கோலாம்பூர்-மதுரை இடையே நேரடி விமான சேவை
July 2, 2013
உலக ஹெப்பாடிட்டஸ் தினத்தில் விழிப்புணர்வுக் கூட்டம்
July 28, 2013

இந்தியாவுடனான வர்த்தகத்தை மேலும் அதிகரிப்பதில் அமெரிக்கா தீவிரம்

USA-Trade-Delegation---Photoதமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் பல்வேறு தொழில் வணிகத்தில் ஈடுபட்டுள்ள 45 உறுப்பினர்களைக் கொண்ட வர்த்தகத் தூதுக் குழு கடந்த ஜுன் மாதம் 17 முதல் 27 வரை அமெரிக்காவுக்கு சென்று வந்தது.

இருவழி வர்த்தகம் மற்றும் முதலீடு மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்ட இத்தூதுக் குழுவிற்கு திருs.இரத்தினவேல் ஆலோசராகவும், திரு N.ஜெகதீசன் தலைவராகவும், திரு K.திருப்பதிராஜன் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தனர்.

சென்னையிலுள்ள அமெரிக்க தூதுரகத்தின் வரத்தக சேவைப் பிரிவு, இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் ஒத்துழைப்புடன் மதுரையில் அமெரிக்க வர்த்தக மையத்தை (American Business Corner-ABC) ஏற்படுத்தி இருப்பதின் காரணமாகவும், அமெரிக்காவின் திறம் சார்ந்த கூட்டாண்மை திட்டத்தின் (US Strategic Partnership Programme) கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை அமெரிக்காவுடன் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் ஏற்படுத்திக் கொண்டுள்ளதன் காரணமாகவும் , சென்னையிலுள்ள அமெரிக்க தூதுரகத்தின் முதுநிலை வர்த்தக வல்லுநரட (Sr.Commercial Specialist) திருமதி மாலா வெங்கட் தூதுரகத்தின் பிரதிநிதியாக தூதுக் குழுவுடன் அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடப்பட்டது.

சங்கத்தின் தூதுக் குழு நியூயார்க் நகரில் நடைபெற்ற சரவதேச உரிமை வர்த்தகக் கண்காட்சியை (International Franchise Expo) பார்வையிட்டனர். இக்கண்காட்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 400-க்கும் அதிகமான உரிமை வர்த்தகம் அளிக்க விரும்பும் நிறுவனங்கள் பங்கு பெற்றிருந்தனர்.

சங்கத்தின் தூதுக் குழுவினர் அவர்களுடன் தமிழ்நாட்டிற்கு ஏற்ற வணிகம் மற்றும் சேவைகளில், குறிப்பாக உடனடி உணவுகள் (fast foods), தனிப்பட்ட மூளை வளர்ச்சிப் பயிற்சி (Personal Brain Training), சிறார்களுக்கான கல்வி முறை (Childhood education), செவன்-லெவன் ஸ்டோர்ஸ் (7-Eleven Stores), பானங்கள்(Beverages), முற்றிலும் தானியங்கி சலவை இயந்திரம் (Fully efficient products), கொசு பாதுகாப்பு உபகரணங்கள் (Mosquito shield) போன்றவற்றில் உரிமை வர்த்தக உடன்பாடு செய்து கொள்வது குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர். தூதுக் குழு உறுப்பினர்கள் தங்களுக்கு உகந்த முதலீட்டிற்குள் தமிழ்நாட்டிற்கு ஏற்ற உரிமை வர்த்தகப் பொருட்களை தேர்வுசெய்து தர அங்குள்ள உரிமை வணிக உடன்பாடுகள் கையெழுத்திடப்பட உள்ளன.

சங்கக் தூதுக் குழுவினர் அமெரிக்கா மற்றும் இதர நாடுகளுடன் தங்களது மசாலாப் பொடிகள், உணவு எண்ணெய், ஆபரணங்கள் போன்ற பொருட்களில் உரிமை வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி உடன்பாடுகள் செய்துகொள்வது குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இந்தியாவிலிருந்து பல்வேறு வகையான சரக்குகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் இருவழி வர்த்தகத்தை அதிகரிக்க நல்ல வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்காவிலிருந்து ஆப்பிள் மற்றும் சிக் பீஸ் (Chik Peas) போன்ற சரக்குகளை இந்தியாவிற்கு இறக்குமதி செய்து கொள்வது குறித்தும் தூதுக் குழுவினர் ஆராய்ந்தனர். அமெரிக்காவில் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகைகளான இட்லி, தோசை, பொங்கல், வடை போன்றவைகளை விற்பனை செய்ய தொடர் சிற்றுண்டி சாலைகள் அமைப்பது குறித்தும் தூதுக் குழுவினர் விவாதித்தனர். இத்தகைய உணவு வகைகளுக்கு அமெரிக்கர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

நியூயார்க் மேயர் அலுவலகத்தின் சர்வதேச விவகார மற்றும் வர்த்தகப் பிரிவின் இயக்குனர் திருமதி எலிசபத் ரோஸ் டேலி அமெரிக்காவில் அலுவலகம், தொழிற்சாலை மற்றும் கிட்டங்கிகள் அமைப்பதற்கு தேவையான ஒத்துழைப்பையும், வழிகாட்டுதல்களையும் அளிக்க தயாராக இருப்பதாக தூதுக் குழுவினரிடம் உறுதி அளித்தார்.

26.06.2013 அன்று வாஷிங்டன்னில் உள்ள சர்வதேச வர்த்தக கட்டிடத்தில் அமெரிக்க வர்த்தக அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுடன் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தூதுக் குழுவினர் இருவழி வர்த்தகத்தை அதிகரிப்பது குறித்து விரிவாகக் கலந்துரையாடினர்.

வர்த்தக இலாகாவின் உதவி தலைமை இயக்குனர் திருமதி ஜீடி ரெயின்கே சிறப்புரையாற்றினர். மூத்த சர்வதேச பொருளாதார அதிகாரி டாக்டர்.அப்துல் காதர் ஷேக், சர்வதேச அறிவியல் மையத்தின் வர்த்தகப் பிரிவின் முதுநிலை வல்லுநர் திருமதி ரோஸா பேஸ், திறம் சார்ந்த கூட்டாண்மை திட்டத்திற்கான அதிகாரி திரு ராபர்ட் மிகின் டையர், வாஷிங்டன்னில் உள்ள அமெரிக்க வர்த்தக சங்கத்தின் துணைத் தலைவர் திருமதி டையனா பெரல் மற்றும் உயரதிகாரிகள் உரையாற்றினர்.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தூதுக் குழுதான் இதுவரை இந்தியாவில் உள்ள இரண்டாம் நிலை நகரங்களிருந்து அமெரிக்காவிற்கு வந்துள்ள வர்த்தகத் தூதுக் குழுக்களில் மிகப் பெரியது என்று அவர்கள் பாராட்டினர்.

அவர்களது உரையில் கீழ்கண்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டன:

  • இந்தியா- அமெரிக்கா இருவழி வர்த்தகத்தின் அளவு விரைவில் 100 மில்லியன் அமெரிக்க டாலர் அளவை நெருங்க உள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தை மேலும் அதிகரிக்க அமெரிக்காவின் சர்வதேச வர்த்தகத் துறை அமைச்சகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
  • இந்தியாவிலிருந்து ஆபரணங்கள், வைரம், விலையுர்ந்த கற்கள், மருந்துப் பொருள்கள், தாதுப்பொருட்கள், ஜவுளி, ஆயத்த ஆடைகள், வேளாண்மைப் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், தகவல் தொழில் நுட்பப் பொருட்கள், இரசாயணம் மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் பெருமளவு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
  • அமெரிக்காவிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூலம் இந்தியாவில் உள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுடன் வர்த்தக உறவை அதிகரித்திட அமெரிக்கா பெரிதும் விரும்புகிறது. தனியார் துறையின் வளர்ச்சிதான் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு உந்துதல் சக்தியாகும் என்று அமெரிக்கா கருதுகிறது.
  • இந்தியாவின் ஜனத் தொகை அபிரிமித வளர்ச்சியை கண்டுவருகிறது. மெக்கின்சி ஆய்வின்படி இந்தியாவில் சுமார் 40 கோடி பேர் நடுத்தர வருமானம் கொண்ட, செலவழிப்பதற்கான தொகை வைத்துள்ள மக்கள் உள்ளனர். இது அமெரிக்காவின் ஜனத் தொகையை விட சுமார் இரு மடங்காகும். இதன் காரணமாக ஏற்றுமதி மற்றும் முதலீட்டிற்காக இந்தியாவை விரும்பித் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாடாக அமெரிக்கா கருதுகிறது.
  • 2003-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஜனத்தொகை கொண்ட 68 நகரங்கள் இருக்கும் . அவைகளை அமெரிக்கா வளர்ச்சி அடைந்து வரும் பெரும் நகரங்களாக அதாவது முத்து நகரங்களாக கருதுகிறது.
  • அவற்றுடனான வர்த்தக உறவிற்கு பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதால் அதனை நன்கு பயன்படுத்திக்கொள்ள அமெரிக்கா ஆர்வம் கொண்டுள்ளது. பத்து லட்சத்திற்கு மேல் ஜனத்தொகை கொண்ட மதுரையை அத்தகைய நகரமாக அமெரிக்கா கருதுகின்றது.
  • இந்தியாவுடனான வர்த்தக உறவை கணிசமாக அதிகரிக்க அமெரிக்கா விரும்புவதற்கு ஆணித்தரமான பொருளாதார காரணங்கள் உள்ளன. இந்தியாவில் அமெரிக்கா வர்த்தகம் மற்றும் முதலீட்டினை அதிகரிக்க அமெரிக்கா விரும்பும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.
  • இந்தியாவில் அமெரிக்கா தொழில் முதலீடுகளை அதிகளவில் ஈர்த்திட மின்சாரம் கல்வி போக்குவரத்து போன்ற முக்கிய கட்டமைப்புகளை மேம்படுத்த தீவிர உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • இந்தியாவிலுள்ள குஜராத் மாநில முதல்வர் திரு.நரேந்திர மோடி தனது மாநிலத்தில் கட்டமைப்புகளையும் தொழில் வளர்ச்சியையும் அதிகரிக்கவும் நவீனப்படுத்தவும் எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது என்று அமெரிக்க வர்த்தக சங்கத்தின் துணைத் தலைவர் திருமதி டையானா பெரல் தெரிவித்தார்.
  • இந்திய சிறு மற்றும் நடுத்தர தொழில் அதிபர்கள் அமெரிக்காவில் தொழில் முதலீடு செய்வதையும் தொழில் நுட்பப்பரிமாற்றம் சந்தைப்படுத்தும் அலுவலகங்கள் கிட்டங்கிகள் போன்றவற்றை ஏற்படுத்துவதையும் அமெரிக்கா அரசு வெகுவாக வரவேற்கிறது.
  • உலக அளவிலான அறிவாண்மை மையம் ஒன்றை 2013 ஜனவரி மாதம் அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் இருவழி வணிகத்திற்கு தேவையான அனைத்துத் தகவல்கள் சட்டங்கள் மற்றும் விதிகள் குறித்தத் தகவல்கள் சேகரிக்கப்பட்டு தேவையானவர்களுக்கு சரியான தகவல்களாக அளிக்கப்படுகிறது. இச்சேவையை சங்கத்தின் தூதுக்குழுவினர் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • திறமை மிக்க இந்தியப் பட்டதாரிகளை அமெரிக்காவில் பணிகளில் அமர்த்திக்கொள்ள அமெரிக்கா விரும்புகிறது. அமெரிக்காவிலுள்ள பிரசித்தி பெற்ற IBM நிறுவனத்தில் அமெரிக்கா பட்டதாரிகளை விட இந்தியப்பட்டதாரிகளே அதிக அளவில் பணியில் உள்ளனர்.
  • உலக அளவில் செய்யப்படும் மொத்த கொள்முதலில் அமெரிக்கா 5 சதவீதமே கொள்முதல் செய்கிறது. மீதமுள்ள 95 சதவீத கொள்முதல் மற்ற நாடுகளினால் நடைபெறுகிறது.

தமிழ்நாடு தொழில் வர்த்தக முதுநிலை தலைவரும் தூதுக்குழுவின் ஆலோசகருமான திரு S. இரத்தினவேல் அமெரிக்காவில் நடைபெற்ற கூட்டங்களில் ஆற்றிய உரைகளில் அமெரிக்காவில் தொழில் துவங்க விரும்புபவர்களின் நிறுவனங்களில் பணியாற்ற ஊழியர்களுக்கு அமெரிக்க வேலை விசா எளிதாக வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதற்கு அமெரிக்கா அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில் விசா வழங்குவதற்கான நடைமுறைகளை சரிவர பின்பற்றி அதனை எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவால் ஒவ்வொரு ஆண்டும் அளிக்கப்படும் H1B விசாக்களில் 65 சதவீதம் இந்தியர்களுக்கே அளிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் கடந்த 2009ம் ஆண்டு வாஷிங்டன்னுக்கு வருகைப் புரிந்ததும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2010ம் ஆண்டு புதுடில்லி வந்ததும் இந்தியா- அமெரிக்கா இடையே உள்ள உறவு 21ம் நூற்றாண்டின் முன்மாதிரியான கூட்டாண்மை என்று அமெரிக்கா அதிபர் பராக் ஒபாமா கூறியதை பாராட்டினார் திரு S. இரத்தினவேல்.

உலகஅளவில் முதன்மையான பொருளாதாரத்தைக்கொண்ட நாடான அமெரிக்காவுடன் தென் தமிழகத்தின் இருவழி வணிகம் மற்றும் முதலீடு மேலும் அதிகரிக்க தமிழ்நாடு தொழில் வர்த்தக தூதக்குழுவின் அமெரிக்கப் பயணம் அமைத்துள்ளது.