நம் இந்தியத் திருநாட்டின் 67-வது விடுதலை நாள் விழாவில்…
August 15, 2013
2013, நவம்பர் மாதம் 22-ம் நாள் முதல் மதுரை-துபாய் நேரடி விமான சேவை துவக்கம்
October 18, 2013

நமது மாநிலத்திற்கான விமான திட்டங்களை மத்திய அரசிடம் வலியுறுத்திப் பெற அமைச்சரை நியமிக்க முதலமைச்சருக்கு வேண்டுகோள்

maduraiairportதென் தமிழகத்திலிருந்து மதுரை விமான நிலையம் வழியாக பல்வேறு வெளிநாடுகளுக்குச் செல்லவும் அங்கிருந்து இங்கு வரவும் விரும்பும் பயணிகள் எண்ணிக்கை அபரிமிதமாக இருப்பதை ஆய்வு நடத்தி முழு புள்ளிவிபரங்களுடன் ஆய்வறிக்கையை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. அஜித் சிங் அவர்களிடம் கொடுத்து பல முறை நமது சங்கத்திலிருந்து புதுடில்லிக்கு நேரில் சென்று வலியுறுத்தியும் கூட, மதுரை விமான நிலையத்தை இலங்கை தவிர பிற வெளிநாடுகளுடன் செய்து கொண்டுள்ள இருவழி விமான சேவை ஒப்பந்தங்களில் சேர்க்காமல் அதன் காரணமாக பன்னாட்டு விமான நிறுவனங்கள் பல நாடுகளிலிருந்து மதுரைக்கு வருவதைத் தடுத்து தென் தமிழகத்தின் தொழில் பொருளாதார மற்றும் சுற்றுலா வளர்ச்சியை தேக்கமடையச் செய்துள்ள மத்திய அரசின் பாரபட்சமான போக்கினால் தொழில் வர்த்தகத் துறையும் தென் தமிழகத்தைச் சார்ந்த பொதுமக்களம் மிகவும் விரக்தியடைந்துள்ளனர்.
வர்த்தக சங்கத்தின் தொடர் வலியுறுத்தல்கள் காரணமாக கடந்த வாரம் சில இந்திய விமான நிறுவனங்கள், இந்திய மெட்ரோ நகரங்களில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களிலிருந்து மட்டுமல்லாது மதுரை உட்பட 8 பிராந்திய பன்னாட்டு விமான நிலையங்களிலிருந்து வெளிநாடுகளுக்கு விமானங்களை வரும் அக்டோபர், 2013 முதல் துவங்கும் வகையில் அனுமதியளித்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்த அனுமதி பெற்றுள்ள ஸ்பைஸ் ஜெட் போன்ற நம் நாட்டு விமான நிறுவனங்கள் மதுரை- துபாய், மதுரை- சிங்கப்பூர் விமான சேவையை உடனே துவங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

ஆனால் பன்னாட்டு விமான நிறுவனங்கள் அந்நாடுகளிலிருந்து மதுரைக்கு விமான சேவையை இயக்கினால்தான் பல்வேறு தொலைதூர நாடுகளுக்கு நமக்கு நேரடி விமான தொடர்பு கிடைக்கும். அதற்கு வெளிநாடுகளுடனான ஒப்பந்தங்களில் மதுரை விமான நிலையம் சேர்க்கப்பட வேண்டும். சிங்கப்பூர் அரசு இப்பட்டியலில் மதுரையைச் சேர்க்க வலியுறுத்தியும் கூட மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் மறுத்ததற்கான காரணம் புரியவில்லை. இவ் ஒப்பந்தங்களில் திருச்சி, கோவை, விமான நிலையங்கள் எல்லாம் சேர்க்கப்பட்டிருக்கும் போது மதுரையையும் சேர்த்து தென்தமிழகமும் முன்னேற்றம் அடைய வழிகோல கூடாதா?

அதேபோல் நம் சங்கம் மதுரை விமான நிலைய முனையக் கட்டிடத்திற்கு முன்பாக தர்ணா போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து மதுரை விமான நிலையம் சரக்கு விமான நிலையமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் சரக்கை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை விமான நிலைய அதிகாரிகள் செய்யவில்லை. நிறைய ஏற்றுமதி செய்து கூடுதல் அன்னியச் செலாவணி பெற்று ரூபாயின் மதிப்பை உயர்த்த மத்திய தொழில் வர்த்தக அமைச்சர் திரு. ஆனந்த் சர்மா வேண்டுகோள்விடுத்துள்ளார். ஆனால் அந்த வேகம் அதிகாரிகளுக்கு இல்லை. மதுரையிலுள்ள விவசாயிகளும் வியாபாரிகளும் மல்லிகைப் பூ, காய்கறி, பழங்கள் போன்ற பல்வேறு பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பிற விமான நிலையங்களைத் தேடி ஓட வேண்டியுள்ளது. போதிய அளவு ஏற்றுமதி செய்ய முடியவில்லை. மதுரையிலிருந்து நேரடியாக ஏற்றுமதி செய்தால் ஒரு காய்கறி வியாபாரியே மாதம் 200 டன் கிழக்காசிய நாடுகளுக்கு அனுப்ப தயாராக உள்ளனர்.

இப்போதைக்கு கொழும்புவிற்கு மதுரையிலிருந்து சென்று கொண்டிருக்கும் ஒரே பன்னாட்டு விமானமான மிகின் லங்கா, சரக்கை எடுத்துச்செல்ல தயாராக உள்ளது. ஆரம்பகட்டத்தில் விமான நிலையத்தில் குளிர்பதனக் கிடங்கு போன்ற வசதிகள் இல்லாவிட்டாலும் கூட அதை சமாளித்து சரக்கை அனுப்பவும், கொண்டுவந்த சரக்கை முழுவதும் அனுப்ப விமானத்தில் இடம் இல்லாவிட்டாலும் கூட மீதியை திருப்பி எடுத்துச் செல்லவும் வணிகர்கள் தயாராக இருக்கிறார்கள்.

நிறைய அளவில் சரக்குகள் வந்தால் முழு சரக்கு விமான சேவையை துவக்க மிகின் லங்கா விமான நிறுவனம் தயராக உள்ளது. சரக்கு விமான நிலையம் என்ற அனுமதி வந்துவிட்டது. எந்த சிரமங்களுக்கிடையேயும் சரக்கை அனுப்ப வியாபாரிகள் தயார், சரக்கை எடுத்துச் செல்ல விமான நிறுவனம் தயாராக உள்ளது. ஆனால் சரக்கு விமான நிலையமாக அறிவிக்கப்பட்ட மதுரை விமான நிலையம் இன்னும் செயல்படத்துவங்க வில்லை. ஏன்? சம்பந்தப்பட்டவர்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டாமா?

எனவே சில மாநிலங்களில் உள்ளது போல் தமிழகத்தில் சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் ஏற்படுத்தி அமைச்சர் நியமிக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் மத்திய அரசிடமும் அதிகாரிகளிடமும் அதிகாரப்பூர்வமாக வலியுறுத்தி தமிழகத்திற்கு, குறிப்பாக தென் தமிழகத்திற்கு தேவையான விமானத் திட்டங்களை பெற முடியும். சமீபத்தில் மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர்களிடம் கூட்டம் ஒன்றை நடத்தி விவாதித்திருக்கிறார். அதில் 8 மாநிலங்களிலிருந்து சிவில் விமானத் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். நாமும் அவ்வாறு சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சரை நியமித்து இம்மாதிரியான கூட்டங்களில் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறத்தி பெற வேண்டும் என மாண்புமிகு முதல்வர் டாக்டர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.