மிகவிரைவில் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில்: டி.ஆர்.பாலு எம்.பி தகவல்
January 10, 2014
மாற்று வழியில் உற்பத்தி செய்யப்படும் மணல்
January 22, 2014

கட்டுமானப் பணிகளுக்கு ஏற்றது கிராவல் மணல்

sandமணல் உற்பத்தி தொடர்பாக வருகிற 20.1.2014 அன்று நமது சங்கத்தில் மீட்டிங் நடைபெற இருக்கிறது. அதேவேளையில் தற்போது தமிழ்நாட்டில் மணல் விற்பனையின் நிலை குறித்து இந்த செய்திக்குறிப்பு விளக்குகிறது.

இயற்கை மணல் இதுவரை கட்டுமானப் பணிகளுக்குப் பயன்பட்டு வந்தது,வருகிறது. சென்னையில் மட்டும் ஒரு நாளைக்கு பத்தாயிரம் லாரி மணல் தேவைப்படுகிறது. தமிழ்நாட்டுக்கு 55000 லாரி மணல் தேவைப்படுகிறது. ஆனால் கிடைப்பதென்னவோ வெறும் 35000 லாரி மட்டுமே!

இந்நிலையில் கூடுதலாகத் தேவைப்படும் மணலுக்கு என்ன செய்வது? இதற்கு ஒரு மாற்று தேவைப்படுகிறது. மேலும் அரசு நிர்ணயித்த மணல் விலை இரண்டு லாரிக்கு அதாவது ஒரு யுனிட்டுக்கு ரூ. 626 ஆகும். ஆனால் நடைமுறையில் இது சாத்தியமில்லை. இப்போது ஒரு யுனிட் மணல் ரூ15000க்கு விற்கப்படுகிறது. வெகுதொலைவில் இருந்து மணலைக் கொண்டு வரும்போது போக்குவரத்துச்செலவு அதிகரிப்பதால் மணலின் விலையும் அதிகரித்து விடுகிறது.

கிராவல் மணலை தற்போது இயற்கை மணலுக்கு மாற்றாக அறிமுகப்படுத்துகின்றனர். கல் கிராவலை உடைக்கும் போது விழும் மணல்துகளை சேகரித்து ஒரு யூனிட் ரூ.2000க்கு இப்போது விற்கின்றனர். இது செயற்கை மணலோ கிடையாது இதுவும் இயற்கை நமக்களித்த வரப்பிரசாதம் தான். தற்போது ஆந்திரா, கர்னாடகா, கேரளா, மஹராஷ்ட்ரா மாநிலங்களிலும் அயல்நாடுகளிலும் இந்த கிராவல் மணலை கட்டப்பணிகளுக்குப் பயன்படுத்துகின்றனர்.

புனே-மும்பை விரைவு ரயில் திட்டத்துக்கு முழுக்க முழுக்க கிராவல் மணலே பயன்படுத்தப்பட்டது. இம்மணல் உறுதியானது, கட்டிடம் கட்ட ஏற்றது. கான்கிரீட் அமைக்கப்பயன்படுத்தலாம் என்று ஐ.ஐ.டிகளும் இந்திய அறிவியல் மையமும் சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்த கிராவல் மணலின் உறுதித்தன்மை மற்றும் பயன்பாடு குறித்த விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆற்றுமணலைப் பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு இருப்பதாலும் இயற்கையை நமது எதிர்காலச்சந்ததியினருக்குப் பாதுகாத்து வைக்க வேண்டிய கடப்பாடு நமக்குஇருப்பதாலும் நாம் ஆற்றுமணல் பயன்பாட்டை நிறுத்திவிட வேண்டும்.

செயற்கை மணல் புதிய தொழில்வாய்ப்பாக உருவாகியுள்ளது. இத்தொழிலில் நல்ல லாபமும் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையைச் சுற்றிலும் கல்லுடைக்கும் பல சிறிய குவாரிகளும் உள்ளன. இந்தக் குவாரிகளிலிருந்து கிராவல் மணலைப் பெறுவது எளிது. இந்த மணலை நாள்தோறும் பெருகி வரும் கட்டுமானப்பணிகளுக்குப் பயன்படுத்தலாம். தேவையும் பொருளும் அருகருகே இருப்பதால் இங்கு வியாபாரம் சிக்கலற்றதாவும் இலாபம் நிறைந்ததாகவும் உள்ளது.

எனவே புதிய மணலை வரவேற்போம்! இயற்கையைப் பாதுகாப்போம்!