இந்தியாவுடனான வர்த்தகத்தை மேலும் அதிகரிப்பதில் அமெரிக்கா தீவிரம்
July 4, 2013
ஜெட் ஏர்வேஸ் தலைவர் திரு. நரேஷ் கோயலுக்கு நமது சங்கத்தின் வேண்டுகோள்
July 31, 2013

உலக ஹெப்பாடிட்டஸ் தினத்தில் விழிப்புணர்வுக் கூட்டம்

27-hepatitisஉலக ஹெப்பாடிட்டஸ் தினத்தினை முன்னிட்டு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மதுரை அப்போலோ மருத்துவமனை மற்றும் மதுரை வாய்ஸ் தொண்டு நிறுவனம் ஆகியன இணைந்து கல்லீரலை பாதிக்கும் நோய்கள் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் 28.07.2013ம் நாளன்று வர்த்த சங்க மெப்கோ சிற்றவை அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வர்த்தக சங்கத்தலைவர் திரு. என். ஜெகதீசன் வரவேற்புரையாற்றினார். முதுநிலை தலைவர் திரு. எஸ். இரத்தினவேல் இந்நோய் குறித்த விழிப்புணர்வு எல்லோருக்கு அவசியம் என குறிப்பிட்டு உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மதுரை அப்போலோ மருத்துவமனையின் குடல் இயல் நிபுணர் டாக்டர் பி. ராஜேஸ் பிரபு கூறியதாவது, உடல் என்பது அற்புதமாக உருவாக்கப்பட்ட பொருளாகும். பல கோடி நரம்புகள், தசைகள், எலும்புகள், ரத்த நாளங்கள் என பின்னிப் பிணையப்பட்டதே மனித உடலாகும். உடலில் அமைந்துள்ள ஒவ்வொரு உறுப்பும் செயல்படுத்தும் தன்மை மிகவும் சிறப்பானதாகும்.

ஆனால் இன்று பலவகையான காரணங்களினால் உடல் உறுப்புகள் அதன் தன் செயல்களை செய்வதில் குறைபாடு ஏற்பட்டு அதனால் உடலானது பல வகைகளில் பாதிக்கப்படுகிறது. கல்லீரல் தான் மனித உடலில் மிகப்பெரிய சுரப்பியாகும். 1 கிலோ எடை கொண்ட இது மிகவும் மென்மையான உறுப்பாகும்.கல்லீரல் வயிற்றின் மேல் பகுதியில் வலது பக்கத்தில் அமைந்துள்ளது.

கல்லீரல் செல்களினால் ஆனது. பல ரத்த குழாய்கள் சூழ்ந்துள்ள இதனை சுறுசுறுப்பாக இயங்கும் ஒரு ரசாயன தொழிற்சாலைக்கு ஒப்பிடலாம். மாரடைப்பை தடுக்கும். நாம் உண்ணும் உணவு செரித்து அதிலுள்ள சத்துக்கள் அனைத்தும் உடலில் உள்ள ஒவ்வொரு பாகத்திற்கும் சென்றடைவதற்குள் சில மாற்றங்கள் நிகழ்கின்றன.

இந்த மாற்றங்களே வளர்சிதை மாற்றம் என்று அழைக்கப்படுகிறது. வளர்சிதை மாற்றங்களில் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. உட்கொள்ளும் கொழுப்பு சத்துள்ள உணவுப் பொருட்களை செரிப்பதற்கு பித்தநீர் மிகவும் அவசியமாகும். இந்த பித்த நீரை உற்பத்தி செய்வது கல்லீரல் தான். பொதுவாக கொழுப்பு சத்துள்ள உணவுகளை செரிக்காமல் ஆங்காங்கே படிந்து ரத்தத்தின் மூலம் எல்லா உறுப்புகளுக்கும் சென்றடைந்துவிடும். அதில் முக்கியமாக கொழுப்பு இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் இதயத்திற்கு தேவையான ரத்தம் செல்வதில்லை. இதனால் மாரடைப்பு வருகிறது. இந்த கொழுப்பை கல்லீரல் சுரக்கும் பித்த நீரானது கரைத்து விடுகிறது. இதனால் மாரடைப்பு வராமல் இருக்க கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது.

உடலுக்கு தேவையான வெப்பத்தை கல்லீரல் உற்பத்தி செய்கிறது. ரத்தம் உறைவதற்கு தேவையான பொருட்களையும் ரத்த நாளங்களுக்குள் ரத்தம் உறையாமல் இருக்க வேண்டிய பொருட்களையும் உற்பத்தி செய்கிறது. இரும்பு சத்து, வைட்டமின் பி12, வைட்டமின் ஏ ஆகியவற்றை சேமித்து வைத்துக்கொள்கிறது. இவ்வாறு உடலுக்கு ஊக்கமும் செயல் வேகமும் கொடுக்கிறது கல்லீரல்.

மேலும் முறையற்ற உணவு பழக்க வழக்கங்கள், நேரம் தவறி உண்பது, அளவுக்கு அதிகமாக உணவு சாப்பிடுவது, மது அருந்துவது, புகையிலை, பான்பராக் போடுவது, புகை பிடிப்பது, ஸ்டீராய்டு மாத்திரைகளை உட்கொள்வது முதலியவற்றால் கல்லீரல் வீக்கம் உண்டாகிறது.

வைரஸ் ஹெப்பாடிட்டீஸ் ஏ.பி.சி.டி.இ என்று பல வகைகள் உள்ளன. இதில் வைரஸ் ஹெப்பாடிட்டீஸ் பி அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

கல்லீரல் நோயாளிகள் தவிர்க்க வேண்டியவை

  1. அசைவ உணவுகள், எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள், சோடா உப்பு கலந்த உணவுகள், எளிதில் ஜீரணமாகாத உணவுகள், வேர்க்கடலை மற்றும் கிழங்கு வகைகள். மது, புகைப் பழகத்தை அறவே தவிர்க்க வேண்டும். முறையான உணவு பழங்களை கடைபிடிப்பது அவசியம். நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும்.
  2. நன்கு சுத்தமான நீரை அருந்த வேண்டும். தினமும் போதிய அளவு நீர் அருந்துவது நல்லது. தினமும் குறைந்தது 7 மணிநேரமாவது தூங்க வேண்டும். மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உப்பு, புளி நீக்க வேண்டும். அதிக அளவு கீரைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். ப்பாளி, வாழை, பேரிட்சை, திராட்சை, மாதுளை, கோதுமை, பார்லி கஞ்சி உட்கொள்ளலாம்.
  3. இளநீர், பதநீர், பதன நுங்கு, கரும்புச்சாறு, தேங்காய் பால் அருந்தலாம். மேலும் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தி கல்லீரலை பலப்படுத்த இந்திய மருத்துவ முறையில் பல மருந்துகள் உள்ளன. கல்லீரலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே கல்லீரலை பாதுகாத்து ஆரோக்கியமாக வாழ்வோம் என கூறினார்.

நிறைவாக மதுரை அப்போலோ மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் திரு.டி. முருகேசன் நன்றி கூறினார்.