உலக ஹெப்பாடிட்டஸ் தினத்தில் விழிப்புணர்வுக் கூட்டம்
July 28, 2013
நம் இந்தியத் திருநாட்டின் 67-வது விடுதலை நாள் விழாவில்…
August 15, 2013

ஜெட் ஏர்வேஸ் தலைவர் திரு. நரேஷ் கோயலுக்கு நமது சங்கத்தின் வேண்டுகோள்

Goyalஇந்தியாவின் ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஐக்கிய அரபு நாட்டின் எடிகாட் ஏர்வேஸ் இடையே கையெழுத்திடப்பட்டுள்ள சரித்த முக்கியத்துவம் வாய்ந்த ரூ.2050 கோடி அளவிலான கூட்டு விமான சேவை ஒப்பந்தத்திற்கு மத்திய அரசின் பன்னாட்டு முதலீடு அபிவிருத்தி வாரியத்தின் ஒப்புதலை பெற்றமைக்காக ஜெட் ஏர்வேஸின் தலைவர் திரு. நரேஷ் கோயலுக்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளது.

ஜெட் ஏர்வேஸ் பெங்களூரு, சென்னை, கொச்சி, ஹைதராபாத், திருவனந்தபுரம், மும்பை, டெல்லி மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களிலிருந்து அபுதாபிக்கு தினசரி விமான சேவையை துவக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெட் ஏர்வேஸ்- எடிகாட் ஏர்வேஸ் ஒப்பந்தத்திற்கு பின்னரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் உள்நாட்டு விமான சேவை நிறுவனமாக கருதப்படும் என்பதால் இந்தியாவிற்கும்- ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இடையேயான விமான நிலையம் சம்பந்தமான இருவழி ஒப்பந்தத்தில் மதுரை விமானநிலையம் சேர்க்கப்படாவிட்டாலும், மதுரை- அபுதாபி நேரடி விமான சேவையை ஜெட் எர்வேஸ் துவக்க முடியும். எனவே கீழ்கண்ட காரணங்களைக் கருத்தில் கொண்டு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இவ்வாண்டிற்கான குளிர்காலப் பட்டியலில் மதுரை- அபுதாபி விமானச் சேவையை சேர்க்க வேண்டுமென அக்கடிதத்தில் நமது சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

  • மதுரை விமான நிலையத்தில் 17, 500 சதுர மீட்டர் பரப்பளவில் அதி நவீன முனையக்கட்டிடம் அமைக்கப்பட்டு விமான ஓடுதளம் 7500 அடிகளாக நீட்டிக்கப்பட்டு ஒரே நேரத்தில் ஏழு விமானங்கள் வந்து செல்லக்கூடிய வசதியுடன் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. விமான நிலையம் சுங்கவரி விமான நிலையமாக 01.01.2011 முதல் அறிவிக்கப்பட்டு 2013 மே 18 முதல் பன்னாட்டு சரக்குகளை கையாளுவதற்கான அனுமதியுடன் வழங்கப்பட்டுள்ளது. ஸ்பைஸ் ஜெட் மற்றும் மிகின் லங்கா விமான சேவை நிறுவனங்கள் மதுரைக்கும்- கொழும்புவிற்கும் இடையே நேரடி விமான சேவையை வெற்றிகரமாக நடத்தி வருகின்றன.
  • ஐக்கிய அரபு நாடுகளில் கணிசமான அளவில் மதுரை மற்றும் தென் மாவட்டங்களைச் சார்ந்த தமிழ் மக்கள் பணிபுரிகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 80,000-க்கும் அதிகமானவர்கள் தென் தமிழகத்திற்கும் ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இடையே சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்கள் மூலம் பயணம் செய்கின்றனர். மதுரைக்கும் அபுதாபிக்கும் இடையே நேரடி விமான சேவை துவக்கப்படுவது தென் தமிழகம் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு இடையே பயணம் மேற்கொள்பவர்களுக்கு மிகுந்த பயனளிக்கும். தென் தமிழகத்திலிருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கும் பிற நாடுகளுக்கும் மேலும் அதிகமான அளவில் பயணிகள் பயணம் மேற்கொள்ள ஊக்குவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு அது லாபகரமான விமான சேவையாகவும் இருக்கும்.
  • தென் தமிழகத்தில் சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்க்கத்தக்க திருமலை நாயக்கர் மகால், அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவில், காந்தி அருங்காட்சியகம், குற்றாலம் நீ்ர்வீழ்ச்சி, கன்னியாகுமரி, கோடைக்கானல் போன்ற சிறப்பான சுற்றுலா தளங்கள் உள்ளன. இவை ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றன.
  • மதுரையிலுள்ள அரவிந்த் கண் மருத்துவமனை, அப்பலோ மருத்துவமனை, மீனாட்சி மிஷன் மருத்துவமனை, வடமலையான் மருத்துவமனை, இதர சிறப்பு மருத்துவமனைகளும் ஆயுர்வேத மருத்துவமனைகளும் தென் தமிழகத்திற்கும் ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இடையே மருத்துவ சுற்றுலாவை தொடர்ந்து அதிகரிக்க செய்து வருகின்றன.
  • ஆண்டுதோறும் சுமார் 3.5 கோடி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மதுரைக்கு வருவதாக கணிக்கப்பட்டுள்ளது.