தமிழக அரசின் 2014-15 பட்ஜெட்டிற்கு நமது சங்கத்தின் ஆலோசனைகள்
February 11, 2014
புதுடில்லியில் அனைத்து வணிகர்களின் சம்மேளனம் நடத்தும் தேசிய மாநாடு ! விரைவில்..
February 13, 2014

2014-2015-ம் ஆண்டிற்கான இடைக்கால இரயில்வே பட்ஜெட் – சங்கத்தின் கருத்து

Railwayமத்திய இரயில்வே அமைச்சர் திரு.மல்லிகார்ஜூன் கார்கே சமர்ப்பித்துள்ள 2014-2015-ம் ஆண்டிற்கான இடைக்கால இரயில்வே பட்ஜெட்டில் 17 பிரீமியம் இரயில்கள் (கூடுதல் கட்டண இரயில்கள்) அறிவிக்கப்பட்டிருந்தாலும், காமக்கியா (அஸாம்)-சென்னை பிரீமியம் இரயிலைத் தவிர வேறு எந்த பிரீமியம் இரயிலும் தமிழகத்திற்கு குறிப்பாக, நம் நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளுக்கு வெகு குறைவான இரயில் வசதி உள்ள தென் தமிழகத்திற்கு அறிவிக்கப்படாதது வருத்தமளிப்பதாக உள்ளது.

இரயில்வே பட்ஜெட்டில் நாட்டின் வடபகுதிகளில் மூன்று விரைவு இரயில்கள் நீடிக்கப்பட்டிருந்தாலும் தென் மாவட்டங்களிலிருந்து குஜராத் மற்றும் இராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள நகரங்களுக்கு அடிக்கடி சென்று வரும் பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் பயணளிக்கும் வகையில் சென்னை-அகமதாபாத்-ஜோத்பூர் விரைவு இரயில்வே மதுரை வரை நீடிக்க வேண்டும் என்ற தமிடிநநாடு தொழில் வர்த்தக சங்கத்தின் நீண்ட கால கோரிக்கை ஏற்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

இருப்பினும் மன்னார்குடி-மயிலாடுதுறை, புனலூர்-கன்னியாகுமரி மற்றும் திருச்செந்தூர்-திருநெல்வேலி புதிய பாசஞ்சர் இரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது ஓரளவு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இந்த இரயில்வே பட்ஜெட்டின் மூலம் 38 புதிய விரைவு இரயில்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. தமிழகத்திற்கு சென்னை- பெங்களூரு தினசரி விரைவு இரயில், மன்னார்குடி-ஜோத்பூர் மற்றும் நாகர்கோவில் – கச்சேகுடா விரைவு இரயில்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் தென் தமிழகத்திற்கு எந்த புதிய விரைவு இரயிலும் அறிவிக்கப்படவில்லை.

பல்வேறு இரயில்வேத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு விரைவில் அறிவிக்கப்படும் என்பதால் தென்னக இரயில்வேயிலேயே மிக அதிகமான பயன்பாட்டில் உள்ள சென்னை-மதுரை மார்க்கத்தில் கூடுதலான இரயில்களை விரைவில் அறிமுகப்படுத்த ஏதுவாக விழுப்புரம்-திருச்சி மற்றும் திருச்சி-திண்டுக்கல் இடையே நடைபெற்று வரும் இரட்டை அகல இரயில் பாதைத் திட்டங்களுக்கு அதிக அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தென் தமிழக மக்கள் அதிக ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

அதே போல சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டு குறிப்பிடத்தக்கப் பணி ஏதும் இதுவரை நடைபெறாத முக்கிய இரயில் திட்டமான மதுரை-போடிநாயக்கனூர் அகல இரயில் பாதைத் திட்டத்திற்கும் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகமான எதிர்பார்ப்புகளுடன் தேர்தலுக்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ள இந்த இடைக்கால பட்ஜெட் தென் தமிழகத்தைப் பொறுத்தவரை ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது.