வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு.ஆனந்த் சர்மாவிற்கு பாராட்டு
December 12, 2013
அகில இந்திய அளவில் இந்த வரி சீர்திருத்தம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டுகோள்
December 31, 2013

இது லஞ்ச லாவண்யத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் ! உடனே ரத்துசெய்யுமாறு வேண்டுகோள்

தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்ட விதியின்படி கொடுக்க வேண்டிய மாதாந்திரப் படிவம் I உடன், புதிதாக இணைக்கப்பட்டுள்ள இணைப்பு V வணிகர்களுக்கு மிகுந்த பாதிப்பையும், தொல்லைகளையும் ஏற்படுத்தி, லஞ்ச லாவண்யத்தின் ஊற்றுக் கண்ணாக விளங்கப் போகும் என்பதால் அப்படிவத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கு நமது சங்கம் எழுதிய கடிதம்.

மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு,

பார்வை: வணிகவரி ஆணையரின் சுற்றறிக்கை எண் 12 / 2013, நாள் 03.12.2013.

வணிகர்கள் சமர்ப்பிக்கும் மாதாந்திர படிவம் I உடன் புதிதாக இணைக்கப்பட்டுள்ள இணைப்பு V-ல் ஒவ்வொரு மாதமும் மாத இறுதி இருப்புச் சரக்கு மதிப்பை (Closing Stock Value) தெரிவிப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. வணிகவரி ஆணையர் மேற்குறிப்பிட்ட சுற்றறிக்கையின் மூலம் வணிகவரி அதிகாரிகளுக்கு சில அறிவுறுத்தல்களை அனுப்பியுள்ளார். அதில் அவரே சில முரண்பாடுகளை சுட்டிக் காண்பித்துள்ளார். இன்னும் நிறைய முரண்பாடுகள் உள்ளன. வணிகர்கள் நிம்மதியாக வணிகம் செய்ய முடியாது. மிகுந்த தொல்லைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

கீழ்கண்ட காரணங்களால் இணைப்புப் படிவம் V-ல் குறிப்பிட்டுள்ள மாத இறுதிஇருப்புச் சரக்கின் மதிப்பை வணிகர்களால் கொடுக்க இயலாது என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அ) வணிகவரி மாதாந்திரப் படிவம் I-உடன் புதிதாக இணைப்பு V-ல் மாத இறுதி இருப்புச் சரக்கின் கொள்முதல் மதிப்புத் தொகையை இம்மாதம் முதல் வணிகர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சட்டவிதியில் திருத்தம் செய்திருப்பதின் முக்கிய நோக்கம், அத்தொகையை, அவ்வணிகர் அந்த மாதம் இறுதியில் அடுத்த மாதத்திற்கு எடுத்துச் செல்லும் உள்ளீட்டு வரி வரவுத் தொகையுடன் (carry over ITC) ஒப்பீடு செய்து வரி ஏய்ப்பு ஏதும் நடந்திருக்கிறதா என்பதை கண்டுபிடிப்பதற்காகத்தான் என்று வணிக வரி அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இதற்கு எங்களது முழுமையான மறுப்பை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம். எக்காரணம் கொண்டும் அவ்வாறு ஒப்பீடு செய்து வரி ஏய்ப்பு இருக்கிறதா என்று கண்டுபிடிக்க முடியாது.

Entry Tax போன்று Value Added Tax-ல் பொருளுக்கு பொருள் என்ற அடிப்படையில் உள்ளீட்டு வரி வரவு (ITC) set off செய்யப்படுவதில்லை. எனவே எக்காரணம் கொண்டும், எச்சூழ்நிலையிலும் மாத இறுதி இருப்புச் சரக்கின் மதிப்பிற்கும், அந்த மாத இறுதியில் அடுத்த மாதத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

ITCக்கும் எந்தத் தொடர்பும் (Nexus) இருக்காது; இருக்க முடியாது. அதற்கு நிறைய காரணங்களைச் சொல்ல முடியும். வணிகவரித் துறை ஆணையாளரே மேற்கண்ட சுற்றறிக்கையில் நான்கு காரணங்களை மட்டும் குறிப்பிட்டு அவற்றில் மேற்குறிப்பிட்ட தொடர்பு (Nexus) இருக்காது என்று ஒப்புக் கொண்டுள்ளார். இருப்புச் சரக்கு மதிப்புக்கு ஈடாக (proportionate) அடுத்த மாதத்திற்கு எடுத்துச் செல்லும் ITC இருக்கவே இருக்காது. எனவே எந்த வணிகர் சமர்ப்பிக்கும் மாதாந்திர படிவத்திலும் மேற்கண்ட இரண்டு தொகைகளுக்கும் எந்த சம்பந்தமும் (Nexus) இருக்காது என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்விபரங்களை வைத்து எந்த வரி ஏய்ப்பையும் கண்டுபிடிக்க முடியாது.

உதாரணமாக: சரக்கை லாபத்திற்கு விற்று வசூலித்த வரியை ITCயில் Setoff செய்யும் பொழுது, வெளி மாநிலத்தில் வாங்கிய சரக்கு கையில் இருக்கும் பொழுது, வரி விலக்கு பெற்ற சரக்கு அல்லது உள் மாநிலத்தில் விற்றால் வரியில்லை- வெளி மாநிலத்தில் விற்றால் வரி” என்பது போன்ற சரக்கு ஆகியவை கையில் இருக்கும் பொழுது, வணிக வரி அதிகாரிகளின் வேண்டுகோளின்படி advance tax செலுத்திய தொகையை செலுத்த வேண்டிய வரியில் set off செய்யும் பொழுது, நீதிமன்ற தீர்ப்பின்படி செலுத்திய வரியை வணிகவரித் துறை Refund செய்யாத சூழலில் அவ்வரித்தொகையை செலுத்த வேண்டிய வரியில் set off செய்யும் பொழுது, கம்பெனி வழங்கும் டிஸ்கவுண்டுகள் காரணமாக சரக்கின் அடக்க விலை குறைந்து மக்களுக்கு அந்த சலுகையை வழங்கி குறைத்து விற்கும்பொழுது, தயாரிப்பாளர் தான் வாங்கிய மூலப்பொருளை தயாரிப்பின் பல்வேறு நிலைகளிலும் (several stages of processing) வைத்திருக்கும் பொழுது, வேறு பொருளாகத் தயாரித்து வைத்திருக்கும்பொழுது, ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும் REP (Replenishment Licence) போன்ற உருவமற்ற பொருட்களை ஆவணங்களின் அடிப்படையில் கொள்முதல் / விற்பனையின் பொழுது, Capital goodsக்கான ITC எடுக்கும் பொழுது போன்ற பல்வேறு சூழ்நிலைகளில் மாத இறுதி இருப்புச் சரக்கின் மதிப்பிற்கும், மாத இறுதியில் அடுத்த மாதத்திற்கு எடுத்துச் செல்லப்படும் ITCக்கும் எந்த சம்பந்தமும் (Nexus) இருக்கவே முடியாது.

ஆ) சில வணிக நிறுவனங்களில் நூற்றுக்கணக்கான சரக்குகள் உள்ளன. இருப்புச் சரக்கின் அளவு / எண்ணிக்கையை புதிய இணைப்புப் படிவம் V-ல் கொடுக்கத் தேவையில்லை என்றாலும், இருப்புச் சரக்கின் கொள்முதல் மதிப்பை சரியாக மதிப்பீடு செய்து அப்படிவத்தில் தெரிவிக்க ஒவ்வொரு மாத
இறுதியிலும் இருப்புச் சரக்கின் அளவு / எண்ணிக்கை என்ன என்பதை கணக்கெடுத்து அவற்றின் மதிப்பை கணக்கீடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

ஓவ்வொரு மாதமும் இவ்வாறு மாத இறுதிச் சரக்குகளின் விபரத்தை துல்லியமாகக் கணக்கெடுக்க பல நாட்கள் கூட ஆகலாம்; கூடுதலான செலவும் ஏற்படும். வணிகம் வெகுவாக தடைப்படும். இது வணிகர்களுக்கு கூடுதல் சுமை, தேவையற்ற செலவு; வீண் சிரமம்.

இருப்புச் சரக்கின் மதிப்பு ஆண்டு இறுதியில் மட்டும் வருமான வரிச் சட்டத்தின் கீழ் லாபத்தை இறுதி செய்ய கணக்கீடு செய்யப்படுகிறது. வணிகவரித் துறைக்கு இந்த விபரம் தேவையற்றது. எந்த மாநிலத்திலும் இந்தப் படிவம் நடைமுறையில் இல்லை.

இ) மாத இறுதிச் சரக்கின் மதிப்பிற்கு ஈடாக மாத இறுதி உள்ளீட்டு வரி வரவு கண்டிப்பாக இருக்காது என்பதால் வணிகவரி அதிகாரிகள் தங்கள் கற்பனைக்கு ஏற்ப பல விபரங்களைக் கேட்டு அப்பாவி வணிகர்களை துன்புறுத்தலுக்கும், தேவையற்ற சட்ட நடவடிக்கைகளுக்கும் உட்படுத்துவார்கள்.

வணிகத்தை நிம்மதியாக நடத்த முடியாது. இதனால் வணிகர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். அவர்களுக்கு பெரும் பொருட் செலவு ஏற்படும். இணைப்புப் படிவம் V லஞ்ச லாவண்யத்தின் ஊற்றுக் கண்ணாக மாறி விடும்.

ஈ) வணிகவரித் துறை அதிகாரிகளை வணிகர்கள் சந்திக்கவே கூடாது என்பதுதான் VAT வரியின் அடிப்படை நோக்கம். ஆனால் புதிய இணைப்புப் படிவம் V வணிகர்களை வணிகவரி அலுவலகத்திற்கு தொடர்ந்து செல்ல வேண்டிய சூழலை ஏற்படுத்திவிடும். கொள்முதல், விற்பனை விபரங்கள் மற்றும் அடுத்த மாதத்திற்கு எடுத்துச் செல்லப்படும் உள்ளீட்டு வரி வரவு போன்ற விபரங்களை வணிகர்கள் சமர்ப்பிக்கும்.

மாதாந்திர படிவம் I – லிருந்தும், உள்ளீட்டு வரி வரவை adjust செய்த விபரத்தை தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்ட விதி எண் 6(9)-ன் மூலமும் வணிகவரி அதிகாரிகள் அறிந்துகொள்ள முடியும். புதிய படிவம் இணைப்பு V -ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வணிகர்களை வற்புறுத்துவது தேவையற்றது.

எளிமையாக இருந்த மதிப்புக் கூட்டு வரிச்சட்டம் கடுமையானதாகவும், சிக்கல்கள் நிறைந்தவையாகவும், நேர்மையான வணிகர்கள் சோர்வடையக் கூடிய வகையிலும் மாற்றப்பட்டு வருகிறது. இத்தகைய சட்ட திருத்தங்களினால் தமிழகத்தில் வணிக நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்படும். இந்நிலைமை தொடருமானால் தமிழகத்தில் இருந்து வணிகமும், தொழிலும், சட்டம் எளிமையாக அமலாக்கப்படும் பிற மாநிலங்களுக்கு இடம் பெயரக்கூடும்.

எனவே வணிகவரித் துறை அமைச்சர் முன்னிலையில் வணிகவரித் துறை உயரதிகாரிகளும், வணிகப் பிரதிநிதிகளும் பங்கேற்று விவாதிக்கும் கூட்டம் ஒன்றிற்கு விரைவில் ஏற்பாடு செய்து வணிகர்கள் சந்தித்துள்ள கடுமையான பிரச்னைகளுக்குத் தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். மதிப்புக் கூட்டு வரி அமலாக்கத்தை கண்காணிக்க வணிக சங்கப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய உயர்நிலைக் குழு ஒன்றையும் உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.