மதுரை-துபாய் நேரடி விமான சேவையைத் தொடர ஸ்பைஸ்ஜெட் உறுதி
February 7, 2014
2014-2015-ம் ஆண்டிற்கான இடைக்கால இரயில்வே பட்ஜெட் – சங்கத்தின் கருத்து
February 13, 2014

தமிழக அரசின் 2014-15 பட்ஜெட்டிற்கு நமது சங்கத்தின் ஆலோசனைகள்

TAதமிழக அரசின் சார்பில் சென்னையில், நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று 11.02.2014 அன்று நடைபெற்ற தமிழக அரசின் 2014-2015ம் ஆண்டு நிதிநிலை தயாரிப்பிற்காக நடைபெற்ற முன் ஆலோசனைகள் கூட்டத்தில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் தலைவர் திரு N. ஜெகதீசன் மற்றும் செயலர் திரு j. ராஜமோகன் ஆகியோர் பங்குபெற்று சங்கத்தின் சார்பில் விரிவான ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய மனுவை சமர்ப்பித்தனர். மனுவில் அடங்கி இருந்த முக்கிய ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை கீழே குறிப்பிட்டுள்ளோம்.

அ) தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டம் 2006 மற்றும் மதிப்புக் கூட்டு வரிச் சட்ட விதிகள் 2007 – புதிய திருத்தங்கள் மற்றும் சட்ட விதிகளினால் வணிகத்திற்கும், வணிகர்களுக்கும் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகளையும், நடைமுறைச் சிரமங்களையும் நீக்கிட வேண்டுகோள்.

1) புதிய சட்ட திருத்தத்தினால் பிற மாநில விற்பனையே (interstate sale) தடைப்பட்டுள்ளது:

“C” படிவத்துடனான வெளி மாநில விற்பனைக்கு 2% மட்டுமே மத்திய விற்பனை வரி என்பது வெளிமாநில விற்பனையை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படும் சலுகை. ஆனால் நம் மாநிலத்தில் அவ்வாறான விற்பனையில் மேற்கொண்டு 3% உள்ளீட்டு வரி வரவை (ITC) கழித்துக் கொள்ள வேண்டும் (reverse) என்று சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் “C” படிவத்துடன் விற்றாலே 5% வரி என்றாகிவிடுகிறது.

“C” படிவம் இல்லாவிட்டால் 2% சலுகை வரி விதிப்பிற்குப் பதிலாக மாநில விற்பனை வரி வீதப்படி (5%-14 1/2%) மத்திய விற்பனை வரி விதிக்க வேண்டும். அத்துடன், அச்சரக்கிற்கான உள்ளீட்டு வரவு முழுவதையும் கழிக்க வேண்டும் எனவும் இரட்டைத் தண்டனை விதிக்கப்படுகிறது.

இந்த இரண்டு சட்ட விதிகளும் எந்த மாநிலத்திலும் இல்லை. இதனால் நம் மாநிலத்திலிருந்து வெளிமாநில விற்பனை பாதிக்கப்படுகிறது. சிறு தொழில் துறை தங்கள் பொருட்களை வெளி மாநிலங்களில் விற்பனை செய்ய இயலாமல் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். எனவே இந்தத் திருத்தங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

2) புதிய இணைப்புப் படிவம் V:

வணிகர்கள் சமர்ப்பிக்கும் மாதாந்திர படிவம் I உடன் புதிதாக இணைக்கப்பட்டுள்ள இணைப்பு V-ல் ஒவ்வொரு மாதமும் மாத இறுதி இருப்புச் சரக்கு மதிப்பை (Closing Stock Value) தெரிவிப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.
பல்வேறு காரணங்களால் இணைப்புப் படிவம் V-ல் குறிப்பிட்டுள்ள மாத இறுதி இருப்புச் சரக்கின் மதிப்பை வணிகர்களால் கொடுக்க இயலாது. சில வணிக நிறுவனங்களில் நூற்றுக்கணக்கான சரக்குகள் உள்ளன.

இருப்புச் சரக்கின் அளவு / எண்ணிக்கையை புதிய இணைப்புப் படிவம் V-ல் கொடுக்கத் தேவையில்லை என்றாலும், இருப்புச் சரக்கின் கொள்முதல் மதிப்பை சரியாக மதிப்பீடு செடீநுது அப்படிவத்தில் தெரிவிக்க ஒவ்வொரு மாத இறுதியிலும் இருப்புச் சரக்கின் அளவு / எண்ணிக்கை என்ன என்பதை கணக்கெடுத்து அவற்றின் மதிப்பை கணக்கீடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். ஓவ்வொரு மாதமும் இவ்வாறு மாத இறுதிச் சரக்குகளின் விபரத்தை துல்லியமாகக் கணக்கெடுக்க பல நாட்கள் கூட ஆகலாம். பல வணிகர்கள் கணிணி வைத்து Stock பராமரிப்பதில்லை. வணிகம் வெகுவாக தடைப்படும். இது வணிகர்களுக்கு கூடுதல் சுமை, தேவையற்ற செலவு, வீண் சிரமம். இருப்புச் சரக்கின் மதிப்பு ஆண்டு இறுதியில் மட்டும் வருமான வரிச் சட்டத்தின் கீழ் லாபத்தை இறுதி செய்ய கணக்கீடு செய்யப்படுகிறது. கணக்கீடு செய்வதிலும் பலமுறைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. வணிகவரித் துறைக்கு இந்த விபரம் தேவையற்றது.

மாத இறுதிச் சரக்கின் மதிப்பிற்கு ஈடாக மாத இறுதி உள்ளீட்டு வரி வரவு கண்டிப்பாக இருக்காது என்பதால் வணிகவரி அதிகாரிகள் தங்கள் கற்பனைக்கு ஏற்ப பல விபரங்களைக் கேட்டு அப்பாவி வணிகர்களை துன்புறுத்தலுக்கும், தேவையற்ற சட்ட நடவடிக்கைகளுக்கும் உட்படுத்துவார்கள். வணிகத்தை நிம்மதியாக நடத்த முடியாது. இதனால் வணிகர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். அவர்களுக்கு பெரும் பொருட் செலவு ஏற்படும். இணைப்புப் படிவம் V லஞ்ச லாவண்யத்தின் ஊற்றுக் கண்ணாக மாறி விடும். எனவே, இதனால் படிவம் V-ஐ ரத்து செய்ய வேண்டும்.

ஆ) மதிப்புக் கூட்டு வரி முறையை எளிமைப்படுத்தவும், முறைப்படுத்தவும் ஆலோசனைகள்:

1. 2006 மதிப்புக் கூட்டு வரிச் சட்டப்படி பதிவு செய்து கொள்வதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விற்று வரத்தொகை வரம்புகள் தற்போதைய பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு அதிகரிக்கப்பட வேண்டும்.

ஆண்டு விற்பனைத் தொகை ரூ. 5 லட்சத்திற்குள் உள்ள தயாரிப்பாளர்களும், ரூ. 10 லட்சத்திற்குள் உள்ள வணிகர்களும் Vat வரிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்து Tin எண் பெற வேண்டியதில்லை. ஆனால் நாங்கள் Vat வரிச் சட்டப்படி பதிந்துகொண்டு வரி வசூலித்து செலுத்துகிறோம் என்று சொன்னாலும் அதிகாரிகள் ஏற்பதில்லை. அவர்களையும் Vat வரி செலுத்த அனுமதித்தால் அரசின் வரி வருவாய் கூடும். வாங்குபவர்கள் வரி set-off வசதி வேண்டும் என்று கேட்பதால் சிறிய தொழில் வணிகர்களும் Vat வரிச் சட்டத்தின் கீழ் பதிந்து கொள்ள விரும்புகிறார்கள். எனவே அதற்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும்.

2007-ம் ஆண்டு மதிப்புக் கூட்டு வரி முறை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டபோது நிர்ணயிக்கப்பட்ட இந்த வரம்புகள் தற்போதுள்ள சரக்குகள் விலையேற்றம், பண வீக்க உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முறையே ரூ. 10 லட்சமாகவும், ரூ. 20 லட்சமாகவும் உயர்த்தப்பட வேண்டும்.

2. தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டப் பிரிவு எண் 3 (4) (b) காம்பவுண்டிங் வரி முறைக்கான ஆண்டு விற்பனைத் தொகை வரம்பு ரூ. 1 கோடியாக உயர்த்தப்பட வேண்டும்.

சிறு வணிகர்கள் நலன் கருதி, 2006 தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டப் பிரிவு எண் 2 (4) (b)ன் படி ஆண்டு விற்பனைத் தொகை ரூ. 50 லட்சம் வரை உள்மாநிலத்தில் கொள்முதல் செய்து உள் மாநிலத்தில் விற்கும் சிறு வணிகர்கள் வரி வசூலிக்காமல் 1/2 சதவீதம் வரி செலுத்தினால் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள உற்பத்திச் செலவு, ஊதியம், கூலி உயர்வு மற்றும் விற்பனைச் செலவு அதிகரிப்பு ஆகியவை கருத்தில் கொண்டு காம்பவுண்டிங் வரி முறைக்கான ஆண்டு விற்பனைத் தொகை வரம்பினை ரூ. 50 லட்சத்திலிருந்து ரூ. 1 கோடியாக உயர்த்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

உதாரணமாக பட்டாசு தொழில் உற்பத்திச் செலவு வெகுவாக அதிகரித்துள்ளதின் காரணமாக அவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 2007-ல் 2000 பெட்டிகள் (Carton) பட்டாசு விற்பனை விலை ரூ. 50 லட்சமாக இருந்தது. இப்போது 600 பெட்டிகள் விலையே ரூ. 50 லட்சத்தை எட்டிவிட்டது குறிப்பிடத்தக்கது. எனவே காம்பவுண்டிங் வரிக்கான வரம்பை ரூ. 1 கோடியாக உயர்த்த வேண்டியது மிகவும் நியாயமான கோரிக்கையாகும்.

காம்பவுண்டிங் வரி முறைக்கான விற்பனைத் தொகை வரம்பினை ரூ. 1கோடியாக உயர்த்துவதால் அரசிற்கு வரி வருவாய் குறையாமல் இருக்க ரூ. 50 லட்சத்திற்கும் ரூ. 1கோடிக்கும் இடையே உள்ள விற்பனைக்கு 1/2 சதவீதத்திற்கு பதிலாக 1 சதவீத காம்பவுண்டிங் வரி விதிக்கலாம்.

3. மதிப்புக் கூட்டு வரிச்சட்டப்படி வணிகர்கள் மின்னணு மூலம் பதிவு செய்து கொள்ள வசதி செய்யப்பட வேண்டும். மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தின் கீழ் வணிகம் செடீநுவதற்கான உரிமைச் சான்றிதல் (Tin) பெற மிகுந்த காலதாமதம் ஏற்படுகிறது. சில பொருட்களில் வணிகம் செய்வதற்கு Enforcement துறைக்கு file அனுப்ப வேண்டும் என்று சொல்கிறார்கள். இது தேவையற்ற நடைமுறை மட்டுமல்லாது தொழில் வணிகம் செய்ய முன் வருபவர்களை ஊக்குவிக்கும் வகையில் இல்லை. இந்த நடைமுறை உடனடியாக மாற்றப்பட வேண்டும்.

எனவே மத்திய கலால் வரி முறையில் உள்ளது போல எளிமையான, விரைவான பதிவுக்கு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தின் கீழ் வணிகர்கள் மின்னணு மூலம் பதிவு செய்துகொள்ள வசதி செய்யப்பட வேண்டும். இதன் மூலம் லஞ்ச லாவண்யங்கள் உள்பட பல முறையீடுகளைத் தவிர்க்க முடியும்.

4. ரீபண்ட் மேளா (Refund Mela) நடத்தி நிலுவையிலுள்ள ரீபண்டுகளை உடனடியாக அளித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அநேக வணிகர்களுக்கு சட்டப்படி வர வேண்டிய ரீபண்டுகள் கிடைக்கப்பெறுவதில் ஏற்படும் காலதாமதம் காரணமாக அவர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் குறிப்பிட்ட ஒரு வாரம் ரீபண்ட் மேளா (Refund Mela) நடத்தி அவர்களுக்கு உடனுக்குடன் ரீபண்ட் வழங்கிட ஏற்பாடு செய்திட வேண்டும்.

இ. வரி விலக்கு மற்றும் வரி குறைப்புக் கோரிக்கைக்கான ஆலோசனைகள்:

1. அத்தியாவசியப் பொருட்களுக்கு (Essential commodity) வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை அடிப்படையில் மிக அத்தியாவசிய உணவுப் பொருளான கோதுமை மற்றும் உணவு எண்ணெய்க்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும்.

நவதானியங்கள் மற்றும் பயறு பருப்பிற்கு கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனை வரி விலக்கை (Conditional Exemption) முழுமையான வரி விலக்காக மாற்ற வேண்டும்.

a) அரிசிக்கு வரி விலக்கு அளித்துள்ளதுபோல கோதுமைக்கு வரி விலக்கு அளித்து கோதுமை பொருட்களுக்கு வரி விகிதம் குறைக்கப்பட வேண்டும்:

தமிழகத்தில் அரிசிக்கு அடுத்த உணவுப் பொருளாக பொதுமக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படும் கோதுமைக்கு தற்போது 2 சதவீதம் வரி விதிப்பு உள்ளது. எனவே அத்தியாவசிய உணவுப் பொருளான கோதுமைக்கும் முழு வரிவிலக்கு வழங்கிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

மைதா, ஆட்டா போன்ற கோதுமைப் பொருட்களுக்கும் வரி விகிதத்தினை 5 சதவீத்திலிருந்து 1 சதவீதமாக குறைத்திட வேண்டியது மிகவும் அத்தியாவசியமாகும். அண்டை மாநிலமான கர்நாடகாவில் இப்பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

b) மிக அத்தியாவசிய உணவுப் பொருளான உணவு எண்ணெய்க்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்.
அனைத்துத் தரப்பு மக்களும் அன்றாடம் பயன்படுத்தும் மிக அத்தியாவசிய உணவுப் பொருளான உணவு எண்ணெய்க்கு, நம் மாநிலத்திற்குள் விற்பனை செய்வதற்கு வரி விலக்கு இருந்தது. 01.04.2012 முதல் அதற்கு 5 சதவீதம் மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் தேங்காய் எண்ணெய்க்கு வரி விலக்கும், பிற அனைத்து உணவு எண்ணெய்களுக்கும் ஒரு சதவீத வரியே விதிக்கப்படுகிறது. பாண்டிச்சேரியில் 3 சதவீத வரிதான் விதிக்கப்படுகிறது. எனவே நம் மாநிலத்தில் 5 சதவீத வரி விதிப்பு பொதுமக்களையும், உணவு எண்ணெடீநு தொழில், வர்த்தகத்தையும் மிகவும் பாதிப்பதாக உள்ளது.

முழு வரி விலக்கு அளிக்க வாய்ப்பு இல்லை என்றால் உணவு எண்ணெய்க்கு கேரளாவில் உள்ளதுபோல் ஒரு சதவீத மதிப்புக் கூட்டு வரி விதிக்கலாம். அதேபோல் உணவு எண்ணெய் வித்துக்கும் , பிண்ணாக்கிற்கும் 1 சதவீத வரியே விதிக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் தமிழகத்தில் நடைபெறும் உணவு எண்ணெய் வணிகம் முழுவதற்கும் 1 சதவீதம் வரி வருவாய் அரசுக்கு உறுதியாகக் கிடைக்கும். யாரும் வரி ஏய்க்கும் முயற்சியில் ஈடுபட மாட்டார்கள். தொழில், வணிகம் வளர்ச்சியடையும், பொதுமக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

2) தேநீர் கடைகளுக்கு விற்கப்படும் எரிவாயு (Commercial LPG)-விற்கு வரி விலக்கு அளிக்க வேண்டும், அல்லது வரி விகிதம் 5 சதவீதமாகக் குறைக்கப்பட வேண்டும்:

தமிழக முதல்வர் வீட்டு உபயோகத்திற்கு விற்கப்படும் எரிவாயு (Commercial LPG)விற்கு வரி விலக்கு அளித்து விலை ஓரளவு குறைய வாய்ப்பு ஏற்படுத்தி மகளிர் பெருமக்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளார். வணிக உபயோகத்திற்கு வாங்கப்படும் எரிவாயுவிற்கு அது சட்டப்படி தொழில் உற்பத்திக்கான இடுபொருளாக இருந்தால் 5 சதவீத வரியும், அவ்வாறு இல்லை என்றால் 14.5 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக தேநீர் கடைகளுக்கு விற்கப்படும் எரிவாயு 14.5 சதவீத வரி விதிப்பிற்குட்படுகிறது.

தமிழகத்தில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு தேநீர் கடைகள் உள்ளன. அக்கடைகள் பல லட்சம் ஏழை எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கின்றன. பால் உள்பட தேநீர், காபி தயாரிப்புகளான மூலப் பொருட்கள் விலையேற்றம் மற்றும் அடிக்கடி அதிகரிக்கப்படும் எரிவாயு விலை, கடை வாடகை உயர்வு போன்றவற்றால் தேநீர் கடைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. தேநீர் கடைகளில் விற்கப்படும் தேநீர், காபி போன்றவற்றை பெரும்பாலும் ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினரே வாங்கிப் பருகுகின்றனர். எனவே இச்சிறு தேநீர் கடைகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் தேநீர் கடைகளுக்கு விற்கப்படும் LPG-க்கு முழு வரி விலக்கு அளிக்க வேண்டுகிறோம். அவ்வாறு வரி விலக்கு அளிக்க இயலாவிட்டால் வரி விகிதத்தை 14.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைத்திட வேண்டுகிறோம்.

3) சூரிய சக்தி மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் வரிச் சலுகை அளிக்க வேண்டும்:

தமிழகத்தில் நிலவும் கடும் மின்சக்தி பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் “தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012” என்ற ஆவணத்தை 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்டு சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்வதை நன்கு ஊக்குவித்து வருவது வெகுவாகப் பாராட்டத்தக்கது. சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்திட தற்போது அதிகச் செலவாகிறது. இதனால் சிறுதொழில்களாலும், வீட்டு உபயோகத்திற்காகவும் சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்து கொள்ள இயலவில்லை. எனவே சூரிய சக்தி மின் உற்பத்திக்கான உற்பத்திச் செலவை ஓரளவு குறைத்திடும் வகையில் தற்போது Solar Unit as a composite unit and accessories மீது விதிக்கப்படும் 14.5 சதவீத வரியை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள வேண்டும் அல்லது 5 சதவீதமாகக் குறைத்திட வேண்டும்.

ஈ. உயர்நிலைக் குழுக்கள்:

மதிப்புக் கூட்டு வரி சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்னைகளை விவாதித்து உடனடியாகத் தீர்வு காண வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் தொழில் வணிகத் துறையினர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே, வணிகவரித் துறை அமைச்சர் அவர்களும், வணிகவரித் துறை உயரதிகாரிகளும், முக்கிய வணிக சங்கப் பிரதிநிதிகளும் கலந்து பிரச்னைகள் குறித்து விவாதித்து உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் வணிக சங்கப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய “மதிப்புக் கூட்டு வரி அமலாக்கக் கண்காணிப்பு உயர்நிலைக் குழு” (VAT- implementation Monitoring Committee) ஒன்றையும், வணிகர் நலனைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வணிகர் நல வாரியத்தையும் (Traders Welfare Board) மீண்டும் ஏற்படுத்த வேண்டுகிறோம்.