட்டு வரி போன்ற மறைமுக வரிகளை ஒரே வரியாக இணைத்து எளிமைப்படுத்திடும் சரக்கு மற்றும் சேவை வரியை 2014-2015-ம் ஆண்டு முதல் அமலாக்க மத்திய நிதியமைச்சர் திரு ப. சிதம்பரம் மத்திய இடைக்கால பட்ஜெட்டில் வெளிப்படுத்தியுள்ள ஆவல் வரவேற்கத்தக்கது.

நேரடி வரித் தொகுப்புக் குறித்து மக்கள் விவாதத்திற்காக முழு விபரங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக அறிவித்துள்ள மத்திய நிதி அமைச்சர் சரக்கு மற்றும் சேவை வரிக்கான மாதிரி சட்ட முன் வடிவினையும் இணையதளத்தில் வெளியிட்டு தொழில் வணிகத் துறையினரிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி முற்போக்கான அவ்வரி முறை குறித்து சிலருக்கு ஏற்பட்டுள்ள குழப்பத்தை நீக்கும் வகையில் பொது விவாதத்திற்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

இடைக்கால பட்ஜெட்டாக இருந்தாலும் தேக்க நிலையிலுள்ள நாட்டின் தொழில் உற்பத்தியை உத்வேகம் அடையச் செய்திட 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் புதிய அரசு வெளியிடப்போகும் 2014- 2015-ம் ஆண்டிற்கான முறையான பட்ஜெட் வரை காத்திராமல் தேவையான நடவடிக்கைகளையும், சலுகைகளையும் இந்தப் பட்ஜெட்டிலேயே நிதி அமைச்சர் அறிவித்திருக்க வேண்டும். உற்பத்திக்கான முதலீடு குறைந்து வருவதையும், தொழில் துறை வளர்ச்சி தேக்க நிலை அடைந்துள்ளதையும் உணர்ந்து ஆட்டோமொபைல், கைபேசிகள், சோப்புகள் போன்ற ஒரு சில குறிப்பிட்ட தொழில்களுக்கு மட்டும் கலால் வரி விகிதத்தைக் குறைத்துள்ள நிதியமைச்சர், நாட்டின் ஒட்டுமொத்தத் தொழில் துறையும் பயனடையும் வகையில் 12 சதவீத வரிக்கு உட்படும் அனைத்துத் தொழில்களுக்கும் 2008-ம் ஆண்டு நிதி நெருக்கடி ஏற்பட்டபோது வரி விகிதத்தை 8 சதவீதமாக குறைத்ததுபோல இப்போதும் வரி விகிதத்தை 8 சதவீதமாக 30.06.2014 வரையாவது குறைத்து 2014-2015-ம் ஆண்டிற்கான முறையான பட்ஜெட்டில் மறுபரிசீலனை செய்திட இந்த இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு செய்திருக்கலாம்.

தமிழக முதலமைச்சரும், வேளாண் உணவுத் தொழில் வர்த்தக சங்கமும் விடுத்த வேண்டுகோளை ஏற்று பொது மற்றும் தனியார் கிட்டங்கிகளில் சேமித்து வைக்கப்படும் அரிசிக்கான சேமிப்புக் கட்டணத்தின் மீதான சேவை வரிக்கு விலக்கு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும் கிட்டங்கிகளில் அரிசி மற்றும் இதர வேளாண் உற்பத்திப் பொருட்களை சேமித்து வைக்க கிட்டங்கிகளுக்கான வாடகை மீதான சேவை வரி விதிக்கப்படுகிறது. இந்த சேவை வரி விதிப்பிலிருந்தும் அரிசி முதலான வேளாண் விளைபொருள்களுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம்.

சேவை வரி விதிப்பில் 2012-ம் ஆண்டு எதிர்மறைப் பட்டியல் முறை அறிமுகப்படுத்தியதால்தான் அரிசியில் இக்குழப்பம் ஏற்பட்டது. இதுபோன்ற பல பிரச்னைகள் உள்ளன. எதிர்மறைப் பட்டியலில் எந்தெந்த சேவைகள் வரி விதிப்பிற்கு உட்படுகின்றன என்பதற்கு பதிலாக எந்தெந்த சேவைகள் வரி விலக்கு பெறுகின்றன என்பது மட்டும் பட்டியலிடப்பட்டு மீதமுள்ள அனைத்து சேவைகளும் வரி விதிப்பிற்கு உட்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தாங்கள் ஈடுபட்டுள்ள நடவடிக்கைகளும், பணிகளும் சேவை வரிக்கு உட்படுகின்றனவா, இல்லையா என்பதை சரிவரப் புரிந்துகொண்டு செயல்பட இயலாமல் தொழில் வணிகத் துறையினரும், பிற பிரிவினரும் மிகுந்த குழப்பத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

எனவே சேவை வரி விதிப்பிற்கு உட்படும் சேவைகளை மட்டும் பட்டியலிடும் பழைய முறையை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து இந்த இடைக்கால பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அறிவிப்பு செய்திருக்க வேண்டும் அல்லது 2014-2015-ம் ஆண்டிற்கான முறையான மத்திய பட்ஜெட்டில் அது பரிசீலிக்கப்படும் என்றாவது தெரிவித்திருக்க வேண்டும்.

மொத்தத்தில் தேக்கமடைந்துள்ள தொழில் துறையை ஊக்குவிக்கும் வகையில் இந்தப் பட்ஜெட்டில்
எந்தவித குறிப்பிடத்தக்க சலுகைகளும், திட்டங்களும் இல்லை என்பது தொழில்வர்த்தக
துறையினருக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.