விளை நிலங்கள் வீட்டுமனைகளாகிறது : மதுரை மாவட்டத்தின் அவலநிலை
June 8, 2013
கோலாம்பூர்-மதுரை இடையே நேரடி விமான சேவை
July 2, 2013

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் வர்த்தக தூதுக் குழு அமெரிக்கா பயணம்

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் வர்த்தக தூதுக் குழு, 12 நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறது.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் சர்வதேச வணிகக் கண்காட்சியில் பங்கேற்பது, பல்வேறு நாடுகளுடன் இருவழி வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வது ஆகியவற்றை முக்கியமாகக் கொண்டு இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, தொழில் வர்த்தக சங்கத்தின் முதுநிலைத் தலைவர் ஏ. ரத்தினவேல், தலைவர் என். ஜெகதீசன் ஆகியோர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூட்டாகக் கூறியது: பல்வேறு நாடுகளுக்கும் இடையே ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகம், முதலீடு அதிகரிக்கவும் வர்த்தக சங்கம் முனைப்புடன் செயலாற்றி வருகிறது. இலங்கை, மாலத் தீவு, சீனா, தென்ஆப்பிரிக்கா, அரபு நாடுகள் உள்பட 11 நாடுகளுக்கு சங்கத்தின் வர்த்தக தூதுக் குழு பயணம் மேற்கொண்டுள்ளது. இதன்மூலம், பல்வேறு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக, வர்த்தக சங்கத்தின் உறுப்பினர்கள் மலேசியா, இந்தோனேஷியா, இலங்கை ஆகிய நாடுகளில் தொழில் துவங்குவதற்கு இப்பயணம் அடிப்படையாக அமைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, வர்த்தக சங்கத்தின் 45 பேர் கொண்ட தூதுக் குழு அமெரிக்கா செல்கிறது.

சென்னை அமெரிக்க தூதரகத்தின் வர்த்தக சேவைப் பிரிவின் பிரதிநிதி ஒருவரும் இக் குழுவில் இடம் பெற்றுள்ளார். ஜூன் 20 முதல் 22 ஆம் தேதி வரை நியூயார்க் நகரில் நடைபெறும் சர்வதேச வணிகக் கண்காட்சியை இக்குழு பார்வையிடுகிறது. இக் கண்காட்சியில், 100 நாடுகளைச் சேர்ந்த உரிமை வணிகம் (ஃபிரான்சைஸ்) வழங்கும் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

அமெரிக்கா செல்லும் தூதுக் குழு, நியூயார்க் மேயர் அலுவலகத்தின் சர்வதேச வர்த்தகப் பிரிவு இயக்குநர் எலிசபெத் ரோஸ் டாலி, வாஷிங்டனில் உள்ள அமெரிக்க வர்த்தகத் துறை உலக அறிவாற்றல் மைய இயக்குநர் அப்துல் ஷேக் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்து, இருவழி வர்த்தக மேம்பாடு குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்ய உள்ளது.

2012 இல் அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையே 62.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு இருவழி வர்த்தகம் நடைபெற்றுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த வர்த்தகம் 40 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள், இந்த வர்த்தகம் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேளாண் சார்ந்த தொழில்கள், உணவு பதனீட்டுத் தொழில்கள், மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள், ஜவுளி, கட்டடத் தொழிற்கான இயந்திரங்கள், தங்கம் மற்றும் வைர நகைத் தயாரிப்பு, மதிப்புமிக்க கற்கள் மற்றும் உலோகங்கள், சுற்றுலா ஆகியவற்றில், இந்தியா-அமெரிக்கா இடையே இருவழி வர்த்தகத்துக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன.

அமெரிக்கா செல்லும் தூதுக் குழு மேற்குறிப்பிட்ட துறைகளில் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள தீவிர முயற்சி மேற்கொள்ளும் என்றனர்.