2nd Anniversary 11.9.2012
May 17, 2013
விளை நிலங்கள் வீட்டுமனைகளாகிறது : மதுரை மாவட்டத்தின் அவலநிலை
June 8, 2013

இருவழி விமானப் போக்குவரத்து: மத்திய அமைச்சருக்கு வேண்டுகோள்

Madurai-Airportவெளிநாட்டு விமான சேவை நிறுவனங்கள் இந்திய விமான சேவை நிறுனங்களில் 49 சதவீத அந்நிய நேரடி முதலீடு செய்ய சமீபத்தில் அனுமதிக்கப்பட்டதின் விளைவாக டாடா- ஏர் ஏசியா மற்றும் ஜெட் ஏர்வேஸ்- எடிகாட் ஆகிய விமான நிறுவனங்கள் இணைந்து செயல்பட ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

இத்தகைய ஒப்பந்தங்கள் நம் நாட்டின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவையின் விரிவாக்கத்திற்கு பெரிதும் உதவும்.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகள் 04.02.2013 அன்று புதுடில்லியில் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. அஜித் சிங் அவர்களை நேரில் சந்தித்து மதுரை விமான நிலையத்தை பிற நாடுகளுடனான குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகளுடான இருவழி விமானப் போக்குவரத்து ஒப்பந்தங்களில் உடனடியாக சேர்த்து அந்நாடுகளைச் சேர்ந்த விமான சேவை நிறுவனங்கள் மதுரைக்கு நேரடி விமான சேவையைத் துவக்க வழிவகை செய்திட வேண்டுமென வலியுறுத்தியபோது, “ அவ்வாறு செய்வது நமது உள்நாட்டு விமான சேவை நிறுவனங்களின் நலனுக்கு குறிப்பாக நமது தேசியமயமாக்கப்பட்ட விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவின் நலனுக்கு பாதகம் விளைவிக்கும்” என்றும் இங்கிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு நேரடியாக செல்ல விரும்பும் பயணிகள் (onward Passengers) அனைவரையும் வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்கள் ஈர்த்துவிடுவர். நம் நாட்டு விமானங்களில் பயணம் செய்ய பயணிகள் கிடைக்க மாட்டார்கள்” என்றும் தெரிவித்தார். அத்துடன் 02.04.2013 அன்று சிங்கப்பூரில் நடைபெற்ற இருவழி ஒப்பந்த மறு ஆய்வுக் கூட்டத்தில் சிங்கப்பூர் அரசே கேட்டுக்கொண்ட போதும் அந்நாட்டு விமான சேவை நிறுவனங்கள் மதுரைக்கு நேரடி விமான சேவையை துவங்குவதற்கு வழிவகுக்கும் வகையில் சிங்கப்பூருடனான இருவழி விமான சேவை ஒப்பந்தத்தில் மதுரையைச் சேர்க்க நம் மத்திய விமானத்துறை அமைச்சர் மறுத்துவிட்டார்.

அதிரடி கொள்கை மாற்றம்

ஆனால் அதன்பின் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் கொள்கையில் தலைகீழான அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு நாடான அபுதாபியைச் சார்ந்த எடிகாட் விமான சேவை நிறுவனம் நம் நாட்டின் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனத்தின் 24 சதவீத பங்குகளை வாங்கியதன் மூலம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அபுதாபியை ஓர் செயல்பாட்டு மையமாக (hub) ஆக்கிக் கொண்டு இந்தியாவிலுள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள் உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து அபுதாபிக்கும் அங்கிருந்து ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள பிற நகரங்களுக்கும் பயணச் சேவையை துவக்கவிருக்கிறது. இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இடையே அனுமதிக்கப்படும் வாராந்திர விமான பயணிகள் இருக்கை எண்ணிக்கையை 13000 த்திலிருந்து 37000 ஆக அதாவது சுமார் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜெட் ஏர்வேஸ் – எடிகாட் ஏர்வேஸ் உடன்படிக்கையினால் விமான சேவை நிறுவனங்களுக்கிடைய ஏற்படப் போகும் போட்டி நம் நாட்டின் தேசிய விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவிற்கு பாதகாமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பது குறித்து சமீபத்தில் பத்திரிக்கையாளர்களிடம் மத்திய அமைச்சர் அஜித் சிங் கருத்து தெரிவிக்கும்போது, அதிகமான போட்டி இருப்பது நிறுவனங்களின் திறமையான செயல்பாட்டை ஊக்குவிக்கும், ஏர் இந்தியாவினால் ஓரளவுக்கு மட்டுமே விமான சேவையை அளிக்க முடியும். மற்ற விமான சேவை நிறுவனங்களுக்கு நாம் அனுமதி அளிக்காவிட்டால் நம் நாட்டு பயணிகளுக்கு தேவையான அளவு தேவையான நகரங்களுக்கு நேரடி விமான தொடர்பு கிடைக்காமல் போய்விடும். ஏர் இந்தியா தான் தனது நலனை பாதுகாத்து கொள்ள தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு தனது செயல் திறனை அதிகரித்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு மாதங்களுக்குள் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கொள்கையில் இவ்வாறு தலைகீழைான அதிரடி மாற்றம் ஏற்பட்டு முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்பது அமைச்சகத்தின் நடவடிக்கை மற்றும் அமைச்சரின் பேச்சிலிருந்து தெளிவாக புலனாகிறது. மாறுபட்ட இச்சூழ்நிலையிலும் மதுரை விமான நிலையத்தை மலேசியா, சிங்கப்பூர், மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுடனான இருவழி விமான சேவை ஒப்பந்தங்களில் உடனடியாக சேர்க்க வேண்டும். இல்லையென்றால் தென் தமிழகத்தின் தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டில் மத்திய அரசிற்கு சிறிதளவும் அக்கறையில்லை என்பதையே அது உறுதிபடுத்துவதாக அமையும்.

தென் தமிழகத்தின் தொழில் பொருளாதார முன்னேற்றத்திற்கு பல ஆக்கபூர்வமான திட்டங்களை அடுத்தடுத்து அறிவித்து வரும் நமது தமிழக முதலமைச்சர் டாக்டர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் இத்திட்டங்கள் சிறப்பாகவும் வேகமாகவும் நிறைவேற பிற நாடுகளுடனான குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகளுடனான இருவழி விமான சேவை ஒப்பந்தங்களில் மதுரையை உடனடியாக சேர்க்க பிரதமரை வலியுறுத்த வேண்டும் என பணிவண்புடன் வேண்டுகிறோம்.