மதுரை விமான நிலையத்தில் மல்லிகைப் பூ விற்பனை நிலையம் திறப்பு
November 23, 2013
இது லஞ்ச லாவண்யத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் ! உடனே ரத்துசெய்யுமாறு வேண்டுகோள்
December 18, 2013

வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு.ஆனந்த் சர்மாவிற்கு பாராட்டு

Sharmaஇந்தியா மற்றும் இதர வளர்ந்து வரும் நாடுகளின் நன்மையை திறம்பட பாதுகாத்தமைக்காக வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு.ஆனந்த் சர்மாவிற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவில் நடைபெற்ற உலக வர்த்தக ஒப்பந்த நாடுகளின் அமைச்சர்களின் கூட்டத்தில் இந்தியா சமர்ப்பித்த வரைவு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.

உலக வர்த்தக அமைப்பின் விவசாயம் தொடர்பான வரைவு ஒப்பந்தத்தில் உணவு தானியங்களுக்கு அளிக்கப்படும் மானியத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வரம்பு காரணமாக இந்தியாவில் அமலாக்கப்படும் உணவு பாதுகாப்புத் திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், உணவு பாதுகாப்புத் திட்டங்கள் முழுமையாக செயல்படும் வரை மானியக் கட்டுப்பாட்டை முழுமையாகக் கைவிட வேண்டும் என வளரும் நாடுகள் சார்பாக நமது வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. ஆனந்த் சர்மா ஆணித்தரமாக வாதாடினார்.

நான்காண்டுகளுக்கு மட்டும் மானியக் கட்டுப்பாடுகளை நிறுத்தி வைக்கலாம் என்ற வளர்ந்த நாடுகளின் வாதத்தை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. நம் அமைச்சரின் திறமையான செயல்பாட்டால் வளர்ந்து வரும் நாடுகள் விவசாய மானியங்களைத் தொடரவும் தங்களுக்குத் தேவையான அளவு தானியங்களை கையிருப்பு வைத்திருக்கவும் 159 நாடுகள் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.

சிக்கலான ஏற்றுமதி, இறக்குமதி நடைமுறைகளையும் ஆவணங்களையும் ஆய்வு செய்து, எளிமைப்படுத்தி சரக்குகளை விரைவாக அனுப்பவும் பெறவும் தேவையான மாற்றங்களைச் செய்திட உறுப்பினர் நாடுகளுக்கு இந்த வரைவு ஒப்பந்தத்தில் அனுமதி அளிக்கப்பட்டிருப்பதின் காரணமாக நம் நாட்டின் ஏற்றுமதி குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளின் உற்பத்திப்பொருட்கள் ஏற்றுமதி உத்வேகம் பெறும்.

பல்வேறு வெளிநாட்டுச் சந்தைகளில் அவற்றினை வணிகம் செய்திடவும் நல்ல வாய்ப்பு ஏற்படும். சர்வதேச தர நிர்ணயங்கள், ஓற்றைச் சாளர (Single window clearence) முறை மற்றும் அழுகும் பொருட்களை விரைவாக அனுப்புதல் போன்றவற்றை நடைமுறைப்படுத்த ஊக்கமும், கால அவகாசமும் அளிக்கப்பட்டிருப்பது இந்த ஒப்பந்தத்தின் சிறப்பு அம்சமாகும். வர்த்தகத்தை தடையின்றி நடத்திட குழு (Committee on trade facilitation) ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதும், அக்குழுவிடம் உறுப்பினர் நாடுகள் தேவையான ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் பெற அனுமதிக்கப்பட்டிருப்பதும் பன்னாட்டு வர்த்தகம் பல்கிப் பெருகிட வழிவகுக்கும். சர்வதேச தர நிர்ணயங்களை அமல்படுத்த ஊக்கமும், கால அவகாசமும் அளிக்கப்பட்டிருப்பது வரவேற்க்கத்தக்கது.

பன்னாட்டு வர்த்தக நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டு வெளிப்படையான தன்மை உறுதி
செய்யப்படுவதின் காரணமாக உலகளாவிய வர்த்தகம் 1 லட்சம் கோடி டாலர் அளவிற்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்திய ஏற்றுமதியாளர்களின் நடைமுறைச் செலவுகள் வெகுவாக குறைவதோடு துறைமுகங்களில் கட்டணச் செலவுகளும் குறைவதால் தொழில் உற்பத்தியும், ஏறுமதியும் வெகுவாக அதிகரிக்கும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஒப்பந்தத்தினால் இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் உள்ள வேளாண் பெருமக்களும், நுகர்வோரும் மிகுந்த பயன் அடைவர்.

வளர்ந்து வரும் நாடுகளின் வேளாண்துறையினர் மற்றும் ஏற்றுமதியாளர்களின் நலன்களை நன்கு பாதுகாத்திடும் வகையில் நமது வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் செயல்பட்டிருப்பது மிகுந்த மனநிறைவினைத் தருவதாக உள்ளது.